டி.என்.பி.எஸ்.சி- இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர் கண்டறிதல் பாகம் 19

             இலக்கணக் குறிப்பறிதல்

               (இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர்) 


      வணக்கம் தோழர்களே..உருவகம் உவமைத்தொகை கண்டறிவது எப்படி என்பதை பாகம் 18 ல் பார்த்தோம். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

      இன்றைய பதிவில் இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர் போன்றவற்றை எப்படி கண்டறிவது என்பதைக் காணலாம்.

இரட்டைக்கிளவி:

    ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.

(எ.கா)

சலசல,கலகல

மேற்கண்ட வார்த்தைகளை சல,கல என பிரித்தால் பொருளைத் தராது.எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும்.

அடுக்குத்தொடர்:

    ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.

(எ.கா)

பாம்பு பாம்பு,வருக வருக


         மேற்கண்ட வார்த்தைகளை பாம்பு,வருக என பிரித்தால் பொருளைத் தரும்.எனவே அது அடுக்குத்தொடர் எனப்படும்.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:

ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும்.

(எ.கா)

வாடா மலர்
தேரா மன்னன்
பொய்யா மொழி
பேசா வாய்
சிந்தா மணி

      இதில் வாடா,தேரா,பொய்யா,பேசா.சிந்தா போன்றவை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் ஆகும்.

      'ஆ' எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.எனவே எளிதாக கண்டறியலாம்.

         சரி தோழர்களே.. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

         பதிவை   பகிர்ந்து கொள்ளுங்கள்.படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..

        அடுத்தப் பதிவில் உம்மைத்தொடர்,எண்ணும்மை,உரிச்சொற்றொடர் போன்றவற்றை எப்படி கண்டறிவது எனப் பார்ப்போம்..

டி.என்.பி.எஸ்.சி- உருவகம்,உவமைத்தொகை கண்டறிதல் பாகம் 18

               இலக்கணக் குறிப்பறிதல்

                       (உருவகம்,உவமைத்தொகை)


         வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 17 ல் வியங்கோள் வினைமுற்று, வினையாலணையும் பெயர் போன்றவற்றைப் பார்த்தோம். இன்றைய பதிவில் உவமைத்தொகை,உருவகம் போன்றவற்றை பார்க்கப் போகிறோம்.

உவமைத்தொகை:


       பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்..

(எ.கா) கனிவாய்
              மலரடி

       'கனிவாய்' என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம்.
       எனவே 'கனிவாய்' என்பது உவமைத்தொகை ஆகும்.
       அதேபோல 'மலரடி' என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும்.இதிலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருகிறது.

       பெரும்பாலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வரும்படியே வினாக்கள் அமையும்.

எ.கா

1.மலர்முகம்
2.மலர்விழி
3.மலர்க்கை
4.தாய்மொழி
5.கயல்விழி
6.அன்னைத்தமிழ்

   மேற்கண்டவை அனைத்தும் உவமைத்தொகை ஆகும்.

உருவகம்:

    உவமைத்தொகையை நன்றாகப் புரிந்து கொண்டீர்களா..அப்படியானால் உருவகத்தை புரிந்து கொள்வது மிகச்சுலபம்.

      அதாவது 'மலரடி' என்ற சொல் உவமைத்தொகை என்பதைப் பார்த்தோம்.
அச்சொல்லை திருப்பி எழுதினால் அது உருவகம்.

       'மலரடி' என்ற சொல்லை 'அடிமலர்' என்று மாற்றியமைக்கும் போது உருவகம் ஆகிறது.

     விளக்கம்:

       ஒரு பெண்ணின் முகத்தை  பார்க்கிறீர்கள்..உடனே மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுகிறீர்கள்.இதுவே 'மலர்முகம்'.இது உவமைத் தொகை.

     இன்னும் ஒருபடி மேலே போய்,மலரைப்போன்று முகமில்லை.இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று சொல்வீர்களானால் அது உருவகம்.அதாவது முகமலர்..(புரிதலுக்காகவே இவ்விளக்கம்)

       அவ்வளவுதான் தோழர்களே..இரண்டுக்குமான வித்தியாசத்தை தெரிந்து கொண்டீர்களா..

எடுத்துக்காட்டு:

உவமைத்தொகை   உருவகம
மலர்முகம் முகமலர்
மலர்க்கைகைமலர்
தாய்மொழி மொழித்தாய்
கயல்விழிவிழிகயல்
அன்னைத்தமிழ் தமிழன்னை
மலர்விழிவிழிமலர்


           என்ன தோழர்களே..பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்குமென நினைக்கிறேன். பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்..படிப்பவர்களுக்கு பயன் அளிக்கட்டும்.

(மின் அஞ்சல் மூலம் சந்தேகங்களை கேட்கும் தோழர்களுக்கு நான் கொடுக்கும் விளக்கங்கள் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்) 

         அடுத்த பதிவில் இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர் பற்றி பார்ப்போம்.

நன்றி..மீண்டும் சந்திப்போம்..

 

டி.என்.பி.எஸ்.சி- வியங்கோள் வினைமுற்று,வினையாலணையும் பெயர் கண்டறிதல் பாகம் 17

                  இலக்கண குறிப்பறிதல்


                      (வியங்கோள் வினைமுற்று)

        வணக்கம் தோழர்களே..வினைத்தொகை மற்றும் பண்புத்தொகையை எப்படி கண்டறிவது என்று பாகம் 16 ல் பார்த்தோம் அல்லவா.அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
      
       இன்றைய பதிவில் வினைமுற்று,வியங்கோள் வினைமுற்று மற்றும் வினையாலணையும் பெயரை எப்படி கண்டு பிடிப்பது என்பதை பார்க்கலாம்.

வினைமுற்று என்றால் என்ன?

           முடிவு பெற்ற வினைச்சொல்லே வினைமுற்று ஆகும்.

எ.கா. படித்தான்

            படித்தான் என்றாலேயே ஒருவன் படித்து முடித்துவிட்டான் என்று பொருள்.

            இப்படி ஒரு வினை முற்று பெற்றால் அது வினை முற்று.

           'படித்தான்' என்பதில் 'படித்த' என்பது பெயரெச்சம்  (பார்க்க)
                                                      'படித்து' என்பது வினையெச்சம் (பார்க்க)
                                                      'படித்தான்' எனபது  வினைமுற்று..

          பெயரெச்சமும் வினையெச்சமும் முடிவைத் தராது.'படித்தான்' என்ற வார்த்தை முடிவை பெற்றிருக்கிறது.எனவே அது வினைமுற்று.

          கீழ்க்காண்பவனற்றுள் வினைமுற்றைக் கண்டுபிடி என வினா கேட்டால் விடையாக கொடுக்கப்பட்டிருக்கும் நான்கில் எந்த ஒரு விடை முடிவு பெற்றிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு விடையளியுங்கள்.

