மாலை ஆறுமணி.
வெண்டைக்காய்களை அரிவாள்மனையில் அம்மணி வெட்டிக்கொண்டிருக்க சின்ராசு வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்.
"என்ன அம்மணி இன்னும் காய் வெட்டி முடிக்கலையா"
"இதோ..ஆச்சுங்க மாமா.. ஏன் என்ன அவசரம்"
"என்ன அம்மணி, என்ன அவசரமா?..இப்ப மணி என்ன"
"ஆறரை மணி"
"நாளைக்கு வெள்ளிக்கிழமை ஞாபகம் இருக்குதா"
"ஆமா மாமா மறந்தே போயிட்டேனுங்க மாமா"
"நாளைக்கு ரிலீஸ் ஆகுற படங்களைப் பத்தி இப்பவே சொன்னாத்தானே இதை பாத்துட்டு என்ன படம் பாக்கலாமுன்னு மக்கள் முடிவெடுப்பாங்க"
"ஆமாங் மாமா த்தா ரெண்டே நிமிசம் வந்துடுறேன்"
என்ற அம்மணி சமையற்கட்டுக்குள் நுழைந்து காய்கறியை பத்திரப்படுத்தி விட்டு சின்ராசிடம் வந்தாள்.
"ஆமா அம்மணி நாளைக்கு எத்தனை படம் ரிலீஸ் ஆகுதாம்"
"மூணு படங்க மாமோவ்"
"ஏன் போன வருஷத்துல வெள்ளிக்கெழமன்னா ஏழெட்டு படங்க ரிலீஸ் ஆகும் இப்ப என்னடான்னா ரெண்டு மூணு. தமிழ் தெரையுலகம் முன்னமாதிரி இல்ல போலிருக்கே"
"அதை பத்தி அப்புறம் பேசுவோம்..மாமா..நாளைக்கு ரிலீஸ் ஆகுற படத்தப் பத்தி இப்ப பாக்கலாம்"
"ஆமா அம்மணி"
"நம்ம சமுத்திரக்கனி நடிப்புல தயாராகியிருக்குற் 'சாட்டை' படம் நாளைக்கு ரிலீஸ் ஆகுது மாமா"
"சுப்பிரமணியபுரத்துல நடிக்க ஆரம்பிச்சு நாடோடிகள் படத்தை டைரக்டு பண்ணிணாரே அவருதான அம்மணி"
"அவருதான் மாமா இந்தப் படத்துல முக்கியமான வேஷத்துல நடிக்கிறாராம்"
"அப்ப இந்தப் படம் ஹிட்டுதான்னு சொல்லு "
"அதெப்படி மாமா சொல்லமுடியும் கதைய பொறுத்து படம் எடுத்ததை பொறுத்துதான் படம் ஓடுமா ஓடாதாங்கிறதெல்லாம்"
"சரி அம்மணி என்ன கதையாம்"
"வாத்தியாருங்களுக்கும் பசங்களுக்கும் உறவு எப்படி இருக்கோணும்.. வாத்தியாருங்க பசங்ககிட்ட என்ன எதிர்பாக்குறாங்கறதுதான் கதையோட கான்செஃப்ட் மாமா. அதை வச்சு சின்ன விசயங்களை கோத்து படம் பண்ணியிருக்காங்களாம்.ஒவ்வொரு பள்ளிக்கூடமா போய் அங்க நடக்குற விசயத்தையெல்லாம் படமா எடுத்திருக்காங்கன்னா பாருங்களேன்"
"ஓ..அப்படியா"
"இதுல வாத்தியாரா சமுத்திரக்கனியும் மாணவனா யுவனும் நடிச்சிருக்காங்க..அப்புறம் மைனாவுல தேசிய விருது வாங்கின தம்பி ராமையா இந்த படத்துல மாறுபட்ட வில்லனா நடிச்சிருக்காராம்"
"ஓ..பின்னி எடுத்திருப்பார் அப்ப"
" ஆமாங்க..மாமா..படத்துக்கு ஒளிப்பதிவு ஜீவன்,இசையமைச்சது இமான்..இந்தப்படத்தை எழுதி இயக்குனது புதுசா வந்திருக்கிற அன்பழகன்.இவரு நம்ம பிரபு சாலமனோட உதவியாளர்"
"ஓ..அதனாலதான் பிரபுசாலமனே இந்தப்படத்தை தயாரிச்சாரா"
"ஆமாங்க மாமா"
"அப்ப படம் கிட்டத்தட்ட நல்லா இருக்குன்னு நம்பலாம்"
"ம்..அதுவுமில்லாம இந்தப் படத்துக்கு போட்டியா எந்தப் படமும் நாளைக்கு இல்ல"
"என்ன அம்மணி இன்னும் ரெண்டு படம் இருக்குன்னு சொன்னே"
"அதான் மாமா அது ரெண்டும் டப்பிங் படம்தான் நேரடிப் படம் இல்ல"
"அப்படியா அம்மணி"
" ஒண்ணு நம்ம கரீனா கபூர் கவர்ச்சியோ கவர்ச்சின்னு காட்டி நடிக்கிற ஹீரோயின்..அது ஹிந்திப்படம்தான்.அதை இயக்குனது மதூர் பண்டார்கர்.இந்தப்படத்துல சினிமா நடிகையாவும் போதைக்கு அடிமையாகற மாதியும் கரீனா நடிச்சிருக்காங்களாம்"
"ஓ..அதுதான் சிகரெட்டை வாயில வச்சுக்கிட்டு இருக்குற மாதிரி போட்டோக்கு போஸ் குடுத்தாங்களா?அது பெரிய சர்ச்சயை கிளப்பிடுச்சே.."
