புது வரவு :
Home » , , , , , » இப்படி தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா?

இப்படி தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா?

                                                                                                தமிழ்மண நட்சத்திர இடுகை -7           
      திவு எழுத வந்த நாள் முதல் எனக்குள் அவ்வப்போது எழுந்து பிறகு காணாமற்போகும் வினாக்கள்தான் இவை..பதிவிற்கு எதிர்மறையான தலைப்பு அவசியமா? சம்பந்தமில்லாத தலைப்பு அவசியமா? சர்ச்சையான தலைப்பு அவசியமா?

          மேற்கண்டவை அனைத்தும் ஒரு எல்லையை மீறி தொடர்வதால் இதை ஒரு பதிவாகவே இடுகிறேன்.

பதிவிற்கு எதிர்மறையான தலைப்பு அவசியமா?

           எதிர்மறையான தலைப்புகள் கடந்த மாதத்தில் அதிக ஹிட்சுகளைப் பெற்றதை அனைவரும் அறிவோம்.ஆனால் அப்படி தலைப்பிட்டால்தான் அதிக பேரை பதிவு சென்றடையும் என்ற கோணத்தில் யோசிப்பது சரியா? முறையானதா? யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.என்ன தலைப்பு வைத்தாலும் நமது தளத்தை பின் தொடரும் தோழர்கள் வந்து கருத்திட்டு வாக்கிட்டு செல்வது என்பது உறுதியானது.ஏனெனில் அது பதிவுலகில் உள்ள தனிப்பட்ட நட்பைச் சார்ந்தது.ஒரு பதிவின் தலைப்பைப் பார்த்தே தளத்திற்கு வாசகர்கள் வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உணமை.ஆனால் பதிந்த பதிவிற்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லையென்றாலோ அல்லது தலைப்பு எதிர்மறையாக இருந்தாலோ வாசகர்கள் எரிச்சல் அடைவார்கள் என்பதை மறக்க வேண்டாம் இது போல மீண்டும் தலைப்பிட்டு நாம் பதிவெழுதினால் வாசகர்கள் நம் தளத்திற்கு வர யோசிப்பார்கள்.ஏன் சுவாரசியத்திற்காகவும் அதிக பேரை சென்றடைவதற்காகவும் இவ்வாறான தலைப்புகள் வைப்பது தவறில்லையே என கேட்கலாம்.சுவாரசியம் என்பது நமக்கான பதிவுலக தோழர்களுக்கு இருக்குமே தவிர புதிதாய் வாசிக்கும் வாசகனுக்கு இருக்காது.மாறாக நம் மீதோ தளத்தின் மீதோ உள்ள நம்பிக்கையை பொதுவான வாசகன் இழந்துவிடுவான்.நாளை ஒரு முக்கியமான, உண்மையான செய்தியைப் பகிரும்போது கூட அதை வாசிக்கவும் வரமாட்டான்.அதை நம்பவும் மாட்டான்.

