புது வரவு :
Home » , » ஐய்யோ அப்பா ஐயப்பா..

ஐய்யோ அப்பா ஐயப்பா..

கொக்கரக்கொ..


''ஏனுங்க மாமா நேத்து வரைக்கும் பிராந்தி பாட்டிலை கோவணத்துல ஒளிச்சு வச்சுக்கிட்டு மொடக்கு மொடக்குன்னு குடிச்சுக்கிட்டு இருந்தானே ஆறுச்சாமி அவன் அப்புறம் மஞ்சக் காட்டுல மறஞ்சு மறஞ்சு கஞ்சா குடிச்சுட்டே இருப்பானே மாரிமுத்து அவன் அப்புறம் ஆம்பிளை இல்லாத வீடா பாத்து அலைமோதிட்டு இருப்பானே கோயிந்தன் இந்த மூணு பேரும் திடுகுப்புன்னு ஐயப்பனுக்கு மாலையப் போட்டுகிட்டு வந்துட்டானுங்க..என்ன மாமா இது வம்பாப்போச்சு''' 
       என்று கேட்ட அம்மணியைப் பார்த்து சிரித்துக்கொண்டே கையில் வைத்திருந்த மம்பட்டியை கீழே போட்ட சின்ராசு,
"அதான் அம்மணி எனக்கு ஒண்ணும் புரியலை..அதெல்லாம் அந்த ஐயப்பனுக்கே வெளிச்சம்"
''என்ன மாமா இப்படி அசால்ட்டா சொல்லிப்புட்டீங்க''
"வேற என்ன அம்மணி சொல்றது?''
''என்ன சொல்றதா என்னால தாங்கிக்க முடியல மாமா''
''உன்னால தாங்கிக்க முடியலைன்னா என்ன.. அதான் ஐயப்பனே தாங்கிக்கிறாரே"'
''அதில்ல மாமா வாரத்துக்கு ரெண்டு தடவ குளிச்சுட்டு இருந்தானுங்க இப்ப என்னடான்னா காலைல சாயங்காலம்ன்னு ஒண்ணும் சொல்லிக்க முடியல மாமா..கழுத்துல மாலை என்ன நெத்தியில சந்தனப் பொட்டென்ன ..ஒண்ணும் சொல்லிக்க முடியல மாமா''
"அட ஆமா அம்மணி மாலை போட்டவனுங்க ஐயப்பன் மேல காட்டுற பக்தி தாங்கிக்க முடியல அம்மணி''
''ஆமா மாமான்னா வருசம் முச்சூடும் ஐயப்பன் இருக்குற பக்கமே தலை வச்சு படுக்கிறதில்ல.. ஆனா கார்த்திகை மாசம் ஆரம்பிச்சா போதும் ஐயப்பன் மேல திடீர்ன்னு எப்படிபக்தி வருதுன்னு தெரியல''
''சரி விடு விடு நீ ஏன் டென்சன் ஆவுற''
''அதில்ல மாமா சினிமாவுக்கு போனாக்கூட ஐயப்பன் படத்துக்கு தான் போறானுங்க..அது மட்டுமா அவுங்க செல்போனுக்கு போன் போட்டுப் பாருங்க அதுலகூட ஐயப்பன் பாட்டுதான் காலர்டூனு..வம்பாப்போச்சு மாமா இவனுகளோட''
''விடு விடு இந்த ஒரு மாசந்தான் மாலைய கழட்டிட்டா பாட்ட மாத்திப் போடுவாங்க''
''ஏன் மாமா மாலையப் போட்ட பெறகும் பான்பராக்கு போடறவன் போட்டுகிட்டேதான் இருக்கான்..சிகரட் அடிக்கிறவன் அடிச்சுட்டுதான் இருக்கான்..இது என்ன மாமா கணக்கு ..கேட்டா அதெல்லாம் தப்பில்லைன்னு சொல்றானுங்க தண்ணி மட்டும் அடிக்கறதில்ல''
''இருமுடிய எப்படா கழட்டி வப்போம் எப்படா டாஸ்மாக்கு போவோம்ன்னுதான் இருப்பானுங்க அம்மணி''
''மாலை போடாதவன விட மாலை போட்டவனுக்குத்தான் அதுமேல நெனப்பு அதிகமா இருக்குன்னு சொல்றீங்க..அப்படித்தானே'' 
''என்ன கருமாந்தரமோ விடு..எல்லாத்தையும் அப்படி சொல்ல முடியாது புள்ள..நல்லவங்களும் இருக்காங்க''