"ஆமாங்க மாமா அதில்லாம கிரிக்கெட் ஆடுறவரை லவ் பண்றமாதிரி சீனெல்லாம் இருக்கு அது யாரையோ மனசில வச்சு எடுத்தாருன்னு இயக்குனர் கூட சர்ச்சயில மாட்டுனாரு"
"என்ன கருமாந்திரமோ..நாளைக்கு படத்தை பாத்தா தெரிஞ்சு போயிடும்..ஆமா இந்தப் படத்தை பத்தி கரீனாவோட அக்கா கரிஷ்மா பாராட்டினாங்களாமே"
"அதுவா மாமா 'படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்தேன், இந்த படத்தில் கரீனாவோட நடிப்பு அற்புதமாக உள்ளது. அவருடைய நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த படம் வந்த பிறகு அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படம் நிச்சயம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்பதில் சந்தேகம் இல்லை' ன்னு கரிஷ்மா சொன்னாங்களாம்"
"ம்ஹூம்"
"அப்புறம் நம்ம பிரியா மணி இல்ல"
"ஆமா"
என்ற சின்ராசுவின் முகம் குண்டு பல்பாய் எரிய,அவனை பார்த்து முறைத்த அம்மணி,
"என்ன மாமா பிரியாமணிண்னு சொன்னவுடனே முகம் பளிச்சின்னு ஆயிடுச்சு"
"என்ன அம்மணி இப்படி கேட்டுப்போயிட்டே..நீ நெனைக்கிற மாதிரி இல்ல.பருத்தி வீரன் பாத்தநாள்ல இருந்து அவங்களோட ரசிகன் ஆகிட்டேன்"
"அப்படியா..கன்னடத்தில் ரிலீஸ் ஆகி அங்க சூப்பரா ஓடுன படம் சாருலதா. படம் தமிழ்லயும் அதே பேர்ல வருது. இதில் ஒட்டிபிறந்த ரெட்டை பிறவியா ப்ரியாமணி நடிச்சிருக்காங்களாம். குளோபல் ஒன் ஸ்டுடியோ புரோடக்ஷன் சார்பா ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி தயாரிக்கிறாராம்.. நம்ம பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் இவுங்ககிட்டயெல்லாம் இணை இயக்குனராக வேலபாத்த பொன்குமரன் டைரக்ட் பண்ணியிருக்காரு. யோகனந்த். எம்.வி பன்னீர் செல்வம்ன்னு ரெண்டுபேரு ஒளிப்பதிவு செஞ்சிருக்காங்களாம் . சுந்தர் சி பாபு இப்படத்திற்கு இசை அமைச்சிருக்கிறாரு"
"அப்ப படம் ஹிட்டு"
"எப்படி மாமா சொல்றீங்க"
"டப்பிங் படங்க தான் அம்மணி இப்பெல்லாம் தமிழ் நாட்டுல கல்லா கட்டுது"
"சரியாச் சொன்னீங்க மாமா"
"சரி அம்மணி நாம சொல்றத சொல்லிப்போட்டோம்..எந்த படத்தை நாளைக்கு பாக்கறாங்களோ அது அவுங்கவுங்களோட விருப்பம்..என்ன அம்மணி நான் சொல்றது"
"ஆமா மாமா..அவுங்க பாத்துட்டு எந்த படம் நல்லாயிருக்குன்னு சொல்றாங்களோ அந்தப் படத்துக்கு என்னயும் பையனையும் கூட்டிட்டு போவீங்கில்ல"
"என்ன அம்மணி இப்படி கேட்டுப்போட்டே வழக்கமா அதைத்தானே பண்ணிட்டிடுக்கேன்"
என்று சின்ராசு சொல்ல சிரித்துக் கொண்டே அடுப்படிக்குள் நுழைந்தாள் அம்மணி.
appudiyaa...!?
ReplyDeleteவரவர அம்மணி, சின்ராசுவ விட வெவரமா மாறிகிட்டு வருது.
ReplyDeleteசாட்டை பாக்கனும் மதுமதி.
மாற்றானுக்கும் சாருலதாவுக்கும் என்ன வித்தியாசங்க
ReplyDeleteசாருலதா ஏற்கனவே கன்னடத்தில் பார்த்துவிட்டேன் படம் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteசின்ராசும் அம்மணியும் சினிமா பத்திக் கூட பேச ஆரம்பிச்சுட்டாங்களா... நல்லாத்தான் இருக்கு. தம்பி சத்ரியன்... எப்பவுமே அம்மிணி சின்ராசுவை விட புத்திசாலி தானுங்கோ...
ReplyDeleteபார்க்க வேண்டும்...
ReplyDelete"வாத்தியாருங்களுக்கும் பசங்களுக்கும் உறவு எப்படி இருக்கோணும்.. வாத்தியாருங்க பசங்ககிட்ட என்ன எதிர்பாக்குறாங்கறதுதான் கதையோட கான்செஃப்ட் மாமா. அதை வச்சு சின்ன விசயங்களை கோத்து படம் பண்ணியிருக்காங்களாம்.ஒவ்வொரு பள்ளிக்கூடமா போய் அங்க நடக்குற விசயத்தையெல்லாம் படமா எடுத்திருக்காங்கன்னா பாருங்களேன்"//வித்தியாசங்க
ReplyDelete