         வினைமுற்றின் வகைகளைப் பற்றி இப்போது நாம் பார்க்கப்போவது இல்லை குரூப் 2 ன் போது அவற்றை விரிவாக பார்ப்போம்.

       ஆனால் அடிக்கடி கேட்கப்படும் ஒரு வகை வியங்கோள் வினைமுற்று. எனவே அதை பார்ப்போம்.

வியங்கோள் வினைமுற்று:

       க,இய,இயர் என ஒரு வார்த்தை முடிந்தால் அது வியங்கோள் வினைமுற்று ஆகும்.

       வாழ்த்துதல்,விதித்தல்,வைதல்,வேண்டிக்கொடல் ஆகிய பொருள்களில் வார்த்தைகள் வந்தால் அது வியங்கோள் வினை முற்று ஆகும்.

         பெரும்பாலும் அவ்வார்த்தையின் இறுதி எழுத்து 'க' என்ற எழுத்திலேயே முடியும்.

 (எ.கா) 

  வாழ்க,வீழ்க,செல்க,தருக,வருக,
  வாழிய,வாழியர்,பார்க்க,சிரிக்க

வினையாலணையும் பெயர்:
  
        ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்..

(எ.கா) படித்தவன்,
             கண்டவர்
             சென்றனன்

 எப்படி எளிதில் கண்டறிவது?:

            கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எந்த விடை அவர்,அவன்,அனன் போன்றவற்றில் முடிகிறதோ அதுவே வினையாலணையும் பெயர் என முடிவு. கொள்க.

        சென்ற தேர்வில் கேட்கப்பட்டிருந்த ஒரு வினா:

'காட்சியவர்' என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

அ) காலப்பெயர் ஆ)இடப்பெயர் இ)வினையாலணையும் பெயர் ஈ) பண்புப்பெயர்

          காட்சியவர் என்ற சொல் 'அவர்' என முடிவதால் அதுவே வினையாலணையும் பெயர் ஆகும்..

          வினையாலணையும் பெயரைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை என்றாலும் கூட பாகம் 12 ல் பெயர்சொல் க்ண்டறிவது எப்படி என்பதை தெளிவாக படித்திருந்தாலே காலப்பெயர்,இடப்பெயர்,பண்புப்பெயர் இல்லையென முடிவெடுத்து மீதி இருக்கும் ஒன்றுதான் விடை என முடிவு செய்யலாம்.

       என்ன தோழர்களே.. இன்று பார்த்தவை உங்களுக்கு பயன்படும் என்று நம்புகிறேன்.

         அடுத்தப் பதிவில் உருவகம்,உவமைத்தொகை போன்றவற்றை கண்டறிவது எப்படி என பார்ப்போம்.

         சந்தேகங்களை கருத்துரையில் கேட்கலாம்.
============================================================================
 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.
==========================================================================

டி.என்.பி.எஸ்.சி- வினைத்தொகை,பண்புத்தொகை கண்டறிதல் பாகம் 16

             இலக்கண குறிப்பறிதல்
              (வினைத்தொகை,பண்புத் தொகை)


      முந்தைய பதிவான பாகம் 15 ல் பெயரெச்சம்,வினையெச்சம் போன்றவற்றைப் பார்த்தோம்..

       இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது வினைத்தொகை,பண்புத்தொகை  போன்றவற்றை எப்படி கண்டறிவது என்பதைத்தான்.

 வினைத்தொகை என்றால் என்ன?
     
        மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(எ.கா) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது?

         வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும்.முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும்.இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

       ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும் காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.

         இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.

          ஊறிய காய்-இறந்த காலம்
          ஊறுகின்ற காய்-நிகழ்காலம்
          ஊறும் காய்-எதிர்காலம்

         இப்பொழுது மூன்று காலங்களும் வெளிப்படுகிறது அல்லவா. இதைப்போல கொடுக்கப்பட்ட விடைகளில் எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே வினைத்தொகை என முடிவு கொள்ளுங்கள்..

(எ.கா)

1)படர்கொடி

   படர்ந்த கொடி-இறந்த காலம்
   படர்கின்ற கொடி-நிகழ்காலம்
   படரும் கொடி-எதிர்காலம்

2)சுடுசோறு

   சுட்ட சோறு-இறந்த காலம்
   சுடுகின்ற சோறு-நிகழ்காலம்
   சுடும் சோறு-எதிர்காலம்

3)குடிநீர்
   
   குடித்த நீர்-இறந்த காலம்
   குடிக்கின்ற நீர்-நிகழ்காலம்
   குடிக்கும் நீர்-எதிர்காலம்
        
         கொடுக்கப்பட்டிருக்கிற அனைத்து விடைகளையும் சொல்லி சொல்லிப் பாருங்கள்..முக்காலத்தையும் உணர்த்துகிறதா என்று.ஒரு விடை மட்டும்தான் முக்காலத்தையும் உணர்த்தும்.மூன்று தவறான விடைகள் பெரெச்சமாகவோ வினையெச்சமாகவோ இருக்கலாம்.தவறான விடைகள புறந்தள்ளுவதன் மூலமும் சரியான விடையைக் கண்டு பிடிக்கலாம்.

பண்புத்தொகை என்றால் என்ன?

        ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

 (எ.கா)   செந்தாமரை

        (முன்னதாக பெயர்ச்சொல் வகையறிதலில் பண்புப்பெயரை பற்றி படித்தோம் ஞாபகம் இருக்கிறதா? வேண்டுமானால் அந்த பாகத்தை மீண்டும் ஒருமுறைப் படித்து பண்புப்பெயரை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.)

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

      கொடுக்கப்பட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி  வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக..
        
        (ஒரு வார்த்தையை பிரித்தெழுத தெரிய வேண்டியது அவசியம்.பிரித்தெழுக பகுதியில் உங்களுக்கு ஐந்து வினாக்கள் கேட்கப்படும்..அதை பிறகு பார்ப்போம்)

         'செந்தாமரை' என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை+தாமரை என்று பிரியும்.
      
        'மை' விகுதி தெரிகிறதா..ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால்தான் 'மை' விகுதியைக் கணடறிய முடியும்.

நிறத்தை குறிக்கும் சொற்கள்:

பசுமை,நீலம்,வெண்மை

குணத்தைக் குறிக்கும் சொற்கள்:

நன்மை,தீமை,கொடுமை,பொறாமை

சுவையைக்குறிக்கும் சொற்கள்:

காரம்,புளிப்பு,கசப்பு

வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:

சதுரம்,வட்டம்,நாற்கரம்

 என்ன தோழர்களே..வினைத்தொகை,பண்புத்தொகையை இனி எளிதாக கண்டு பிடித்து விடலாமா..அவ்வளவுதான்..

