வள்ளுவக் கவிதை
வசன கவிதை நடையில்
மதுமதி
அறத்துப்பால்
பாயிரவியல்
(கடவுள் வாழ்த்து)
1)
அட்சரங்களின் ஆதி
'அ' தந்த ஒலி..
அண்டத்தின் ஆதி
ஆண்டவன் தந்த ஒளி..
குறள்-1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
--------------------------------------
2)
அறிவில் உயர்ந்தவர்
சான்றோர்தான் காண்..
அவரை வணங்காதான்
கற்ற கல்வியே வீண்..
குறள்-2
கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்..
--------------------------------------
3)
மலர் போன்ற நெஞ்சில்
நிறைந்து நிற்பவனின்
பாதங்களில் வீழ்பவர்
நீண்ட புகழோடு
நிலத்தினில் வாழ்பவர்..
குறள்-3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
----------------------------------------
4)
விருப்பு வெறுப்பில்லா
பெரியோர் வழிகண்டு
நடத்தலே இன்பம்..
அவனை என்றும்
துரத்தாது துன்பம்..
குறள்-4
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
----------------------------------------
5)
கடவுள்
என்பதற்குரிய பொருளை
உள்ளார உணர்ந்தவனைக் கண்டு
துன்பம் தரும் நன்மை தீமைகள்
தூரத்தில் போய் நிற்கும்..
குறள்-5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு..
-------------------------------------------
6)
இறைநெறிக்குட்பட்டு
அய்ம்புலன் ஆசைகளையும்
அடக்கி ஆள்பவன்
நிலத்தில் நிலையாய் வாழ்பவன்..
குறள்-6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்..
--------------------------------------------
7)
இணையில்லா
இறைவனின் அடிகளை
அடைந்தவனைத் தவிர
மற்றோரது மனக்கவலையை
மாற்றுதல் கடினம்..
குறள்-7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.. ----------------------------------------------
மனக்கவலை மாற்றல் அரிது.. ----------------------------------------------
8)
அறக்கடலாய் விளங்கும்
சான்றோரின் அடிகளைப் பற்றி
நடப்பவரைத் தவிர
மற்ற எவர்க்கும்
துன்பக் கடலைத் தாண்டுவது கடினம்..
குறள்-8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது..
9)
-------------------------------------------------
அய்ம்புலனும் இயங்காவிடில்
ஏற்படுவது எந்நிலையோ..
எட்டுவகை குணம்கொண்ட
பகவானின் பாதம் தொட்டு
வணங்காதவனின்
நிலையும் அந்நிலையே..
குறள்-9
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை..
----------------------------------------------------
10)
தலைவனாக
ஏற்றுக்கொண்டவனின்
அடியைப் பற்றி நடப்பவனே
வாழ்க்கையெனும்
பெருங்கடலை கடப்பான்..
மற்றவன் கரையிலேயே கிடப்பான்..
குறள்-10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்..
--------------------------------------------
அன்பின் மதுமதி - வள்ளுவர் குறள் மதுமதியின் வசனக் கவிதையாக ,மலர்ந்திருப்பது கண்டு மகிழ்ந்தேன் - நல்லதொரு சிந்தனை -தொடர்க ......
ReplyDeleteஆண்டவன் - கடவுள் - இறை - இறைவன் - பகவான் என வள்ளுவரின் கருத்தோடு ஒத்துப் போய் எழுதும் போது - பெரியோர் -சான்றோர் - தலைவன் என மற்றொருவரையும் சுட்டிக் காட்டுவது சரியானதா ? ஒன்று இறைவனைப் பற்றி எழுத வேண்டும் - அல்லது ஈரோட்டுச் சிங்கம் பாணியில் எழுத வேண்டும். குழப்பம் வேண்டாமே !
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அருமையான கவிதை.
ReplyDeleteRegards,
Siva
வசன கவிதை நடையில் குறள்கள் ஜொலிக்கின்றன. ''மற்றவன் கரையிலேயே கிடப்பான்..'' என்ற வரிகளை மிகவும் ரசித்தேன்.
ReplyDelete