           சென்னை பதிவர் சந்திப்பை பற்றி கிட்டத்தட்ட இதுவரை 100 தலைப்புகளுக்கு மேல் பதிவுகள் வெளிவந்திருக்கின்றன.ஆனால் அதில் 80 பதிவுகளுக்கு மேல் எதிர்மறையான தலைப்புகள்தான் இடப்பட்டிருந்தன்.இதில் பதிந்த செய்தி அனைவரையும் சென்றடையட்டும் என்பதைக்காட்டிலும் நம் தளத்திற்கு அதிக ஹிட்ஸ் கிடைக்கட்டும் என்ற எண்ணமே அதிகமாயிருந்தது. பதிவிற்குள்ளே சந்திப்பை பற்றி வரிக்கு வரி புகழ்ந்திருந்தாலும் தலைப்பு அதற்கு எதிர்மறையாகத்தான் இருந்தன.உள்ளே என்ன சொல்கிறோம் என்பதை விட தலைப்பில் என்ன சொல்கிறோம் என்பதே முக்கியம்.ஏனென்றால் பெரும்பானோர் தலைப்புச் செய்திகளை மட்டுமே வாசித்துவிட்டு நாட்டு நடப்புகளை தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். உதாரணமாக தற்போது நான் எழுதும் டி.என்.பி.எஸ்.சி பதிவுகளை பெரும்பாலானோர் விரும்பி வாசித்து வருகிறார்கள்..இன்னும் ஹிட்ஸ் கிடைக்கும் என்பதற்காக "இந்த மாதம் நடக்கவிருக்கும் வி.ஏ.ஓ தேர்வுத்தாளும் அவுட்" என்று தலைப்பு வைத்துவிட்டு உள்ளே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அப்படி நடக்காமல் இருக்கட்டும் என்று எழுதினால் என்னாவாகும்? நிறைய பேர் வருவார்கள்..ஆனால் அவர்கள் திரும்ப நம் தளத்திற்கு வருவார்களா?மாட்டார்கள் ஏனெனில் நம்பகத்தன்மை போய்விடுகிறது.(என்ன எழுதினாலும் வாக்கிடவோ கருத்திடவோ நட்பு வட்டம் வரத்தான் செய்யும்)

நம்ம பதிவுக்கும் சம்பந்தமில்லாம தலைப்பை வைக்க வேண்டியதுதான்


பதிவுக்கு சம்பந்தமில்லாத தலைப்பு

           கவர்ச்சியான ஏதோ ஒரு தலைப்பை வைத்துவிட்டு அதற்கு துளியும் சம்பந்தமில்லாத ஏதோவொரு செய்தியை பதிவிட்டு பிறகு அதை முழுவதையும் வாசித்துவிட்டு தலைப்பை சம்பந்தப்படுத்தி ஓரிரு வரிகள் அதில் சேர்த்து எழுதி அதை வெளியிடுவது பெரும்பாலும் அதிகரித்துவிட்டது.தலைப்பின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு வந்து வாசிக்கும் வாசகர்கள் எரிச்சலுடனே திரும்பி செல்கிறார்கள் என்பதற்கு மாற்றுக்கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.ஒரு பதிவரின் ஒரு பதிவு ஒரு வாசகனை திருப்தி படுத்திவிட்டால் அவன் நாம் பதிவிடும் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பான். இப்படித்தான் ஒரு தளத்திற்கு குறிப்பிட்ட வாசகர் வட்டம் உருவாகு.மாறாக இப்படியான தலைப்பிட்டு எழுதினால் உள்ளே என்னதான் அற்புதமாக எழுதியிருந்தாலும் வருகிறவர்கள் பதிவிற்கும் தலைப்பிற்கும் சம்பந்தமில்லை என்று அறிந்த உடனேயே தளத்தைவிட்டு வெளியேறிவிடுவார்கள்.இந்த பதிவிற்கு ஒரு மணிநேரத்தில் 1000 ஹிட்ஸ் கிடைத்திருக்கிறது என மகிழ்ச்சியில் இருப்போம்.ஆனால் அதில் 100 பேரே வாசித்திருப்பார்கள் மீதி பேர் வந்தவுடன் திரும்பிச் சென்றவர்கள்தான். இன்று இடும் பதிவை வாசிக்க மட்டும் வாசகர்கள் வந்தால் போதாது தளத்திற்கு என்று ஒரு வாசகர் வட்டம் தேவையெனில் சம்பந்தமில்லாத தலைப்பை வைப்பதை தவிர்க்கலாம்..

தலைப்பில் தாக்குதல் நடத்தலாமா?

