புது வரவு :

வினோதினி-நடந்தது என்ன?

தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக அவளை யாரும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என நினைத்து பெண்ணின் முகத்தில் முதல் முதலாக திராவிகம் வீசினானே ஒருவன், அவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்திருந்தால் இன்றும் இந்நிலை தொடர்ந்திருக்குமா?..இக்கேள்வி பலர் மனதில் இப்போது எழுகிறது. இதுபோல் எத்தனை நிகழ்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன.
சாதாரணமாக ஒரு மனிதனை அழைத்து இதுக்கு முன்பு இதுபோல் ஏதும் சம்பவம் நடந்திருக்கிறதா என்றால் 'என்னங்க மாசம் ரெண்டு மூணு இப்படி நடக்குது நீங்க பேப்பரே பாக்கிறதில்லையா" என சாதாரணமாக சொல்கிறான்.எவ்வளவு கொடுமையான விசயம் இது. ஆனால் பொதுமக்கள் சாதாரண நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்பதைப் போலத்தானே பேசுகிறார்கள்.ஆமாம், தொடர்ந்து இதுபோல நடந்துகொண்டே இருந்தால் எவ்வளவு பெரிய விசயமும் சாதாரணமாகத்தான் தோன்றும்.அப்படி செய்தித்தாளில் வினோதினியின் பெயரைப் பார்க்கும்போதும் அப்படியே அனைவருக்கும் தோன்றியிருக்கும்.தன்னை காதலிக்க மறுத்ததால் வினோதினியின் மீது திராவகத்தை வீசியிருக்கிறான் சுரேஷ் என்றொரு அயோக்கியன்.

நேற்றுவரை உயிரை மட்டும் கொண்டிருந்த உடல் இன்று உலகைவிட்டு மறைந்துவிட்டது.

யாரந்த வினோதினி?-நடந்தது என்ன?
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.எம்.ஜி.நகர், என்ஜினீயர்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். தனியார் மேல்நிலைப்பள்ளியில் ‘செக்யூரிட்டி’யாக பணியாற்றி வருகிறார்.இவரது மகள் வினோதினி இருபத்து மூன்று வயதாகிறது. பி.டெக் முடித்து விட்டு, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ‘சாப்ட்வேர் என்ஜினீயராக’ வேலை பார்த்து வந்திருக்கிறார்.

 காரைக்கால் அருகே உள்ள திருவேட்டக்குடியை சேர்ந்தவர் இருப்பத்தெட்டு வயதான அப்பு என்கிற சுரேஷ். கட்டிட தொழிலாளி. வினோதினியின் தந்தை ஜெயபாலனின் நண்பர்.அடிக்கடி ஜெயபாலனின் வீட்டுக்கு சுரேஷ் வந்ததால் அவருக்கும், வினோதினிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நம் தந்தையின் நண்பர்தானே என்று வினோதினி வித்தியாசம் பார்க்காமல் அவருடன் சகஜமாக பழகினார். இதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட சுரேஷ், வினோதினி மீது ஆசைப்பட்டதோடு மட்டுமில்லாமல் அவரை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார். இந்த காதல் மற்றும் ஆசையை மனதில் வைத்துக்கொண்டு, நண்பர் ஜெயபாலனின் குடும்பத்துக்கு பண உதவிகள் உள்பட பல்வேறு உதவிகள் செய்தார்.ஆனால், அவரது காதலை வினோதினி ஏற்கவில்லை. இருந்தாலும், சென்னையில் வேலை பார்த்து வந்த வினோதினி மாதம் ஒருமுறை வீட்டுக்கு வந்தபோதெல்லாம், சுரேஷ் அவரை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனாலும் வினோதினி அவரது காதலை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.ஆனாலும் அவரை விட்டு விலகாத சுரேஷ், வினோதினியை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கூறி அவரது பெற்றோரிடம் பெண் கேட்டார். ஆனால், அவர்களும் மறுத்து விட்டனர். இதனால், வினோதினி மீதும், அவரது பெற்றோர் மீதும் சுரேஷ் ஆத்திரம் கொண்டார்.