''அவுங்களப் பத்தி நாம பேசல மாமா..அறை வேக்காட்டு டிக்கட்டுகளப் பத்தித்தான் நான் சொல்றேன்..எல்லாத்தையுங்கூட தாங்கிக்கலாம் ..ஆனா என்ன சாமி சாமின்னுதான் கூப்பிடனும்ன்னு சொல்றானுங்க பாருங்க அதான் மாமா நெஞ்சே அடைக்கிற மாதிரி இருக்குது''
''ஆமா அம்மணி சாமின்னுதான் கூப்புடுனுங்கறாங்க என்ன பண்றது''
''மாமா சாமின்னு சொன்னவுடனே தான் ஞாபகம் வந்தது..ஆமா கனிமொழிக்கு சாமீன் கெடச்சுருச்சே ராசாவுக்கு என்னாச்சாம்''
''அதை ராசா வாயத்தெறந்து சொன்னாத்தான் தெரியும் அம்மணி''
''அவர்தான் வாயத்தெறந்தா நெறய பேரு உள்ள போவாங்கன்னு சொன்னாருங்கறாங்களே''
''எது என்னமோ ராசா வாயத்திறந்தா தான் ..அது அந்த ஐயப்பனுக்கே வெளிச்சம்''
''என்னது ஐயப்பனுக்கு வெளிச்சமா ..என்ன மாமா''
''கார்த்திகை மாசமில்ல தானா ஐயப்பன் பேரு வந்திருச்சு''
''சரி அம்மணி சும்மா பேசிக்கிட்டே இருக்க வேண்டாம் ..கறி எடுத்துட்டு வந்து கொழம்பு வக்கிறேன்னு சொன்னியே ..நேரங்காலமா போயி அரைக்கிலோ ஆட்டுக்கறி வாங்கிட்டு வா போ''
''என்ன மாமா தெரியாமத்தான் சொல்றீங்களா''
''ஏன் அம்மணி''
''பின்னென்ன மாமா வெளிநாட்டுக்காரங்களுக்கு சில்லரை ஏவாரம் பண்றத்துக்கு வுடக்கூடாதுன்னு இன்னைக்கு நாடு புல்லா சில்லற ஏவாரிங்கெல்லாம் கடயடைப்பு போராட்டம் நடத்துறாங்களே தெரியாதா''
''ஆமா அம்மணி மறந்தே போயிட்டேம்போ''
''தமிழ்நாட்டுல மட்டும் 20 லட்சம் கடைங்க மூடியிருக்குமாம் ..கறி கடையையும் சேத்துத்தானாம்..சரி மாமா பெட்ரோல் வெல கொறஞ்சிடுச்சுன்னு ஒரு வருசமா ஓட்டாம வச்சுட்டிருந்த டி.வி.எஸ் 50 யை எடுத்துட்டு பெட்ரோல் போட போனீங்களே என்னாச்சு..இனிமேலாவது வண்டி ஓட்டுவீங்களா..அதான் பெட்ரோல் வெல கொறஞ்சு போச்சே''
''அட ஏன் அம்மணி வயித்தெரிச்சல கெளப்புறே''
''ஏனுங்க மாமா இப்ப நான் என்ன சொல்லிப்போட்டேன்''
''அட் ஏன் அம்மணி வெல ஏத்தும்போது மட்டும் அஞ்சு ரூபா ஆறு ரூபான்னு ஏத்தறாங்க''
''சரி மாமா இப்ப எவ்வளவுதான் கொறச்சாங்க''
''83 காசு கொறச்சிருக்காங்க அம்மணி''
''அட கெறவத்தே..83 காசு கொறக்கிறத்துக்குத்தான் இப்படி ஏலம் போடுறாங்களா..சரி மாமா என்ன பண்ணப்போறீங்க..''
''என்ன பண்றது டி.வி.எஸ் 50 ய மாட்ட கட்டி வக்கிற மாதிரு ஓரம கட்டி வைக்க வேண்டியதுதான்..அத்தனை ரூவா போட்டு பெட்ரோல் வாங்கி ஓட்டினா நம்ம பண்ணயம் தாங்காது அம்மணி''
       என்று சின்ராசு சொல்ல இன்று மாலை தன் கணவனோடு டி.வி.எஸ்.50 யில் ஏறிக்கொண்டு சினிமாவுக்கு போலாம் என்றிருந்த அம்மணியின் ஆசை காணாமற்போனது.. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

