புது வரவு :
Home » , , , » குறும்படம் எடுத்தால் இயக்குனர் ஆகிவிடலாமா?

குறும்படம் எடுத்தால் இயக்குனர் ஆகிவிடலாமா?

குறும்படம் இயக்கியிருந்தால் இன்றைய தமிழ் சினிமாவில் எளிதாக இயக்குனர் ஆகிவிடலாமா என்ற கேள்வி பொதுவாக சினிமா ரசிகர்களிடையே இருந்து வருகிறது. குறும்படம் என்றால் சமூகத்தின் அவல நிலையைச் சொல்லும் களம் என்றே பலரும் அதை ஒரு காலத்தில் புறக்கணித்து வந்தனர்.குறும்படம் என்பது  இலக்கியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பார்ப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்ட படம் என்ற கருத்து இப்போது வெகுவாக மாறியிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒரு குறும்படத்தின் வாயிலாக அறம், அகம், புறம் என எதையும் எடுத்தாள முடியும் என பல குறும்பட இயக்குனர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.


இரண்டரை மணி நேர திரைப்படத்தில் சொல்லக் கூடாத,சொல்ல இயலாத,சொல்லத் தயங்குகிற அனைத்தையும் சர்வசாதாரணமாக சில நிமிடங்களே ஓடும் குறும்படத்தில் சொல்லிவிடமுடிகிறது. வியாபாரம்,விளம்பரம் என எதையும் துணைக்கு அழைத்துக் கொள்ளாமல் தன்னந்தனியாய்ப் பயணித்து எங்கு போய்ச் சேர வேண்டுமோ அங்கு போய்ச் சேர்ந்துவிடுகின்றன சில குறும்படங்கள்.

ஒவ்வொரு குறும்படமும் ஒவ்வொரு சிறுகதையாக இருப்பதனால் பார்ப்பதற்கு பெரிதாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை.சொல்ல வேண்டிய கருத்தை மட்டுமே தாங்கி வருவதால் சில குறும்படங்கள் மனதில் அப்படியே சம்மணம் போட்டு அமர்ந்துவிடுகின்றன.

சமீப காலமாக தமிழில் குறும்படங்கள் அதிகரித்து வருகிறது.அதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்பத்தின் மாபெரும் வளர்ச்சிதான்.இன்றளவில் அனைவரிடமும் காணொளி அலைபேசிகள்தான் உள்ளன.அதன் மூலமே பலர் பல குறும்படங்களை எடுக்கின்றனர்.அந்த ஆவலை அலைபேசிகளே ஏற்படுத்திவிடுகின்றன.அடுத்தக் கட்டமாக தரமான பதிவைத் தேடி மனம் அலைபாய்கிறது.இவ்வாறாக குறும்படங்கள் பல பரிமாணங்களில் வளர்ந்த  வண்ணம் உள்ளன.பல அமைப்புகள் குறும்படம் எடுப்பதற்கான பயிற்சி பட்டறைகளை நடத்தி முறையான ஒளிப்பதிவை கற்றுக்கொடுக்கின்றன. உதாரணமாக நிழல்-பதியம் அமைப்புகள் அதை செவ்வனே செய்து வருகின்றன.

சில குறும்படங்களின் வீச்சு அபரிதமாக இருக்கும்.அவ்வாறான குறும்படங்களை இனங்கண்டு பல அமைப்புகள் பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்கின்றன.பல நாடுகளில் குறும்பட விழாக்கள் நடக்கின்றன.உதாரணமாக இந்த ஆண்டு நார்வே நாட்டில் நடந்த குறும்பட விழாவில் சிறந்த குறும்படமாக இடுக்கண் என்ற படம் தேர்வாகியுள்ளது.சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் விஸ்வநாதன் இயக்கிய 13 நிமிடப் படம் இது.சிறந்த இயக்குனராக தமிழ் இனி குறும்படத்தை இயக்கிய மணி ராம் தேர்வாகியிருக்கிறார்.

தமிழ் சமூகத்தை மாற்ற முயற்சித்திருக்கும் எத்தனையோ குறும்படங்கள் வந்திருக்கின்றன.அனைத்தையும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்று ஆசைப்படுறேன்.தொகுத்த பிறகு அது குறித்து பதிவிடுகிறேன்.

குறும்படம் இயக்கினால் திரைப்படம் இயக்கலாமா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதற்கு பதில் சாத்தியமில்லை என்பதுதான்.ஆனால் இப்போதைய பதில் ஏன் முடியாது? தமிழ் சினிமாவில் படத்தையும் இயக்கலாம்  படத்தை இயக்கி வெற்றியும் பெறலாம் என்பதுதான்.

