புது வரவு :
Home » , » உயிரைக் காக்க உயிரைத் தந்தவன்

உயிரைக் காக்க உயிரைத் தந்தவன்

தோழர்.முத்துக்குமார்                                                


தமிழ் ஈழம் என்ற  
வார்த்தையை
இடது செவி கேட்கும்போதெல்லாம்
மரண ஓலம் அதனை                                        
வலது செவியின்னும்
கேட்டுக்கொண்டுதானிருக்கிறது..

குண்டுகள் விழுந்ததென்னவோ
வன்னியிலும் முல்லையிலும்தான்..
தாய் தமிழகத்திலும் கொஞ்சம்
பூமி குலுங்கத்தான் செய்தது.
அதிகமாய் குலுங்கியிருந்தால்
சிங்களவனை விழி பிதுங்க
வைத்திருக்கலாம்...

முல்லைத் தீவிலுள்ள                                     
பிள்ளைத் தமிழின்                                       
உயிர்கள் உருக்குலைவது கண்டு                                       
தாய் தமிழின் அங்கங்கள்                                  
அறுந்து விழுந்து                                      
அல்லோலப்பட்டது உண்மைதான்..
தமிழக அரசு 
குரல் கொடுத்ததென
சொன்னதெல்லாம் பொய்மைதான்..

வீர வணக்கம்

பட்டினியில் வாடிய
புதுக்குடியிருப்பு மக்கள்
வயிற்றில் வாங்கிய
குண்டுகளைத் தின்று
நிரந்தரமாய் பசியாறிய
பரிதாபத்தை பார்த்து
இங்கே இருதயம்
இரண்டாய்த்தான் பிளந்தது..
இந்திய அரசோ
இருதயமே இல்லாமல் கிடந்தது..

கைக்குழந்தைக்கு
கால் உடைந்த பரிதாபம்..
உருப்பெற்ற குழந்தைகள்
உறுப்புக்களை இழந்தனர்.
கருவுற்ற குழந்தைகள்
கருவினிலே கருகினர்;
இந்தியன் என்று 
சொல்பவரெல்லாம்
தொலைக்காட்சியில் இதைப்
பார்த்துக்கொண்டே
மதுபானம் பருகினர்;

தாலாட்டு கேட்டு
தூங்க வேண்டிய பிஞ்சுகள்
துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டு
நிரந்தரமாய் தூங்கிப் போயினர்..

சோறின்றி கிடந்த
தாயின் மார்பை உறிஞ்சிய
குழந்தைக்கு தெரியாமலேயேப் போனது
மார்பில் உறிஞ்சிப் பசியாறியது
பால் அல்ல ரத்தம் என்று..

முப்பது வருட
குண்டுவீச்சில் ஒரு
குடிசையைக்கூட
கைப்பற்ற முடியாத விரக்தியில்
தமிழர்களின் குடியிருப்புகளில்
குண்டுமழை..

தோழர் முத்துக்குமாரும் எனது அறைத் தோழன்
உதவி இயக்குனர் முகிலனும் 

குண்டுமழையில் கருகிய
உயிர்களைக் கண்ட
அயல்நாட்டு தமிழன்
அந்நிய அரசிடம் நியாயம் கேட்டான்..
தாய்த் தமிழனோ
உண்ணாவிரதம் இருந்த
தமிழ் உணர்வாளர்களை
வேடிக்கை மட்டும்தான் பார்த்தான்..

தமிழனைக் கொன்றால்
தமிழ்நாடு கண்டுகொள்ளாதென்று
ராசபக்சேவுக்கும் தெரிந்திருந்தது..

ஓராயிரம் தமிழர்களை
ஓரிடத்தில் ஒன்று திரட்டி
தமிழன் என்கிற 
உணர்வை உசுப்பிவிட
ஒரு லிட்டர் மண்ணெண்ணெயும்
ஒரு முத்துக்குமாரும் தேவைப்பட்டான்..

ஏழுகோடி மக்களையும்
தமிழரென உணரவைக்க
ஏழாயிரம் முத்துக்குமார்களும்
ஏழாயிரம் லிட்டர்
மண்ணெண்ணெயும் தயார்..
நான் தமிழன் என்று
சொல்லிக் கொள்ள
நாம் தயாராயில்லை..


ஏழுகோடி தமிழர்களும்
ஏழுநிமிடங்கள் ஒன்று கூடி
தமிழ் என் இனமென்று என்று
உரக்க கத்தியிருந்தாலே
அவ்வார்த்தைகள்
சிங்கள் செவிகளில்
குண்டாகப் பாய்ந்து வெடித்திருக்கும்..
சிங்களப் படைகள் 
சிதறி ஓடியிருக்கும்..

இப்போதாவது 
நான் தமிழனென 
உரக்க கத்துவோம்..
அங்கே போரினால்
உண்டான காயங்களுக்கு
அந்த சத்தம் மருந்தாகட்டும்..


                                                முத்துக்குமார் பற்றிய பாடல்
ஆளுக்கொரு 
மெழுகுவர்த்தியாவது ஏற்றுவோம்..
தமிழினம் உயிர்வாழ
தன்னுயிரை இழந்த
வீரத்தமிழர்களுக்காக..
தமிழர்களாய்ப் பிறந்ததற்காக
உயிரை இழந்தவர்களுக்காக..
அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்..
இருண்டு கிடக்கும் ஈழத்தில்
கொஞ்சமேனும் ஒளிவீசட்டும்..

வீரத் தமிழன் 
தோழர் முத்துக்குமாருக்கு
வீர வணக்கம்...
----------------------------------------------------------
பின்குறிப்பு:
இன்று வெளியாக வேண்டிய "உயிரைத் தின்று பசியாறு" க்ரைம் தொடர்கதை நாளை வெளியாகும்.