      அடுத்த பாகத்தில் வியங்கோள் வினைமுற்று,வினையாலணையும் பெயர் போன்றவற்றை எப்படி கண்டறிவது எனக் காண்போம்..

நன்றி..
==========================================================================
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிக்கின்ற தோழர்களுக்கு பயன் அளிக்கட்டும்..
==========================================================================

டி.என்.பி.எஸ்.சி-பெயரெச்சம்,வினையெச்சம் அறிதல்-பாகம் 15

            இலக்கண குறிப்பறிதல்

                  (பெயரெச்சம்,வினையெச்சம்)

         வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பாகம் 14 ல் மேலோட்டமாக பார்த்தோம் அல்லவா..இனி வரும் பதிவுகளில் அதை விரிவாக காண்போம்..

      (தேர்வுக்கு விரைவாக தயார் செய்யும் நோக்கோடு மட்டும் விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது)

       மீண்டும் ஒருமுறை 14 ம் பாகத்தை ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள்.

பெயரெச்சம்:

        ஒரு வினைச்சொல்லானது பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும்.

          (எ.கா)  படித்த மாணவன்,வந்த வாகனம்,தந்த பணம்,கண்ட கனவு,சென்ற நாட்கள்

                மேற்கணடவற்றுள் படித்த,வந்த,தந்த,கண்ட,சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும்.

பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

            படித்த மாணவன்,வந்த வாகனம்,தந்த பணம்,கண்ட கனவு,சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால்.நீங்கள் முதலில் உள்ள  படித்த,வந்த,தந்த,கண்ட,சென்ற போன்றவற்றை கணக்கிட்டுதான் பெயரெச்சம் என எண்ண வேண்டும். அதற்காகத்தான் அவை அடிக் கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

           ஒரு வேளை தந்த,சென்ற என்று மட்டும் கேட்கப்படலாம்

         முதலில் படித்த,வந்த,சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள 'அ' என்னும் சத்தத்தோடு முடியும்..

விளக்கம்:

படித்த- இதன் கடைசி எழுத்து 'த'

'த' என்ற எழுத்தை பிரித்தால் த்+அ என்று பிரியும்..

            இப்படி வார்த்தையின் இறுதியில் 'அ' என்னும் சத்தம் ஒலித்தால் அது பெயரெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

வினையெச்சம்:

           முடிவு பெறாத வினைச்சொல்லே வினையெச்சம் ஆகும்.

 (எ.கா)  படித்து முடித்தான்,வந்து சென்றான்,ஓடி  மறைந்தான்,பாடி முடித்தான்,சென்று வந்தான்.


                மேற்கணடவற்றுள் படித்து,வந்து,ஓடி,பாடி,சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும்.

வினையெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

            படித்து முடித்தான்,வந்து சென்றான்,ஓடி  மறைந்தான்,பாடி முடித்தான்,சென்று வந்தான் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால்.நீங்கள் முதலில் உள்ள  படித்து,வந்து,ஓடி,பாடி,சென்று போன்றவற்றை கணக்கிட்டுதான் அவை வினையெச்சம் என எண்ண வேண்டும். அதற்காகத்தான் அவை அடிக் கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

           ஒரு வேளை தந்து,சென்று என்று மட்டும் கேட்கப்படலாம்


         முதலில் படித்து,வந்து,சென்று போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள 'உ' என்னும் சத்தத்தோடு முடியும்..

விளக்கம்:


படித்து- இதன் கடைசி எழுத்து 'து'


'து' என்ற எழுத்தை பிரித்தால் த்+உ என்று பிரியும்..

       பாடி,ஆடி,ஓடி என்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள் 'இ' சத்தத்தில் முடியும்.

விளக்கம்:

பாடி-இதன் கடைசி எழுத்து 'டி'

 'டி' என்ற எழுத்தைப் பிரித்தால் ட்+இ என்று பிரியும்.

   
            இப்படி வார்த்தையின் இறுதியில் 'உ' மற்றும் 'இ'  என்னும் சத்தம் ஒலித்தால் அது வினையெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

குறிப்பு:

           பெயரெச்சத்தின் வகைகளான தெரிநிலை பெயரெச்சம்,குறிப்பு பெயரெசசம் மற்றும் வினையெச்சத்தின் வகைகளான தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் போன்றவை பெரும்பாலும் குரூப் 4 ல் கேட்கப்படுவதில்லை. எனவே அவற்றை குருப் 2 ன் போது விரிவாக காணலாம்.
=========================================================================-
           சந்தேகம் இருப்பின் கருத்துரைப் பெட்டியில் மறக்காமல் கேட்கவும்
==========================================================================
                                இலக்கண குறிப்பறிதல் தொடரும்..
=========================================================================-

டி.என்.பி.எஸ்.சி-இலக்கண குறிப்பறிவது எப்படி?-பாகம்14

                         இலக்கண குறிப்பறிதல்


        வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம் அல்லவா..இந்தப் பதிவில் இலக்கணக் குறிப்பறிவது எப்படி என பார்ப்போம்..

        இலக்கண குறிப்பறிதல் பகுதியிலிருந்து 5 வினாக்கள் கேட்கப்படும். ஐந்திற்கும் எளிதாக விடையளிக்கலாம்

        இலக்கண குறிப்பு கடுமையான பகுதி என சிலர் சொல்வார்கள்.புரிந்து கொள்ளுதலை பொருத்துதான் இலக்கணம் கடுமையானதா இல்லை எளிமையானதா எனத் தெரியும். இலக்கணத்தை புரிந்து கொண்டால் எல்லாமே எளிதுதான்.

         முந்தைய குரூப் 4 வினாத்தாள்களை வைத்து பார்க்கும்போது எளிமையான வினாக்களே கேட்கப்பட்டுள்ளன.

                                               பெயரெச்சம்
                                               வினையெச்சம்
                                               முற்றெச்சம்
                                               வினைமுற்று
                                               வினைத்தொகை
                                                பண்புத்தொகை
                                               வியங்கோள் வினைமுற்று
                                               வினையாலணையும் பெயர்
                                                உருவகம்
                                                உவமைத்தொகை
                                                ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
                                                இரட்டைக்கிளவி
                                                அடுக்குத்தொடர்
                                                எண்ணும்மை
                                                 உம்மைத்தொகை
                                                 உரிச்சொற்றொடர்

             போன்றவற்றிலிருந்துதான் குரூப் 4 வினாக்கள் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கிறது. குரூப் 2 தேர்விற்கு இன்னும் கூடுதலாக கேட்கப்படும்.

            மேற்கண்டவைகளை நன்றாக தெரிந்து கொண்டாலே போதுமானது. ஏற்கனவே சொன்னதைப் போல தவறான விடைகளை நீக்கிவிட்டு சரியான விடையைக் கண்டுபிடித்துவிடலாம்.