16 comments:

  1. மாப்ள கொஞ்சம் பான்ட் பெருசா போடுங்க..படிக்க முடியல ஹிஹி!

    ReplyDelete
  2. ஐயப்பனில் தொடங்கி பெற்றோல் விலையுடன் அரசினைச் சாடி ஏக்கத்தைச் சொல்லும் பதிவு அருமை!

    ReplyDelete
  3. நன்றி/நண்டு@நொரண்டு/தனிமரம்/

    ReplyDelete
  4. ஆலோசனைக்கு நன்றி விக்கி..ஃபான்ட்
    பெருசு பண்ணிட்டேன்

    ReplyDelete
  5. சுவாமியுடன் தொடங்கி, அரசையும் சாடி, பேச்சு தமிழில் ஒரு அற்புதமான பதிவு.

    ReplyDelete
  6. வருஷம் பூரா(?) குடிச்சிக் கிடக்கிறவங்க ஒரு மாசம் குடிக்காம இருக்கிறது நல்லதுதானே....?

    எல்லாம்... நமது பார்வையை பொறுத்துதான் இருக்கிறது.

    ReplyDelete
  7. /தோழன் மபா/வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி..

    அப்படி வேண்டுமானால் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்..மாலை அணிந்து கொண்டே மது அருந்தியவர்களை நான் கேள்விப் பட்டிருக்கிறேன்..

    ReplyDelete
  8. மது(பேர்லயே போதைய பாருங்கப்பா!),

    வட்டார சொல்லாடலில் நடப்புச் சம்பவங்களைச் சிறப்பாக பதிவு செய்திருக்கீங்க. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. நன்றி../கருன்/சத்ரியன்/

    ReplyDelete
  10. நன்றி/தி.தனபாலன்/லட்சுமி அம்மா/

    ReplyDelete
  11. அன்பின் மதுமதி - அய்யப்பனுக்கு மாலை போடுபவர்கள் அந்த காலத்தில் சுத்தமாகத் தான் பெரும்பாலும் இருக்கிறார்கள் - ஓரிருவர் செய்யும் தவறினைப் பெரிது படுத்த வேண்டாம். அப்படித் தவரு செய்பவர்களும் அவர்களது விருப்பப்படி செய்கிறார்கள் - கேட்பவரகள் கேட்கட்டும் - நாம் ஏன் கேட்க வேண்டும் - அதௌ அவர்கள் விருப்பம்- வுட்டுத் தள்ளுங்கய்யா ..... நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  12. அன்பின் மதுமதி - அய்யப்பனுக்கு மாலை போடுபவர்கள் அந்த காலத்தில் சுத்தமாகத் தான் பெரும்பாலும் இருக்கிறார்கள் - ஓரிருவர் செய்யும் தவறினைப் பெரிது படுத்த வேண்டாம். அப்படித் தவரு செய்பவர்களும் அவர்களது விருப்பப்படி செய்கிறார்கள் - கேட்பவரகள் கேட்கட்டும் - நாம் ஏன் கேட்க வேண்டும் - அதௌ அவர்கள் விருப்பம்- வுட்டுத் தள்ளுங்கய்யா ..... நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com