சரிதான். அதற்குக் காரணம் குறும்பட இயக்குனர்கள் வரிசையாக கோடம்பாக்கத்தில் சாதித்துக்கொண்டிருப்பதுதான்.ஒரு திரைப்படத்தை தனியாக இயக்க வேண்டும் என்றால் ஏதோவொரு இயக்குனரிடத்தில் நான்கைந்து படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி தொழிலை கற்றிருக்க வேண்டும்.இப்படித்தான் 90 சதவீத இயக்குனர்கள் உருவானார்கள்.ஆனால் இன்று நிலை அப்படியில்லை.குறும்படத்தை இயக்கி வெற்றி பெற்று விட்டாலே போதும் எளிதாக பெரும்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துவிடுகிறது என பிரபல திரைப்பட தயாரிப்பு நிர்வாகி ஒருவர் சொல்கிறார்.அதெப்படி பெரும்படத்தை இயக்குவதற்கும் குறும்படத்தை இயக்குவதற்கும் வித்தியாசம் இல்லையா? குறும்பட இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எப்படி கிடைப்பார்? என வினவினால்,''சரிதான் தயாரிப்பாளர் கிடைப்பது கடினம்தான்.. ஆனால் சில குறும்பட இயக்குனர்கள் பழைய தயாரிப்பாளரிடம் கதை சொல்லி வாய்ப்பு கேட்தில்லை.வரும்போதே தயாரிப்பாளரையும் அழைத்துக் கொண்டே வருகின்றனர்.சிலர் தானாகவே படத்தை முழுவதுமாக தயாரிக்கின்றனர்.சிலர் இணை தயாரிப்பாளராகவும் செயல்படுகின்றனர்.பணம் இருந்தால் இயக்கம் தெரியவில்லையென்றாலும் இயக்குனராக முன்னுக்கு வரலாம் என்பதற்கு இன்றளவில் சாதித்த பெரிய இயக்குனர்கள் உதாரணமாக இருக்கிறார்களே"''என்கிறார்.

குறும்பட இயக்குனர்களின் பெரும்படத்திற்கு வியாபார ரீதியாக பிரச்சனைகள் வரும்.இது குறித்து விஜய் அவார்ட்ஸ் அறிமுக இயக்குனருக்கான விருதை பெற்றுக்கொண்ட 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் படத்தை வியாபாரம் செய்ய மிகுந்த சிரமாக இருந்தது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.ஆனால் நிலைமை இப்போது அப்படியில்லை.குறும்பட இயக்குனர்களை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்களும் தயார்..படத்தை வாங்க விநியோகஸ்தர்களும் தயார்..அதற்கு என்ன காரணமென்றால் குறும்பட இயக்குனர்களான 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தை இயக்கிய பாலாஜி மோகன், 'பீட்ஸா' படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் 'சூது கவ்வும்' படத்தை இயக்கிய நலன் குமாரசாமி என வரிசையாய் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதுதான்.குறும்பட இயக்குனர்களின் படம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலை இன்றிருக்கிறது.அந்த வெற்றி வரிசையில் இடம் பெற பல குறும்பட இயக்குனர்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர்கள் பூர்த்தி செய்யட்டும் வெற்றி பெறட்டும்.

இலக்கிய வட்டங்கள் மட்டும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த குறும்படங்களை சாதாரண மக்களும் பார்க்கும் வண்ணம் கொண்டு சேர்த்த பெருமையும், குறும்பட இயக்குனர்களை பெரும்பட இயக்கத்தில் சாதிக்க வைத்த பெருமையும் 'நாளைய இயக்குனர்கள்' நிகழ்ச்சிக்கும் அதை நடத்தும் கலைஞர் தொகைக்காட்சிக்கும் சேரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இப்போது பல குறும்பட இயக்குனர்கள் பெரும்படங்களை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.அந்த வகையில் வலைப்பதிவு நண்பரும் திரைப்படத் துறை நண்பருமான தமிழ்ராஜா சமீபத்தில் ரணகளம் என்றொரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.இன்றளவில் காணாமற்போன, தமிழனின் பாரம்பரிய விளையாட்டான  போர்க்காய்  மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தை மையப்படுத்தியிருக்கிறார். பெரிய படத்தை இயக்குவதற்கு முன்னோட்டமாக இக்குறும்படத்தை இயக்கியிருக்கிறார். விரைவில் பெரும்படத்தை இயக்க வாழ்த்துகள்.


சினிமா விமர்சனங்களை வழங்குவதிலும் கொத்து  புரோட்டாவைக் கொடுத்து சுவைக்க வைப்பதலிலும் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தைப் பெற்று வலைப்பதிவுலகில் வெற்றி நடை போடும் அருமை நண்பர் கேபிள் சங்கர் அவர்கள் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.முன்னதாக சில படங்களில் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் பணியாற்றி, கலகலப்பு படத்தில் இணை வசனகர்த்தாவாகவும், கந்தக் கோட்டை இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'ஈகோ' படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் சில குறும்படங்களையும் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த மாதத்தில் படப்பிடிப்பைத் துவங்கயிருக்கும் கேபிள் சங்கர் அவர்களுக்கு எனது சார்பாகவும் மதுமதி.காம் தளத்தின் சார்பாக வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

4 comments:

 1. கேபிள் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கேபிள் சாருக்கும்.., உங்க நண்பருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நிச்சயம் குறும்படங்களால் ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி பயணிக்கலாம்...

  என்னுடைய படைப்புடனும் சந்திக்கிறேன்

  ReplyDelete
 4. நானும் நிறைய குறும்படங்கள் பார்த்து இருக்கிறேன் கலைஞர் டி . வி ல வந்த உருப்படியான நிகழ்ச்சி அது மட்டும் தான்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com