             சில வார்த்தைகளைக் கண்டதும் எளிதாக அதன் இலக்கண குறிப்பைக் கண்டுபிடித்துவிடலாம்.சில வார்த்தைகளை இனம் காணூவது சற்று கடினம்.ஆனாலும் குரூப் 4 ல் அவ்வளவு கடினமான வார்த்தைகளைக் கேட்க மாட்டார்கள்.எனவே மேற்கண்டவற்றை நாம் தெளிவாகப் பார்த்தாலே போதுமானது.

            பொதுத்தமிழ் பகுதியில் கேட்கப்படும் எல்லா வினாக்களுமே பள்ளித்தமிழ் புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன.எனவே தவறாமல் அவற்றை ஒருமுறை தெளிவாக வாசித்துக் கொள்ளுங்கள்.

            ஒவ்வொரு இலக்கணக் குறிப்பிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டால் போதும் எளிமையாக வேறுபடுத்தலாம்.முடிந்தவரை கொடுக்கப்பட்டுள்ள வார்த்தையின் பொருளைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

           சரி தோழர்களே..அடுத்த பதிவில் இலக்கண குறிப்பறிதல் பற்றி தெளிவாக காண்போம்..நன்றி..
==========================================================================

டி.என்.பி.எஸ்.சி - வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி?-பாகம்-13

                வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி?


        வணக்கம் தோழர்களே..பெயர்ச்சொல் வகையறிவது எப்படி என்று பாகம் 12 ல் பார்த்தோம்.அப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறேன்.

         இந்தப் பதிவில் வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதைப் பார்ப்போம்.

         பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டதைப் போல வேர்ச்சொல்லைக் கண்டறிக என ஐந்து வினாக்கள் கேட்கப்படும்.இதில் எளிதாக ஐந்து வினாக்களுக்கும் விடையளிக்கலாம்.

          பகுபத உறுப்பிலக்கணம் படித்திருப்போம்.இன்றும் படித்தவற்றை மறக்காமல் இருந்தால் இன்னும் இது எளிமையாக இருக்கும்.அப்படி மறந்திருந்தாலும் கவலை இல்லை.எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.

வேர்ச்சொல்:

         ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்..

          (எ.கா) பார்

    'பார்' என்பது ஒரு வேர்ச்சொல்.இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.

     அப்படியானால் 'வந்தான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிய முடிகிறதா?

     'வந்தான்' என்பதன் வேர்ச்சொல் 'வா'.

     அவ்வளவுதான்.வார்த்தையைப் பார்த்தவுடனே எளிதாக வேர்ச்சொல்லைக் கண்டறியலாம்.

      இதைப் போலவே ஏதோவொரு வார்த்தையைக் கொடுத்து அதன் வேர்ச்சொல்லைக் கண்டுபிடி என ஐந்து கேள்விகள் கேட்கப்படும்.


மாதிரி வினாக்கள்:

1)'சென்றான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:

    அ)சென்ற ஆ)சென்று இ) செல் ஈ)சென்றனன்

2)பேசினான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:
 
     அ)பேசி ஆ)பேசு இ)பேசிய ஈ)பேசுதல்

           மேற்கண்ட வினாக்களில் விடையைக் கண்டு பிடிக்க முடிகிறதா.. இல்லையெனில் எளிதாக கண்டுபிடிக்க வழி இருக்கிறது..

           முதலில் கொடுத்த சொல்லை நன்றாக வாசியுங்கள்.பிறகு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளையும் வாசியுங்கள்.அதில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி இருக்கிறதோ அந்தச் சொல்லே வேர்ச்சொல் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

          இப்போது கொடுக்கப்பட்டுள்ள  வினாக்களை பாருங்கள்..அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் கட்டளைச் சொல் எதுவென்று தெரிகிறதா?

         ஆமாம்.முதல் வினாவிற்கு விடை 'செல்'.அச்சொல்தான் கட்டளைச்சொல்.
இரண்டாவது வினாவிற்கு விடை 'பேசு'.அச்சொல்தான் கட்டளைச்சொல். இப்போது எளிதாக உள்ளதா..

          மீண்டும் ஒருமுறை சொல்லுகிறேன்.வேர்ச்சொல் என்றாலே கட்டளை பிறப்பிக்கும்படிதான் இருக்கும்.இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

          என்ன தோழர்களே..இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்குமென நினைக்கிறேன்..நன்றி.

               அடுத்தப் பதிவில்  இலக்கண் குறிப்பறிதல் எப்படி என பார்ப்போம்..
==========================================================================

டி.என்.பி.எஸ்.சி-பெயர்ச்சொல் வகையறிதல்-பாகம் 12

          பெயர்ச்சொல் வகையைக் கண்டறிதல்

    ணக்கம் தோழர்களே! பாகம் 11   ஓரெழுத்து ஒரு மொழியைக் கண்டோம்.. இன்றைய பதிவில் பெயர்ச்சொல்லைக் கண்டறிதல் எப்படி என்பதை பார்ப்போம்.

     பொதுத்தமிழ் பகுதியில் பெயர்ச்சொல்லைக் கண்டுபடி என ஐந்து வினாக்கள் கேட்கப்படும்.மிக மிக எளிதாக ஐந்து வினாக்களுக்கும் நாம் விடை அளித்துவிடலாம்..மிக எளிமையான பகுதியும் கூட..

       ஒரு பெயர்ச்சொல்லைக் கொடுத்து அது எந்த வகை பெயர்ச்சொல் என கண்டறிக என்று வினா இருக்கும்..

       இந்தப் பகுதியில் நாம் ஆழமாக படிக்க வேண்டியது இருக்காது அடிப்படையான பெயர்ச்சொல் வகைகளை பார்த்தாலே குரூப் 4 க்கு போதுமானது.குரூப் 2 என்றால் இதில் இன்னும் விரிவாக காண வேண்டியிருக்கும்.எனவே அடிப்படைகளை தெரிந்து கொள்வோம்..
     
        பெயர்ச்சொல் என்றால் என்ன?

ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.அது இடுகுறியாகவோ காரணமாகவோ இருக்கலாம்..

இடுகுறிபெயர்:
           ஒரு பொருளுக்கு எந்த காரணமும் இல்லாமல் இட்டு வழங்கிய பெயரே இடுகுறிப்பெயர்..
        எ.கா: மரம்,மலை,மண்

காரணப்பெயர்:
          ஒரு பொருளுக்கு காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப்பெயர்.
        எ.கா:முக்காலி,நாற்காலி,கருப்பன்,
           
பெயர்ச்சொல்லின் வகைகள்:

          பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.