          முதலில் தாக்குதல் என்பதே தேவையில்லாதது.சில தலைப்புகள் சண்டைக்கு வா என்பதைப் போலவே இருக்கும்.உள்ளே சென்றால் பதிவை வாசிக்க 10 நிமிடம் ஆகிறதென்றால் பின்னூட்டங்களை வாசிக்க மணிநேரம் ஆகின்றது.ஏனெனில் அங்கே என்ன எதிர்பார்த்து ஒருவன் அந்த பதிவிற்கு வந்தானோ அதை உறுதிப் படுத்தும் வகையில் பின்னூட்ட யுத்தம் அங்கே நடந்து கொண்டிருக்கும்.அங்கே ஆரோக்கியமான விவாதங்கள் எவரும் முன் வைப்பதில்லை.நீயா? நானா? என்ற ரீதியில்தான் பின்னூட்டங்கள்.இது தனி மனித தாக்குதலாக இருந்தாலும் சரி இனம்,மதம் சார்ந்த தாக்குதல்கள் இருந்தாலும் சரி இந்நிலையே நீடிக்கிறது.இது பதிவுல சம்பந்தப்பட்ட நட்பு வட்டம் மற்றும் எதிர் வட்டம் சம்பந்தப்பட்டது.இதனால் பொதுவான வாசகர்கள் பாதிப்படைகிறார்கள் என்பது உண்மையே.இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவிடலாம் என்றோரு திட்டமிருக்கிறது.

சர்ச்சைக்குரிய தலைப்புகள்

          சமுதாயத்தில் நடந்த சர்ச்சைக்குரிய பிரச்சனையை பதிவின் மூலம் வெளிப்படுத்த சர்ச்சைக்குரிய தலைப்பை வைப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால் பதிவுலகில் சர்ச்சையைக் கிளப்பவேண்டும் என்ற ரீதியிலும் தலைப்புகள் இடப்படுகின்றன. தலைப்போடு அவரிட்ட பதிவும் சர்ச்சைக்கு உள்ளாகிறது.மற்ற தோழர்கள் இட்ட பின்னூட்டங்களும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன.ஒரு கட்டத்தில் அந்த பதிவையே வேறு வழியில்லாம் அழிக்க வேண்டியதாகிவிடுகிறது.கிளப்பிய சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படாமல் போய்விடுகிறது.

            இப்படியான தலைப்புகளை பதிவுகளுக்கு வைக்காதீர்கள் என்று பணிவோடு கேட்டுக்கொள்ளவோ, வைக்கக்கூடாது என்று கண்டிக்கவோ இந்தப்பதிவு இல்லை. தலைப்பை எப்படி வைப்பது என்பதை முடிவு செய்வது அவரவர் விருப்பம்.இப்படியான தலைப்புகளை தவிர்த்தால் பதிவுலகம் ஆரோகியமான நிலையை எட்டும் என்பது மட்டும் என்னுடைய கருத்து ஆகும்.நான் ஒரு வாசகனாக என் மனதில் வெளிப்பட்டதை பதிவனாக இங்கே பதிந்திருக்கிறேன்.

            பதிவுலகில் பலரும் அறியப்பட்ட பதிவர்கள் இவ்வாறாக தலைப்பிடுவதைப் பார்த்தே புதிதாக எழுத ஆரம்பித்திருப்பவர்களும் இப்படியான தலைப்பை இட்டு வருகிறார்கள்..


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

74 comments:

 1. உங்களது கருத்தை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்!

  ReplyDelete
 2. உண்மை நண்பரே..நல்ல கருத்து

  ReplyDelete
 3. உண்மைதான் நண்பரே தாங்கள் சொல்வது..
  தமிழில் வார்த்தைகளுக்கா பஞ்சம்...எவ்வளவோ இருக்க...
  தவிர்க்கலாமே இதுபோன்ற விஷயங்களை... நல்லவற்றை சொல்லும்போது
  ஏற்றுக்கொள்ளலாமே. புரிதல் மற்றும் அதனால் வரும் ஆரோக்கியமான மாற்றம் என்ற ஒன்றுதான் நம்மை மேம்படுத்தும்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கூற்று மெய்தான்.