இந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த நவம்பர் மாதம் வினோதினி காரைக்காலுக்கு சென்றிருக்கிருக்கிறார். தீபாவளியை கொண்டாடி விட்டு, நவம்பர் 14–ந் தேதி இரவு 10.45 மணிக்கு, காரைக்காலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்வரை அவரது தந்தை ஜெயபால், குடும்ப நண்பர் பத்மநாபன் ஆகியோர் அழைத்துக்கொண்டு, காரைக்கால் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழி மறித்த சுரேஷ், வினோதினியைப் பார்த்து, ‘‘எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது’’ என்று கூறி, வினோதினியின் மீது ‘ஆசிட்’ ஊற்றி விட்டு ஓடி இருக்கிறார்இந்த கோர சம்பவத்தில், வினோதினியின் முகம், கழுத்து, கை, மார்பு மற்றும் வயிற்றுப்பகுதி முழுவதும் வெந்து கருகியது. அவரது தந்தைக்கும், குடும்ப நண்பர் பத்மநாபனுக்கும் காயங்கள் ஏற்பட்டன.‘ஆசிட்’ பட்ட வேதனையால் துடித்த வினோதினியை காரைக்காலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, வினோதினியின் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவரது இரண்டு கண்களும் பார்வை இழந்தன.

இந்த நிலையில், வினோதினியின் சிகிச்சைக்கு பணமின்றி தவித்த அவரது பெற்றோருக்கு, அரசு துறையிலிருந்தும், பல்வேறு அமைப்புகளிடம் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் பண உதவிகள் கிடைத்தன.இதைத் தொடர்ந்து, வினோதினி கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அங்கிருந்து அவர் கடந்த மாதம் (ஜனவரி) 28–ந் தேதி சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மீண்டும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு கடந்த 8, 9–ந் தேதிகளில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் 10–ந் தேதி மாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த 3 மாதங்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வந்த வினோதினி நேற்று காலையில் திடீர் என்று மரணம் அடைந்தார்.
இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் கேட்டபோது, ‘‘வினோதினிக்கு நுரையீரலில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டது. எங்களால் முடிந்த அளவு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்’’ என்று கூறினார்கள்.வினோதினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
‘‘என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவனை (சுரேஷ்) சும்மா விடாதீர்கள். நான் எவ்வளவு துடித்தேனோ, அந்த அளவுக்கு என் மீது ஆசிட் வீசிய கொடூரனும் துடிக்க வேண்டும். தூக்கில் போட்டால் கூட உடனே உயிர் போய் விடும். அவன் முகத்திலும் ஆசிட் வீச வேண்டும். அப்போதுதான் அந்த வேதனை அவனுக்கு புரியும். அவனைப்போல், உள்ள மற்றவர்களுக்கும் புரியும்’’ அதை நிறைவேற்றும் பொறுப்பு போலீசாரிடம் தான் உள்ளது என்று அவர் இறப்பதற்கு முன்பு சொன்னது குறிப்பிடத்தக்கது. டாக்டர்களும், நர்சுகளும் அக்கறையோடு பார்த்திருந்தால் அவளை காப்பாற்றி இருக்கலாம்  எனினும் நாங்கள் யார் மீதும் புகார் செய்யப்போவதில்லை என்று ஆட்தங்கப்பட்ட அவரது குடும்பத்தினர். நாங்கள் பண நெருக்கடியில் தவித்தபோது, எங்களுக்கு உதவி புரிந்த அரசியல் தலைவர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் எங்கள் நன்றியை கூறிக்கொள்கிறோம் என்று அவரது குடும்பத்தார் கூறினர்.

வினோதினியின் மீது ஆசிட் வீசிய கட்டித்தொழிலாளி சுரேஷ் மீது காரைக்கால் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.வினோதினி  பரிதாபமாக உயிர் இழந்ததைத் தொடர்ந்து, சுரேஷ் மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.
தொடர்ந்து அன்றாட செய்தித்தாள்களில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது திராவகம் வீச்சு கல்லூரி மாணவி மீது திராவகம் வீச்சு போன்ற செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்தக் குற்றவளிகளுக்கு என்ன தண்டனையை அரசு நிறைவேற்றியது அந்த தண்டையை பொது மக்களுக்கு தெரிவித்தால்தான் மேலும் இது போன்ற தவறுகள் நடைபெறா வண்ணம் இருக்கும்.எந்த தவறும் செய்யாத இளம்பெண்கள் தண்டனைக்குள்ளாகும்போது  குற்றம் செய்த கயவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதித்தால்தான் இதுபோல் இன்னொரு சம்பவம் நடக்காமல் இருக்கும். 