பொருட்பெயர்

(எ.கா) பணம்,மனிதன்,விலங்கு,மரம்
இடப்பெயர்

          பள்ளி,குளம்,வீதி,நாடு,ஊர்

காலப்பெயர்

 மணி,நாள்,வைகறை,இளவேனில்,சித்திரை
சினைப்பெயர்

           கை,கால்,இலை,காம்பு,காய்,பூ
பண்புப்பெயர்

           வட்டம்,நிறம்,அளவு,சுவை,செம்மை
தொழிற்பெயர்

           எழுதுதல்,ஓடுதல்,பாடுதல்,தைத்தல்

        ஒரு பொருளைக் குறித்து வந்தால் அது பொருட்பெயர்.

        ஒரு இடத்தைக் குறித்து வந்தால் அது இடப்பெயர்.

        ஒரு காலத்தைக் குறித்து வந்தால் அது காலப்பெயர்.

        ஒரு உறுப்பை குறித்து வந்தால் அது சினைப்பெயர்.

        ஒரு பொருளின் பண்பை குறித்து வந்தால் அது பண்புப் பெயர்.

(தொல்லை,மாண்பு,மாட்சி,நன்றி,நன்று,நலம்,நன்னர் போன்ற வார்த்தைகளும் பண்பு பெய்ர்கள் தான் குழப்பம் வேண்டாம்)

        ஒரு தொழிலைக் குறித்து வந்தால் அது தொழிற்பெயர்.

(ஆட்டம்,கொலை,அழுகை,பார்வை,கடவுள்,கோட்பாடு,சாக்காடு போன்றவையும் தொழிற்பெர்கள் தான் குழம்பி விட வேண்டாம்.மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்)


         நிறைய வார்த்தைகளைச் சொல்லி அதன் வகையைக் கண்டு பிடித்து பாருங்கள்..

          சரி தோழர்களே..பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறேன்..

அடுத்த பாகத்தில் வேர்ச்சொல்லை எப்படி கண்டு பிடிப்பது பற்றி காண்போம்..

நன்றி....
==========================================================================

டி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது?-பாகம் 11

          ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்களின் பொருளையும் அது தவிர முந்தைய வினாத்தாள்களில் கேட்கப்பட்ட சில ஓரெழுத்து ஒரு மொழிகளையும் அதற்கான முதன்மையான பொருளையும் கீழே கொடுத்திருக்கிறேன்..ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள பொருளைச் சார்ந்த வார்த்தைகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
       சற்று கடினமான பகுதிதான்..இதை அப்படியே மனப்பாடம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.இதில் 5 வினாக்கள் கேட்கப்படுகின்றன.கீழ்க்கண்ட எழுத்துக்களிலிருந்துதான் கேட்கப்படும்.எனவே தவறாமல் படித்துக் கொள்ளுங்கள்..

                      ஓரெழுத்து ஒருமொழி



எட்டு,அழகு,சிவன்


பசு,ஆன்மா,எருது


'அரை'யின் தமிழ் வடிவம்


ஈதல்,கொடுத்தல்,பறக்கும் பூச்சி


சிவன்,ஆச்சர்யம்,இரண்டு(தமிழ்)


ஊண்,இறைச்சி,உணவு


வினா எழுத்து,ஏழு(தமிழ்)


அம்பு,வினாப் பெருக்கம்,இறுமாப்பு


தலைவன்,அரசன்,வியப்பு,ஆசான்


மகிழ்ச்சி,வியப்பு,மதகுப்பலகை


உலகம்,ஆனந்தம்


கடவுள்,பிரம்மன்,அக்னி,ஒன்று
கா

சோலை,காத்தல்,காவல்
கி

இறைச்சல் ஒலி
கு

பூமி,உலகம்,குற்றம்
கூ

பூமி,உலகம்,கூகை
கை

உறுப்பு,ஒழுக்கம்,சிறகு,ஒப்பனை
கோ

அரசன்,தலைவன்,பசு,இறைவன்
கௌ

கொள்ளு,தீங்கு,பற்று 
சா

சாதல்,இறத்தல்,சோர்தல்
சி/சீ

இகழ்ச்சி,இலக்குமி,வெறுப்பு
சு

விரட்டுதல்,சுகம்,மங்களம்
சே

எருது,சிகப்பு,மரம்
சை

கைப்பொருள்,அருவெருப்பு,ஒலி

தா

 தருதல்,கொடுத்தல்,கேடு
தீ

நெருப்பு,சினம்,தீமை,நரகம்
து

உண்,அசைதல்,உணவு
தூ

வெண்மை,தூய்மை,பகைமை
தே

தெய்வம்,கடவுள்,அருள்
தை

மாதம்,தைத்தல்,அலங்காரம்
நா

நாக்கு,சொ,நடு,அயலர்
நீ

முன்னிலை
நே

அன்பு,அருள்,நேயம்
நை

நைதல்,வருந்துதல்
நொ/நோ

துன்பம்,நோய்


நூறு
பா

பாட்டு,அழகு,பாதுகாப்பு
பி

அழகு,பிறவினை விகுதி
பீ

பெருமரம்,மலம்
பூ

மலர்,பூமி,பிறப்பு
பே

நுரை,மேகம்,அச்சம்
பை

பசுமை,கைப்பை,இளமை(பையன்)
போ

போதல்,செல்லுதல்


சந்திரன்,சிவன்
மா

பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்
மீ

மேலே,உச்சி,ஆகாயம்
மூ

மூப்பு,முதுமை,மூன்று
மே

அன்பு,மேன்மை,மாதம்,மேலே
மை

அஞ்சனம்,கண்மை,இருள்,மலடு
மோ

மோத்தல்,முகர்தல்


தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
யா

யாத்தல்,யாக்கை,ஒரு வகை மரம்


கால் பாகம்
வா

வருதல்,தாவுதல்,உண்டாக்குதல்
வி

அறிவு,நிச்சயம்,ஆகாயம்
வீ

மலர்,விரும்புதல்,பறவை
வை

கூர்மை,வைத்தல்,வைக்கோல்
வௌ

கைப்பற்று,ஒலிக்குறிப்பு,திருகு

டி.என்.பி.எஸ்.சி - ஓரெழுத்து ஒரு மொழி கற்கலாம் - பாகம் - 10

                   ஓரெழுத்து ஒரு மொழி

         சென்ற பாகத்தில் அகர வரிசையில் எழுதுவது எப்படி என்பதை பார்த்தோம்.இன்று பார்க்கப்போவது ஓரெழுத்து ஒரு மொழியைக் கண்டுபிடிப்பது எப்படி?

          பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் நாம் ஏற்கனவே பார்த்தது போல ஓரெழுத்து ஒரு மொழி என்ற பகுதியிலிருந்து 5 வினாக்கள் கேட்கப்படும்.


      
        தமிழில் உள்ள 247 எழுத்துகளில் நன்னூல் சூத்திரப்படி 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனித்த பொருளுண்டு..அவற்றில் ஏதாவது ஐந்து எழுத்துக்களைக் கொடுத்து அதற்கான பொருள் என்ன என்பதைப் போல வினா அமையும்.