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

20 comments:

  1. எங்கள் சொந்தக் காயங்களோடு
    முத்துக்குமாரையும்..
    செங்கொடியையும்..
    எமக்காய் துடித்தடங்கிய இதயங்களையும்
    சேர்த்து சுமந்து செல்கிறோம்.

    துரோகங்கள் கூடி
    எமது பறவைகளை சாய்த்து விழுத்தியபோது
    நாங்கள் கதறியபோது
    நீங்களும் எரிந்து விழுந்தீர்கள்.

    எந்த மரணங்களாலும்
    காப்பாற்ற முடியாமல் போன நிலத்திலிருந்து
    தோற்றுப்போன நீதியின் கதவுகளை
    எமது குழந்தைகள் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    சாவின் வலியறிந்தவர்களாய் சொல்கிறோம்.
    மனச்சாட்சிகள் மறுதலிக்கப்படுகிற இருண்ட பூமியில்
    மெழுகுதிரிகள் உருகி வெளிச்சங்கள்
    கிடைக்கப் போவதில்லை.

    உயிர் சேர்த்து ஒளி கோர்ப்போம்.

    தீபிகா.

    ReplyDelete
  2. வேதனையையும் ஆதங்கத்தையும் மனதில் பதியும் வண்ணம் வெளிப்படுத்தியுள்ளீர்கள் கவிஞரே! நாம் தமிழனென்று ஒப்புக் கொள்ளவும், குரல் கொடுக்கவும் தயங்காமல் தயாராவோம்! தங்களுடன் சேர்ந்து வீரத் தமிழன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதில் மிகவும் பெருமையடைகிறேன்!

    ReplyDelete
  3. தங்களின் இந்தப்பதிவின் ஒவ்வொரு வரிகளும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டு, தமிழ் உணர்ச்சிகளை ஒவ்வொரு தமிழர்களும், உணரும் வண்ணம் வரையப்பட்டுள்ளது. நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம்.
    எங்கள் வலிகளை
    உங்கள் வரிகள்
    உணர்த்திக் காட்டுகின்றன.

    "சோறின்றி கிடந்த
    தாயின் மார்பை உறிஞ்சிய
    குழந்தைக்கு தெரியாமலேயேப் போனது
    மார்பில் உறிஞ்சிப் பசியாறியது
    பால் அல்ல ரத்தம் என்று..
    "//

    இது உண்மையில் அங்கு பல தடவைகள் நடந்திருக்கிறது.

    "தமிழனைக் கொன்றால்
    தமிழ்நாடு கண்டுகொள்ளாதென்று
    ராசபக்சேவுக்கும் தெரிந்திருந்தது..
    "///

    தமிழ்நாட்டில் கண்டுகொண்டவர்கள் இருந்தார்கள்.ஆனால் அவர்களையும் சிறையடைத்து,கண்டும் காணாதவர்போல் நாற்காலிமோகத்தில் நயவஞ்சகம் புரிந்தவர்கள் ஆட்சியில் இருந்தார்கள்.

    ReplyDelete
  5. தல வடிவமைப்பு எல்லாம் மாறியிருக்கிறது?
    சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  6. முற்றிலும் உண்மைங்க.நெஞ்சை வாள் கொண்டு அறுக்கின்றன.வலிகளும் வேதனையும்.

    ReplyDelete
  7. தீபிகா..

    பின்னூட்டத்தில் தங்கள் கருத்தையும் வலியோடு பகிர்ந்து கொண்டைமைக்கு நன்றி..

    ReplyDelete
  8. கணேஷ்...

    நிச்சயம் தோழர்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..

    ReplyDelete
  9. சுவடுகள்..

    ஆட்சியாளர்களின் பரிதாப பார்வை பட்டிருந்தாலே பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.எல்லாம் முகத்தை மூடிக்கொண்டார்கள்..
    தள மாற்றம் பிடித்ததா மகிழ்ச்சி.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..

    ReplyDelete
  10. காளிதாஸ்..

    உண்மைத் தமிழனுக்கு வலி இருக்கும் தோழர்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  11. வை.கோ..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..

    ReplyDelete
  12. முத்துக்குமார் மறைவுக்கு காரணம் நமது அரசியல் பெருசாலிகளே காரணம். ஒரு நாள் இதற்க்கு அவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும்

    ReplyDelete
  13. //முல்லைத் தீவிலுள்ள
    பிள்ளைத் தமிழின்
    உயிர்கள் உருக்குலைவது கண்டு
    தாய் தமிழின் அங்கங்கள்
    அறுந்து விழுந்து
    அல்லோலப்பட்டது உண்மைதான்//


    ரணம், வலி வரிகளில் - கவிதை வாசித்து முடிக்க முடியவில்லை கண்களில் குளம்.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் வலி நிறைந்த வரிகள்

    ReplyDelete
  15. உறக்கத்தை கலைக்க நெருப்பில் குளித்த தமிழனுக்கு வீரவணக்கம்...

    ReplyDelete
  16. என்றென்றும் தலைவணங்க வேண்டியவர்கள்...

    இவர்கள் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்..

    நாளை விடியும் என்ற நம்பிக்கையில்

    ReplyDelete
  17. முத்துக்குமாரின் தியாகம் வீண் போகாது!

    நினைவேந்தலாக நானும் ஒரு கவிதை
    வெளியிட்டுள்ளேன்! காண்க!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. சகோ, முத்துக்குமாரை கவிதை வடிவில் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி......

    ReplyDelete
  19. பல உயிரைக்காக்க தன்னுயிரைத்தந்த தோழர் முத்துக்குமாருக்கு எனது அஞ்சலி!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com