   Delete
 4. உண்மைதான் நண்பரே...
  தாங்கள் சொல்வது போல தமிழில் இல்லாத வார்த்தைகளா..
  புரிதல் என்ற ஒன்றுக்கும் புரிதலுக்கு பின்வரும் ஆரோக்கியமான மனமாற்றமும் நம்மை மேம்படுத்தும்...மாறுவார்கள்...நம்புவோம்...

  ReplyDelete
 5. என்னப்பண்றது தலைவரே...

  இதெல்லாம் பதிவுலக அரசியல் அப்படின்னு சொல்லி விலகிவிட விரும்பவில்லை. என்னுடைய சென்ற பதிவில் தலைப்பு ///வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா...? //////// இது ஒரு தன்னமபிக்கை குறித்த பதிவு. ஆனால் அதை படித்தவர்களின் பட்டியல் வெறும் 300 பேர்தான்.

  நமது படைப்புகள் அதிகாம பேரை சென்றடைய வேண்டும் என்பரே ஒரு படைப்பாளனின் ஆசை. அதை நிறைவேற்ற இந்த தலைப்பு திருவிளையாடல்..

  நல்ல கதை அம்சம் கொண்ட படம் என்று வைத்துக் கொள்ளுங்கள். 5 நாள் மாத்திரமே திரையரங்கில் ஓடினால் எப்படி.. நல்ல விஷயங்களை சொல்லக்கூட மக்களை இழுக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய படைப்பாளிகள் இருக்கிறார்கள்.

  தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இருக்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. பதிவுகுறித்த தலைப்பை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி வைக்க வேண்டும் அதுதான் என்னுடைய பாணி...

  ஆதங்கம் புரிகிறது.. மாற்றி கொள்வோம் அனைவரும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழரே..முடிந்தவரை தவிர்த்து கொள்வது நலம் என்றே தோணுகிறது.

   Delete
 6. பரபரப்பிற்காக தலைப்புகள் வைப்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை. அவற்றினால் கிடைக்கும தாற்காலிக ஹிட்ஸ்களால் யாதொரு பயனும் இல்லை. மிக விரிவாக அலசி ஆராய்ந்து நீஙகள் எழுதியிருப்பது வரிக்கு வரி உண்மை. என் மனதிலுள்ள கருத்துக்களின் பிரதிபலிப்பு. உண்மையை நீங்கள் உரக்கச் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி கவிஞரே...

  ReplyDelete
  Replies
  1. வழிமொழிந்ததில் மகிழ்ச்சி தலைவரே..

   Delete
 7. நியாயமான கோரிக்கை. நன்றி

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி..

   Delete
 8. சரியா சொன்னிங்க அண்ணா

  ReplyDelete
  Replies
  1. சரியா சொல்லிட்டேனா..

   Delete
 9. unmai sako!

  muzhumaiyaaka aatharikkiren

  ReplyDelete
 10. படைப்புக்கு ஏற்றார்ப்போல
  தலைப்பிடுவதே சிறந்தது
  கவர்வதற்காக இடுகின்ற தலைப்புகள்
  நிச்சயம் பதிவர் மூதுள்ள்ள நமபகத்தன்மையை
  குறைக்கவே செய்யும்
  அனைவரும் அவசியம் மனதில் கொள்ளவேண்டிய
  கருத்தை பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி..

   Delete
 11. பதிவுலகத்துக்கு தேவையான ஆரோக்கியமான முற்றிலும் உண்மையான கருத்துக்கள்.

  S பழனிச்சாமி

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி சகோ..

   Delete
 12. எனக்கு சில தலைப்புகள் அனுப்புங்க சகோ!

  ReplyDelete
 13. நல்ல தலைப்பா பார்த்து எனக்கும் சொல்லுங்க சகோ

  ReplyDelete
  Replies
  1. அனுப்பிட்டா போச்சு..சொல்லிட்டா போச்சு..