           முந்தைய தேர்வுகளில் இந்த 42 எழுத்துக்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட்டன.ஆனால் இப்போது நடைபெறும் தேர்வுகளில் அந்த 42 எழுத்துக்களையும் தாண்டி வினாக்கள் கேட்கப்படுகின்றன.

நன்னூல் சூத்திரப்படி தனிப் பொருளைத் தரும் 42  எழுத்துக்களைக் காண்போம்..

                                                       உயிர் எழுத்துகள்:


                                     ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ


                                     'க' வரிசை:


                                     கா,கூ,கை,கோ


                                     'ச' வரிசை:


                                     சா,சீ,சே,சோ


                                     'த' வரிசை:


                                     தா,தீ,தூ,தே,தை


                                     'ந' வரிசை:


                                      நா,நீ,நே,நை,நோ


                                     'ப' வரிசை:


                                      பா,பூ,பே,பை,போ


                                     'ம' வரிசை:


                                      மா,மீ,மூ,மே,,மை,மோ


                                     'வ' வரிசை:


                                      வா,வீ,வை,வௌ


                                      'ய' வரிசை:


                                       யா

          பெரும்பாலும் நெடில் இனத்தில் வரும்.குறில் இனம் என்று பார்த்தால் உயிர் மெய் எழுத்துக்களான 'நொ' மற்றும் 'து' போன்றவை ..

மேற்கண்ட 42 எழுத்துக்களும்  நன்னூல் குறிப்பிடப்படுபவை.

   சரி தோழர்களே மேற்கண்ட எழுத்துக்களுக்கான பொருளையும் நன்னூலில் குறிப்பிடப்படாத சில ஓரெழுத்து ஒரு மொழிகளையும் நாளைய பதிவில் காணலாம்.

நன்றி..

டி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9

           
அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி

         வணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 க்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை பாகம்-7 ல் பார்த்திருப்பீர்கள்..அதில் 20 வகையான வினாக்கள் கேட்கப்படுகிறது.நாம் ஆரம்பப் பள்ளிகளில் படித்ததுதான். ஆனாலும் அதில் எல்லோருக்கும் சிறு சிறு குழப்பங்கள் வரும்.அதனால் தேர்வில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பதிகம்.எனவே தமிழைப் பொறுத்தவரை 100 வினாக்களுக்கும் சரியான பதிலை எளிதாக எழுதிவிட முடியும்.அனைத்தும் தமிழ் பொழிப்பயிற்சிக்காகத்தான் கேட்கப்படுகின்றன.

            சரி தோழர்களே..தமிழில் எப்படி அனைத்து வினாக்களுக்கும் சரியாய் பதில் அளிக்க,தமிழை நன்றாக புரிந்து கொண்டாலே போதும்.

          வாருங்கள் தோழர்களே..எப்படி எளிதாக தமிழில் மதிப்பெண்கள் பெறுவது என்பதைப் பார்க்கலாம்.

            டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 க்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை பாகம்-7  
 இப்போது எடுத்துக் கொள்ளுங்கள்.முதலில் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி என பார்ப்போம்..


அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி
        
      நான்கு சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும்.அவற்றை அகராதிப்படி வரிசைப் படுத்தி அமைப்பதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் ஆகும்.
   
நிலை -1

முதலில் அ,ஆ,இ,ஈ  என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.

நிலை-2

முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்..

நிலை-3

உயிர் மெய் எழுத்துக்களை க,கா,கி,கீ என்றே வரிசைப் படுத்த வேண்டும்..

குறிப்பு:

 எக்காரணத்தைக் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது..

மாதிரி வினாக்கள்:

நிலை-1

எளிமை,ஊக்கம்,இனிமை,ஆயிரம்

விடை:
ஆயிரம்,இனிமை,ஊக்கம்,எளிமை

நிலை-2

தத்தை,தண்ணீர்,தந்தம்,தங்கை

விடை:

தங்கை,தண்ணீர்,தத்தை,தந்தம்

நிலை-3

கோமாளி,காலை,கலை,கொக்கு

விடை:

கலை,காலை,கொக்கு,கோமாளி

    இதில் சில கேள்விகள் எளிதாகவும் சில கேள்விகள் சற்று கடினமானதாகவும் இருக்கும்.இதில் 5 கேள்விகள் கேட்கப்படும். அனைத்திற்குக்கும் சரியான விடைகளை எழுத வேண்டும் என்று நினைக்கும் தோழர்கள்,இது போல நிறைய வினாக்களுக்கு விடை எழுதி பழகிக் கொள்ளுங்கள்..

குறிப்பு:

       அகர வரிசை பிழையின்று சீர்படுத்த 'அ' முதல் 'ன்' வரையிலான தமிழ் அரிச்சுவடியை மீண்டும் ஒருமுறை நன்றாக வாசித்துக் கொள்ளுங்கள்..

அடுத்தப் பதிவில் ஓரெழுத்து ஒரு மொழி பற்றி பார்ப்போம்..
=========================================================================
டி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி-பாகம்-10 

