நேற்று மாலை
ஆறு மணிக்கு மறைந்தீர்..
இன்று அதிகாலை உயிர்த்தெழுந்து கொண்டீர்..
இந்த விசயத்தில் இயேசுவுக்கே
இரண்டு நாட்கள் முந்திக் கொண்டவர் நீங்கள்..
பட்டுப்போனால் தழைக்காமல்
போவதற்கு இது என்ன இலையா?
சுடரொளி வீசும் சூரியனல்லவா!..
எம்மொழியை
செம்மொழி ஆக்கியவரே..
தமிழின் ஒளி நீ.. உம்மால்
தமிழ் பிரகாசமடைகிறது..
தமிழின் வெளி நீ.. உம்மால்
தமிழ் உலகெங்கும் படர்கிறது..
கவிஞரா?
கதாசிரியரா?
இலக்கியவாதியா?
அரசியல்வாதியா ?
என கேட்கப்பட்ட அத்தனை
கேள்விகளுக்குமான ஒற்றை விடை
கலைஞர்..
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையாருக்குப்பின்
கலைஞர் பேராசிரியரின் பிணைப்பு
நட்பின் இலக்கணம் - அதுவும்
பிரிந்தது இக்கணம்..
ஓய்வெடுங்கள்..
ஓய்வெடுங்கள்..
ஓய்வெடுங்கள்..
எழுதி தீர்த்த விரல்களுக்கு
உங்கள் எழுத்துகளே மோதிரம் இடட்டும்..
பேசி ஓய்ந்த உதடுகளுக்கு
உங்கள் பேச்சுகளே ஒத்தடம் கொடுக்கட்டும்..
தெறிக்கவிட்ட நகைச்சுவையெல்லாம்
உங்களை எழுப்பி சிரிக்க வைக்கட்டும்..
கதை கவிதை கட்டுரை காவியம்
என எழுதி தீர்த்த உம்மைப் பற்றி
கதையாய்..
கவிதையாய்..
கட்டுரையாய்..
காவியமாய்
நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம்..
கடந்த காலமாக இருக்க வேண்டிய நீங்கள்
நிகழ்காலமாகவே எப்போதும்
இருந்து வந்தீர்கள்..
எமக்கெல்லாம் எதிர்காலம் கொடுத்த நீங்கள்
தற்போது இறந்த காலம் ஆகிவிட்டீர்கள்..
பெரியாரின் சீடனாய்
அண்ணாவின் தம்பியாய் இருந்த உம்மை
தமிழர்களின் தலைவனாய் மாற்றியவர்கள்
அனுதினம் அவ்வாறே போற்றியவர்கள்
நாங்கள்..
முரசொலி தினம் அறைந்து கடிதங்கள் பல எழுதி
எங்களையும் தம்பிகள் ஆக்கியவரய்யா நீங்கள்..
இனி..
மேடையிலே நீங்கள் வீற்றிருக்க
மைதானத்தில் நாங்கள் காத்திருக்க
உடன்பிறப்பே என ஒலிபெருக்கியில் அழைக்கும்போது
ஆரவாரத்தோடு அதைக் கேட்கும் சந்தர்ப்பம் எங்களுக்கு
இனி அமையாது என்பது மட்டுமே வருத்தம்..
உடன்பிறப்பே என்கின்ற
உங்கள் கம்பீர கரகரக்கும் காந்தக் குரல்
கரைந்து போய்விடவில்லை
காற்றில்தான் கலந்திருக்கிறது..
எப்போது வேண்டுமானாலும் சுவாசித்துக்கொள்வோம்..
என் கண்ணில் வருவது
நீரல்ல..
நீங்கள் எழுதிய கவிதையின் ஒரு வார்த்தை..
நீங்கள் எழுதிய பாடலின் ஒரு வரி..
நீங்கள் எழுதிய கதையின் ஒரு வசனம்..
மண்ணில் வாழ்ந்த நீங்கள்
விண்ணில் வாழ சென்றுவிட்டீர்கள்
அவ்வளவுதான் அய்யா
அண்ணார்ந்து பார்த்துக் கொள்கிறோம்..
அண்ணாவைப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் இருந்துவிட்டீர்கள்!..
அய்யா செல்லுங்கள் ..
அண்ணாவிற்கு அருகிலேயே
அயர்ந்து கொள்ளுங்கள்..
- மதுமதி
-----------------------------------------------------------
உயிப்புள்ள அஞ்சசலிக் கவிதை/
ReplyDelete