தொடர் பாலியல் பலாத்காரங்கள், திராவக வீச்சுகள், மானபங்ககள் என்று ஆங்காங்கு இளம்பெண்களும் சிறுமிகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.  கடுமையான தண்டனை ஒன்றே இதற்கு தீர்வு என்பது எமது கருத்து.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

11 comments:

  1. வினோதினியின் உறவினர் பேசிய பொது ஒரு விஷயம் சொன்னார்.அந்த சேகர் இந்த பெண்ணின் படிப்புக்கு பணம் கொடுத்ததாக .அவனையறியாமலே அவனுக்கு அந்த பெண்ணின் படிப்பிற்கு கடன் கொடுத்ததால் அவளை அவனுக்கே திருமணம் செய்து கொடுத்துவிடுவார் என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கலாம்.அந்த ஊர் ஜாதி பெரியவரிடம் பஞ்சாயத்து போன பொது அவர் நம்ம ஜாதி பையன்தானே, பையன் நல்லாவும் இருக்கிறான் கல்யாணம் செய்து கொடுத்து விடு என்று சொல்லியிருக்கிறார்.ஆக பையன் மனதில் பெண்ணை சார்ந்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இந்த என்னத்தை வளர்த்திருக்கலாம்.இந்த கோணத்தில் பார்த்தால் பெண் சார்புடையோருக்கும் குற்ற உணர்வு வேண்டும்.

    ReplyDelete
  2. வினோதினி மூன்றாம் ஆளுடன் அதிகமாகப் பழகி இருக்கக் கூடாது. தரம் தாழ்ந்து பழகியதால் வந்த வினை இது.

    இந்த மாதிரி பல நிகழ்வுகளில் பெண்ணின் பேரில் தவறு இருந்திருக்கிறது.

    ReplyDelete
  3. காதலுக்கும் கல்விக்கும் கஷ்டப்பட்டால் வெற்றி நிச்சயமென நீங்கள் சொல்ல தகுதியானவர் என்பதை நானறிவேன்.
    முட்டாள்களுக்கு எப்படி நாம் சொல்ல முடியும் ? வினோதிநியையும் அவரின் குடும்பத்தாரையும் நினைத்து வருத்தமாய் உள்ளது

    ReplyDelete
  4. ஐயா கந்தசாமி அவர்களின் கருத்தை நானும் வழி மொழிகிறேன்

    ReplyDelete
  5. வினோதினி உயிர்விட்ட செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும்போதே, ஹரியானாவில் இரண்டு பள்ளி மாணவிகளின் மீது ஆசிட் வீசப்பட்ட செய்தியையும் கேள்விப்பட நேர்ந்தது. கொடுமையிலும் கொடுமை! :-(

    ReplyDelete
  6. வக்கிர எண்ணங்கள் வளர்ந்து வருவது வேதனைக்குரியது.

    ReplyDelete
  7. ஏன் இந்த சமுதாயச் சீரழிவு?எங்கே தவறு?வீட்டுக்கு வரும் ஒரு நண்பரிடம் பழகியது தவறு என்ற வாதத்தை என்னால் ஏற்க முடியவில்லை!

    ReplyDelete
  8. தங்கள் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  9. எந்த குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைதான் தீர்வு.ஒரு தவறைந் செய்யும் போது உயிர் பயம் ஏற்படவேண்டும்.அதில் எந்தவிதமான தயவும் காட்டக்கூடாது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  10. இதுமாதிரி நடப்பதற்கு பெண்ணைப் பெற்றவர்களும் ஒரு காரணம்தான். ஆரம்பத்திலேயே தடுத்து இருக்கலாம்.

    ReplyDelete
  11. //குட்டன்February 14, 2013 at 5:03 PM
    வீட்டுக்கு வரும் ஒரு நண்பரிடம் பழகியது தவறு என்ற வாதத்தை என்னால் ஏற்க முடியவில்லை!//
    இது சரியான கருத்து.
    ஆசிட் வீசுவதற்க்கு தண்டனை ஜனநாயக சட்டபடி மிக கடுமையாக்கபட வேண்டும்.
    இந்திய பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குருவுக்கு நல்லவனாக்க சிலர் புறப்பட்டது போல் வினோ‌தினிக்கு ஆ‌சி‌ட் ‌வீ‌சியவருக்கு யாரும் ஆதரவாக வராதது ஆறுதல்.
    வினோதினியின் சிகிச்சைக்கு பணமின்றி அவரது பெற்றோர் தவிக்கும் நிலயில் தான் இந்திய அரசு தனது குடிமக்களுக்கு மருத்துவ உதவி செய்கிறது என்பது அறிந்து மிக வருத்தம்.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com