உயிரைத் தின்று பசியாறு - அத்தியாயம் - 7

          மணி ஒன்பது ஐம்பது.
          கல்லூரி மாணவிகளால் கர்ப்பமாக்கப்பட்ட அந்த மாநகரப் பேருந்து, கடற்கரைச் சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
"ஏய் பூஜா,ஏண்டி ஒரு மாதிரி இருக்கே..?உடம்பேதும் சரியில்லையா..?
         தோழி சரிதா கேட்க இல்லை என்பதைப் போல தலையாட்டிய பூஜா கடற்கரையையே வெறித்தபடி இருந்தாள்.(இந்த பூஜா யார் என்று தெரிகிறதா.. முதல் அத்தியாயத்தில் பார்த்தோமே அலெக்ஸின் காதலி பூஜா அவளேதான்)
"ஏய் என்னடி இப்படி பீச்சையே வெறிச்சு பாத்துட்டு வரே..என்னாச்சு உனக்கு"
"ஒண்ணுமில்ல சரிதா..சும்மாதான்"
"சரி உனக்கு விசயம் தெரியுமா"
"என்ன"
         என்று கேட்டபடி சரிதாவை பார்த்தாள் பூஜா.
"நேத்து ராத்திரி யாரோ ஒருத்தனை பீச்சுல வச்சு கொலை பண்ணிட்டாங்களாம்"
            சரிதா சொல்ல பூஜாவுக்கு குப்பென வேர்த்தது.அதைக் காட்டிக் கொள்ளாதவாறு,
"ம்..நானும் பேப்பர்ல படிச்சேன்" என்றாள்.
           கல்லூரி நிறுத்தத்தில் பேருந்து நின்று தன் கர்ப்பத்தைக் கலைத்தது.
வியர்த்துக் கொட்டிய முகத்தை தன் கர்ச்சீப்பால் துடைத்தபடியே  இருந்த பூஜாவைப் பார்த்த சாரதா,
"பூஜா..இன்னைக்கு உன் முகமே சரியில்லையே"
           என்று சாரதா கேட்க,ஏதோ சொல்ல எத்தனித்த பூஜாவின் கையிலிருந்த புத்தகம் தவறி விழ குனிந்து எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.இரண்டடி நடந்தவள் அப்படியே நின்றாள்.
           அந்த புத்தகத்தை பரபரப்புடன் மீண்டும் புரட்டிப் பார்த்தாள்..அவளுக்குள் குப்பென்று வேர்த்தது.
"ஏய் என்னடி ஆச்சு உனக்கு..புக்க கீழே போடுறே..அதை எடுத்து டென்சனா புரட்டி புரட்டிப் பாக்குற"
"ஒண்ணுமில்ல சாரதா அவசரமா ஒரு போன் பண்ணனும் உன்னோட மொபைல கொஞ்சம் கொடேன்"
 "இந்தா.. பேசிட்டு வா நான் போறேன்"
            என்ற படி தன் செல்போனை கொடுத்துவிட்டு சாரதா நகர,அவசர அவசரமாக எண்களைத் தட்டினாள்.உடனே தொடர்பு கிடைக்க,
"அலெக்ஸ் நான் பூஜா"
           பதற்றமாய் பேசினாள்.
"சொல்லு பூஜா ஏன் பதட்டமா பேசுற?
"அலெக்ஸ் என்னோட நோட் புக்ல வச்சிருந்த என்னோட காலேஜ் ஐடென்டி கார்டை காணோம்"
"அதுக்கென்ன இப்ப..இதுக்கு ஏன் இப்படி பதட்டப்படுறே..வீட்டுல எங்கேயாவது விட்டிருப்பே.."
          அலெக்ஸ் சொல்ல மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்த பூஜா,
"இல்லை அலெக்ஸ்..நேத்து பீச்சுல பிணத்து மேல விழுந்தேனே.அப்போ என் ஐடி கார்டும் அங்கே விழுந்திருக்குமோன்னு பயமா இருக்கு"
           என்று மெதுவான குரலில் சொல்ல,இப்போது பதட்டம் அவனையும் பற்றிக் கொணடது.
"இ..இ.ல்ல பூஜா.. வேற எங்கேயாவது விழுந்திருக்கும்.,.ந..நல்லா யோசிச்சு பாரு"
"இல்ல அலெக்ஸ் வேற எங்கேயும் விழ வாய்ப்பே இல்ல..நான் காலேஜ் வாசல்ல நிக்கிறேன்..நீ கொஞ்சம் வாயேன்"
          சொல்லிவிட்டு இணைப்பை துண்டிக்க சரிதா வந்தாள்.
"ஏய் பூஜா..உன்னைத் தேடி உங்க மாமா வந்திருக்கார்"
"மாமாவா"
           என்று நெற்றியை சுருக்கிய பூஜா,
'என்னை கல்லூரியில் தேடி வரும் அளவிற்கு மாமா யார்' என யோசித்துவிட்டு,
"எங்கே இருக்கார்"  எனக் கேட்டாள்.
 "அதோ அந்த அரச மரத்தடியில நிக்கிறார்..போய் பார்த்துட்டு சீக்க்ரம் வா"
        என்று சொல்லிவிட்டு சாரதா நகர அந்தப் பக்கமாய்ப் பார்த்தாள். அங்கே வாட்டசாட்டமாய் ஆறடி உயரத்தில்  சூர்யா நின்றிருந்தான்.
'இவரை இதற்கு முன்பு பார்த்ததில்லையே'
         என்று யோசித்துக்கொண்டே இவள் நின்றிருக்க, அவளது அருகில் சூர்யா வந்தான்.
"நீங்க பூஜா தானே"
         அவனாகவே கேட்க,ஆமாம் என்பதைப் போல தலையாட்டிய பூஜா,
"நீ..ங்க" என்றாள்.
"நான் போலீஸ்"
           சூர்யா சொன்ன வினாடிதான் பாக்கி அவள் உடலெங்கிலும் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.
"உங்ககிட்ட ஒரு விசாரணைக்காக வந்திருக்கேன்..காலேஜ விட்டு வெளியில போயிடலாமா''
"இ..ல்ல .எ..ங்கி.ட்ட என்ன விசாரணை..என்னால வர முடியாது..க்ளாஸூக்கு டைம் ஆச்சு"
"அப்ப நீங்க க்ளாஸ்க்கு போங்க..நான் உங்க பிரின்ஸ்பால் கிட்ட சொல்லிட்டே உங்களை கூட்டிட்டு போறேன்"
           அவள் பேசவில்லை.சுற்றும் முற்றும் பார்த்தாள்.
"வாங்க"
         என்று சொன்ன சூர்யா, கல்லூரியை விட்டு வெளியேறி கடற்கரைச் சாலையைக் கடந்து பத்தடி நடந்து ஒரு புங்கமரத்தடியில் நிற்க,பூஜாவும் நின்றாள்.
"பூஜா உங்களுக்கு தினேஷ்ன்னு யாரையாவது தெரியுமா"
"தெ..ரியாது சார்"
"பொய் சொல்லவேண்டாம்"
"இ..ல்ல சார் எனக்கு அப்படி யாரையும் தெரியாது"
"சரி நீங்க லவ் பண்றீங்களா?"
"இ..ல்ல சார்"