   Delete
 14. பதிவுலமே ஒரு மாயாஉலகம். எல்லோரும் முகமூடிகள் அணிந்து உலா வருகிறார்கள். அதன் தலைப்புகளிலும் மாயையைத் தவிர வேறென்ன இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா..

   Delete
 15. ஆரோக்கியமான கருத்துக்கள் கொண்ட அவசிய பதிவு. நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழரே..

   Delete

 16. நல்ல கருத்துக்கள் மதுமதி!இதனை அனைவரும்
  நடைமுறைப் படுத்தினால் நலம்

  ReplyDelete
  Replies
  1. சந்தேகம்தான் ஐயா..

   Delete
 17. நண்பரே நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தான். ஆனால் இதை அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ள யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.ஏனெனில் நிறைய பேர் விரும்புவது ஹிட்ஸ்

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள்..

   Delete
 18. தலைப்புகள் சிலசமயங்களில் சர்சையை ஏற்பத்திச்செல்வதும்,சில சமயங்களில் அமைதியாக இருப்பதும் சகஜம்தானே?எடுத்துக்கொள்கிற விஷயங்களை பொறுத்டு அமைகிற தலைப்புகளும் சமயத்த்ல் இப்படி ஆகிவிடும்,

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே..

   Delete
 19. சிறப்பான ஆராய்ச்சி ..

  ReplyDelete
 20. நல்ல கருத்து, பெரும்பான்மை பதிவர்களின் ஆதங்கத்தை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே..

   Delete
 21. உண்மையான கருத்துக்கள்! நானும் இந்த மாயவலையில் சிக்கி இருந்தேன்! தற்போது விடுபட்டு வருகிறேன்! நன்றி

  இன்று என் தளத்தில்
  சரணடைவோம் சரபரை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html

  ReplyDelete
  Replies
  1. விடுபட்டுவிட்டீர்களா.சிறப்பு..

   Delete
 22. பல நல்ல பதிவுகளை திரட்டிகளிளிருந்து இருட்டடிப்பு செய்வதிலும்.... இப்பிடிபட்ட தலைப்புகளை கொண்ட பதிவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை!

  எழுதும் பதிவுகள் நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஆசைதான்., அதில் தவறேயில்லை! ஆனால் அதற்காக இப்படிப்பட்ட குறுக்கு வழிகளை பயன்படுத்துவது தவறு என்பது ஏனோ பலருக்கு உரைப்பதேயில்லை!

  புரிதலுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே..

   Delete
 23. தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் தலைப்பை மட்டும் கவர்ச்சியாகப் போட்டுவிடுகிறார்கள் சிலர்.....ஆனால் அங்கு பதிவு சப்பென்று இருக்கும்.அருமையான பதிவு மது !

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம்..உங்கள் கருத்துக்கு நன்றி சகோ..

   Delete
 24. முதலில் கவிஞருக்கு தாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள்§

  ReplyDelete
 25. உங்கள் வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல என்னுடைய மன வெளிப்பாடாகவும் இதைக் கான்கின்றேன் தொடருங்கள் சிறப்பாக தொடர்வோம் நட்பில் வாசிப்பு மிகமுக்கியம் ஹிட்சு இல்லை!

  ReplyDelete
 26. ஒரு சில பதிவுகள் வரம்பு மீறும்போது 18+ கொடுப்பது நலம். ஆனால் தமிழ்மணத்தில் 18+ சம்மந்தமான பதிவுகளை சூடாகும்போது முகப்பில் தெரியாதபடி செட் பண்ணி இருக்காங்க.

  இதில் கொடுமை என்னானா இதை நல்லாவே தெரிந்துகொண்டு, தங்களை பிரபலப் பதிவர்கள் என்று பிதற்றும் சிலர், 18+ ஸை வேண்டுமென்றே கொடுப்பதில்லை! தமிழ்மணத்தில் இணைத்த பிறகு "யோக்கியமாக" அதை சேர்ப்பதும் உண்டு!

  என்னத்தை சொல்ல?

  இதுபோல் விமர்சனம் (தலைப்பு மிஸ்டைரெக்ட் செய்யுது)னு பின்னூட்டங்களில் சொன்னால் நீங்க நெறைய எதிரிகளையும் உங்களுக்கு உருவாக்குறீங்கனு சொல்லலாம்.

  அந்த சரியான, தேவையான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளுமளவுக்கூட திறந்த மனது கெடையாது பல "பெரிய பதிவர்கள்" களுக்கு!

  என்னவோ போங்க! பதிவுலகில் மிகச்சிலரே பெரிய மனிதர்கள். பெரும்பாலும் சில்லரைகள் நிறைந்ததுதான் பதிவுலகம்! இதுதான் உண்மை!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது உண்மைதான்..என்னத்த சொல்ல?

   Delete
 27. நல்ல கருத்தினை சொல்லி அதை திணிக்காமல் நாசூக்காக சொல்லி உள்ளது பிடித்து இருக்கிறது...

  நமது தளத்தை பின் தொடரும் தோழர்கள் வந்து கருத்திட்டு வாக்கிட்டு செல்வது என்பது உறுதியானது.ஏனெனில் அது பதிவுலகில் உள்ள தனிப்பட்ட நட்பைச் சார்ந்தது.///
  முற்றிலும் உண்மை... அனாவசியம் இல்லாத நல்ல தலைப்புகளை இடுவதால் நான் ஹிட்சுகள் அதிகம் இல்லாவிட்டாலும் நல்ல நண்பர்களைப் பெற்றுக் கொண்டு இருக்கிறேன்.

  ReplyDelete
 28. எனது வலை...
  நேரம் இருந்தால் வாருங்கள்....
  http://varikudhirai.blogspot.com/2012/09/triple-murders-in-srilanka.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே.

   Delete
 29. அருமையான அலசல் சகோ...

  தலைப்பு மூலமாக தான் வாசகர்களை கவர முடியும் என்றாலும் எதிர்மறை தலைப்புகள் நம் மீதான நம்பிக்கையை கீழிறக்கிவிடும் என்பது உண்மையே..

  ஹிட்ஸ் வைத்து அண்ணாநகர்ல ப்ளாட்டா வாங்க முடியும்..

  செம பதிவு! வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஹிட்ஸ் வைத்து அண்ணாநகர்ல ப்ளாட்டா வாங்க முடியும்..


   அப்படியா..அந்த ரகசியம் தெரிஞ்சா சொல்லுங்களேன்..

   Delete
 30. ஹிட்சுக்காக தலைப்பு மட்டும் அல்ல தலைகால் புரியாமலே பிறரை நிந்திக்கும் வகையில் பிறர் வாழ்வை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில் மனிதாபிமானம் அற்ற தகவல் பரிமாற்றங்கள் கூட இந்த ஆர்வலர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுவதும் மிகவும் வேதனைக்குரிய விடயமாய் உள்ளது சகோதரரே :( மிகவும் சிறப்பான அவசியமான ஒரு தகவலை முன்வைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றியும் மேலும் தொடர வாழ்த்துக்களும் சகோதரரே .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி..

   Delete
 31. நான் பழைய பதிவர்தான். புதிய முகமூடியுடன் உலா வரத் தொடங்கியிருக்கிறேன்.

  நான் எப்போதுமே இந்த ’மாயை’யில் சிக்கியதில்லை; ஹிட்ஸ் பற்றியும் கவலைப்பட்டதில்லை.

  பதிவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. ஒ..புதிய முகத்துடன் இங்கே வந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..

   Delete
 32. பதிவுத் தலைப்புகள் ஈர்க்கக் கூடியவையாக இருந்தால் மட்டும் போதாது.ஓரளவிற்காவது பொருத்தமானதாக இருக்க வேண்டும். ஏமாற்றுத் தலைப்புகளை எப்போதும் வைத்துக்கொண்டிருக்க முடியாது.நிச்சயம் நம்பகத் தன்மை இழக்கச் செய்யும் என்பது உண்மைதான். ஆனால் தலைப்புகள் ஈர்க்கக் கூடிய வகையில் இருந்தால்தான் வருகை அதிகரிக்கும்.பிரபல பதிவர்கள் என்ன தலைப்பிட்டாலும் வருகை குறையாது.ஆனால் என்னைப் போன்ற பதிவர்களுக்கு வாசகர்களை ஈர்ப்பதில் அதிக கஷ்டங்கள் உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதும் யோசிக்க வைக்கிறது..

   Delete
 33. பதிவை எழுதும் நோக்கம், அதில் சொல்லப்படும் விடயங்கள் இரண்டும் அதாவது எழுதுபவரின் நோக்கமும், வாசிப்பவரின் புரிதலும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தாலே அன்றி எப்படி பதிவிட்டாலும், எப்படி தலைப்பிட்டாலும் அது புறக்கணிக்கப்படும்.

  தமிழ்மணம் தவிர எந்த திரட்டியும் நான் தொடர்வதில்லை. அங்கு கூட அடிக்கடி செல்வதை தவிர்த்தாகிவிட்டது இது போன்ற சில காரணங்களால்.

  நானும் பதிவுகள் எழுதுவதுதான். ஆனால், என் பதிவுகளை படிப்பவர்கள் எண்ணிக்கை நூறு கடந்தாலே அதிசயம் தான். இருந்தும், நான் என் மனட்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் திருப்தியாக எழுதுகிறேன் என்பதே பெரிய திருப்தி.

  பின்னூட்டம் நீண்டுவிட்டது. மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. //பதிவை எழுதும் நோக்கம், அதில் சொல்லப்படும் விடயங்கள் இரண்டும் அதாவது எழுதுபவரின் நோக்கமும், வாசிப்பவரின் புரிதலும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தாலே அன்றி எப்படி பதிவிட்டாலும், எப்படி தலைப்பிட்டாலும் அது புறக்கணிக்கப்படும்//

   நல்லதொரு கருத்தைச் சொன்னீர்கள்..நன்றி..

   Delete
 34. இந்த 18+ இந்தியாவிற்கு தேவையில்லை! ஏன்?
  கணவன் மனைவி உறவில் என்ன 'எல்லாம்" செய்ய வேண்ண்டும் என்று அப்பட்டமாக கருவிலிருக்கும் குழத்தை கூட படிக்கும் படியான குஜால் செய்திகள் பத்திரிக்கையில் வருகிறது. தட்ஸ்தமிழில் அதை விட....யாரும் அங்கு 18+ போடுவதில்லை. ஏன் அப்படி?

  தட்ஸ்தமிழ் ஒன்றும் முட்டாளாலல்ல! I.P.C பிரகாரம் [இந்திய சட்டம் பிரகாரம்] தேவையில்லாததை 18+ எதற்கு போட வேண்டும்? என்ன காரணம்!

  அதே சமயம் இந்த மாதிரி விஷயங்களை படிக்க மேலை நாடுகளிலும் 18+ தேவையில்லை. சன்னி லியோன் படங்களை பார்க்க மட்டுமே மேலை நாடுகளில் 18+ தேவை...

  அப்போ நம்ம ஆட்கள் 18+ போடும் எந்தப் பதிவுக்கும் ஒன்னும் போடத் தேவையில்லை...

  கடைசி செய்தி....அமெரிக்க அரசாங்கம் கெஞ்சிக் கூத்தாடினாலும் கூகுள் எதையும் எடுக்கமுடியாது என்று எங்க அரசாங்கத்திடம் சொல்லிட்டாக!
  ஆகவே இந்த சிறு விஷயத்தை நாம் பெரிது படுத்த தேவைல்லை..

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com