"பொய் சொன்னா ஸ்டேஷன் போக வேண்டி வரும் பரவாயில்லையா"
"-----------------------------------------------------------------"
"சரி உங்க காலேஜ் ஐடி கார்டை கொடுங்க"
 "அது..தொ..லைஞ்சு போயிடுச்சு"
"எப்ப தொலைஞ்சது..எப்படி தொலைஞ்சது"
"....................................................................................................."
           அவளிடம் பதிலில்லை.
"சரி நேத்து நைட் ஏழு மணிக்கு எங்க இருந்தீங்க?
"பீச்சுல"
"ம் ..இப்பத்தான் உண்மை வருது"
".............................................................................."
"நேத்து பீச்சுல தொலைஞ்சிடுச்சு அப்படித்தானே "
"ஆ..மா சார்"
        என்றவளின் கண்களில் பயத்தைப் பார்த்தான் சூர்யா.(ஆமா.. யாருய்யா இந்த சூர்யான்னு யோசிக்கிறீங்களா..சரிதான்..ராஜேஷ்குமாருக்கு ஒரு விவேக்,சுபாவுக்கு ஒரு நரேன்,பி.கே.பி க்கு ஒரு பரத் இந்த வரிசையில மதுமதிக்கு சூர்யான்னு "மாலைமதி"யில ஆரம்பிச்சேன்..வேற வழியில்லாமா இன்னும் பயன்படுத்துறேன்)
 "சரி.பீச்சுல யார் யார் இருந்தீங்க?"
"பிரெண்ட்ஸ்களோட இருந்தேன்"
"அப்படியா..அப்ப அவுங்களையும் கூப்பிட்டு விசாரிக்கலாமா?"
"வே..ண்டாம் வேண்டாம் சார்"
"------------------------------------------------------"
                பூஜா மௌனம் காத்தாள்.
"உங்களையும் உங்க லவ்வரையும் நேத்து நைட் ஏழுமணிக்கு பீச்சுல பாத்ததா  ரவுண்ட்ஸ் வந்த போலீஸ் சொல்லுதே"
               பூஜா எச்சிலை மட்டுமே விழுங்கினாள் பேச்சில்லை.
"என்ன"
              சூர்யாவின் குரலில் கோபத்தை உணர்ந்தாள்.
"ஆமா சார்"
"உங்க காதலரோட பேரென்ன"
"அ..லெக்ஸ் சார்"
"அவருக்கு வேற பேரு ஏதாவது"
"இல்ல சார் அலெக்ஸ் மட்டும்தான்"
"சரி.நீங்க பீச்சுல இருந்து எத்தனை மணிக்கு கிளம்பினீங்க"
"நான் ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிட்டோம் சார்"
               பொய் சொன்னாள்.
"நீங்க கிளம்பிட்டீங்க உங்க காதலர்"
"அவர் அதுக்கப்புறம் தான் சார் கிளம்பினார்"
              மீண்டும் பொய் சொன்னார்.
"அதுக்கப்புறம் அவரை பாத்திங்களா..பேசினீங்களா?"
"இல்ல சார்"
              மீண்டும் பொய் சொன்னார்.சூர்யா நான்கைந்து வினாடிகள் யோசித்து விட்டு பின்பு சொன்னார்.
"பூஜா நான் சொல்றத கேட்டு அதிர்ச்சியாகக்கூடாது"
              என்று சொன்னவனை மிரட்சியாகப் பார்த்தாள் பூஜா.
"யெஸ் உங்க காதலர் கொலை செய்யப்பட்டிருக்கார்'
             சூர்யா சொல்லிக்கூட முடிக்கவில்லை..இடைமறித்த பூஜா,
"நோ......"என்றாள்.
"ஸாரி பூஜா..உங்க காதலர் கொலை செய்யப்பட்டிருக்கார்"
"இல்ல சார் இல்லவே இல்ல"
              என்று பூஜா சொல்ல சூர்யாவை செல்போன் அழைத்தது.எதிர் முனையில்  பீச் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அருள்மதி.
"சொல்லுங்க அருள்மதி"
"ஸார் அந்தப் பொண்ணைப் பாத்துட்டீங்களா?
"பேசிட்டிருக்கேன்..நீங்க குரோம்பேட்டையில இருக்கிற அவனோட பேக்டரிக்கு போங்க நான் இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வந்துடுறேன்."
               சொல்லிவிட்டு போனை அணைத்த சூர்யா பூஜாவைப் பார்த்தான்.அவள் இன்னமும் மிரண்டு போய்தான் இருந்தாள்.
"பூஜா..நீங்க உங்க காதலரை விட்டு பிரிஞ்சு போனதுக்கப்புறம் அவரை யாரோ கொலை பண்ணியிருக்காங்கன்னு முதல்ல நாங்க சந்தேகப்படுறோம்."
          சொன்ன  சூர்யா அவளைப் பார்த்தான். அவள் பேசவில்லை.அவனே தொடர்ந்தான்.
"இன்னொன்னு.., நீங்க அங்க இருக்கும்போது கூட கொலை முயற்சி நடந்திருக்கலாம்..நீங்க பயந்து போய் அங்கிருந்து போயிருக்கலாம்..இதுல எது சரின்னு நீங்கதான் சொல்லனும்"
"இ..ல்ல சார்.... இல்ல ..என்னோட காதலர் கொலைசெய்யப்படலை"
"என்ன சொல்றீங்க..உங்க காதலர்  கொலைசெய்யப்படலையா"
"ஆமா சார்..அதோ அங்கே நிக்கிறாரே அலெக்ஸ். அவர் தான் என்னோட காதலர்"
          அவள் சுட்டிக் காட்டவே,அதுவரை அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த அலெக்ஸ் இவர்களிடம் வந்தான்.அவனை அவன் அறிமுகப்படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிமுடித்தான்.
"அப்ப போலீஸுக்கு தகவல் கொடுத்தது நீங்கதானா"
"ஆமா சார்"
                என்றான் அலெக்ஸ்.
"நீங்க ரெண்டு பேரு பீச்சுக்கு எத்தனை மணிக்கு வந்தீங்க"
"ஏழு மணிக்கு வந்திட்டு எட்டு மணிக்கு கிளம்பிட்டோம் சார்"
"ஏதாவது அலறல் சத்தம் கேட்டுச்சா?"
"இல்ல சார்"
                அலெக்ஸ் சொல்ல,யோசித்த சூர்யா தன் பேண்ட் பாக்கெட்டில்  கையை விட்டான்.
"பூஜா..இந்தாங்க உங்க ஐடி கார்டு..இனிமே எப்பவும் கவனமா இருங்க. மறுபடியும் தேவைபட்டா உங்களை வந்து நான் சந்திக்கிறேன்.அலெக்ஸ் உங்களயும் தான் எப்ப வேணுமோ அப்ப கூப்பிடுவேன் தவறாம வரணும் சரியா"
"சரி சார்"
"சரி உங்க ரெண்டு பேரோட வீட்டு அட்ரஸ எழுதி கொடுத்துட்டு போங்க"
               சூர்யா சொல்ல் அலெக்ஸ் எழுதினான்.பூஜா எழுதவில்லை.
"இதுல பயந்துக்க ஒண்ணுமில்லம்மா..தாராளமா நீங்க எழுதி கொடுக்கலாம்.உங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டோம்"
               அவன் சொல்ல அவளும் எழுதிக் கொடுத்தாள்.
"இந்த கேஸை முடிக்க உங்க ஒத்துழைப்பு ரொம்ப முக்கியம்"
               சொன்ன சூர்யா ஓரமாய் நிறுத்தியிருந்த தனது ஜீப்பை நோக்கிப் போக     பூஜாவின் "லப்" "டப்" ஓசை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
=========================================================================
                                                                                                  (இன்னும் அதிகரிக்கும்)

Ads 468x60px

Featured Posts

Sponsored by

மேற்காணும் படைப்புகள் முறையான பதிப்புரிமை பெற்றது இதை என் பெயரோ என் வலைப்பூவின் பெயரோ இல்லாமல் பயன்படுத்தக்கூடாது.. Powered by Blogger.

Advertisement

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தூரிகையின் தூறல் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger