தமிழ்மண நட்சத்திர இடுகை-2
தலையெழுத்திலோர் பிழையெழுத்து
நான் எழுதுகோலால் எழுதவில்லை..
எழுதுகோலே என்னை எழுதிக்கொண்டிருக்கிறது..
எனக்குள் எத்தனையோ கற்பனை ஊற்றுகள்
சின்னஞ்சிறுசிலிருந்தே அதனையெல்லாம்
அணைக்கட்டி வைத்திருந்தேன்..
அன்றொருநாள் உடைபட்டது அந்த அணை..
என் எழுதுகோலுக்குள் அதனையெல்லாம் ஊற்றி
அதன் பசிபோக்கினேன்..
நான் யார்? நான் எங்கே?
வினாவிற்கு விடை தெரியாதவனாய்
எந்தாயின் கருவிற்குள் நான்..
பத்துமாத காத்திருப்பிற்கு பின்
எந்தாயின் கைகளில் குழந்தையாய் நான்..
தமிழகத்தின் மேற்கத்தைய கிராமத்தில்
சிரமத்துடன் உற்பத்தியானவன் நான்....
கிராமத்தின் கிளைகளெல்லாம்
பரந்து விரிந்து ஏறி இறங்கி உருண்டு புரண்டு
பஞ்சாயத்து சாலைகளில் நீந்தி
சந்தனப் புழுதிகளை பூசி பரிணமித்திருக்கிறேன்..
எள்ளி நகையாடும் கிராமத்தில்
துள்ளி விளையாடலாமே தவிர
ஆழமாய் எதையும் சொல்லிவிட முடியாது..
சிரமம் பார்த்து கிராமம் விட்டு
மாற்றிடம் தேடியது எம் குடும்பம்..
கிராமத்தில் இருந்திருந்தால்
கலகம் கண்டிருக்கலாமே தவிர
உலகம் கண்டிருக்க முடியாதென்பது உண்மையானது..
குழந்தையெனும் பதவியினைத் துறந்தேன்.
பள்ளியெனும் உலகமதில் பறந்தேன்..
படிக்கும் பருவத்தில் எத்தனையோ நிகழ்வுகள்
உணர்வுகளை உசுப்பத்தான் செய்தன..
விபரம் தெரியாத வயதில் ஊறிய உணர்வுகளை
சவரம் செய்ததென்னவோ ஆச்சர்யமில்லை.
வயது போதவில்லை எதுவும் சொல்ல..
வயது பேதமில்லை எதுவும் சொல்ல என்பது
வெறும் வாக்கிற்கு மட்டும்தான்..
பாடங்களை படிக்கும் வயதில்
படங்களைப் பார்க்கும் ஆவலுமில்லை..
ஆவலிருந்தால் வாய்ப்புகளில்லை..
கல்வியைக் கற்க வேண்டிய வேகத்தில்
செல்வியைக் கற்கும் ஆவலுமில்லை
ஆவலிருந்தால் வாய்ப்புகளில்லை..
என் முகத்தில் கடிவாளம் நானாக மாட்டிக்கொண்டேன்..
பள்ளியில் இறந்த நான்
கல்லூரியில் உயிர்த்தெழுந்தேன்..
கடிவாளம் கழட்டப்பட்டது..
பெண்ணை நேசித்து புண்ணாகிப்போனேன்-என்
PEN னை நேசித்து WIN ஆகிப்போனேன்..
அவளின் கழுத்தை நேசித்து கவிழ்ந்து விழுந்தேன்-என்
எழுத்தை நேசித்து எழுந்து நின்றேன்..
என் எழுதுகோலை கர்ப்பிணியாக்கி
எழுத்துக்களை பிரசவிக்க வைத்தேன்..
எழுதுகோல் நெஞ்சை உழுதன;
எழுத்துகள் விழுந்தன;
என் சுட்டு விரலும் கட்டைக் குட்டை விரலும்
எழுதுகோலும் கூட்டணி அமைத்துவிட்டன..
இக்கூட்டணி வெல்லும்-இங்கே
சோகங்கள் எழுத்துக்களின் தேகங்களாய்
காட்சி கொடுக்கும்;
வார்த்தைகள் அதற்கு சாட்சி கொடுக்கும்;
தலையெழுத்திலோர் பிழையெழுத்து
அதுவும் எனக்கு முதலெழுத்து.
அவ் வெழுத்து திருத்தப்படுவது எப்போது?
அதைத் திருத்துபவன் யார்?-முதலில்
அதை கிறுக்கியவன் யார்?
புலப்படவில்லை..
இதோ..எழுதுகோலை எடுத்துவிட்டேன்..
பிழையெழுத்தை நானாகவே
திருத்திக்கொள்ள முற்படுகிறேன்..
(2000 ஆவது ஆண்டில் வெளியான எனது முதல் கவிதை தொகுப்பான "தலையெழுத்திலோர் பிழையெழுத்து" கவிதை நூலில் நான் எழுதியிருந்த என்னுரையிலிருந்து)
பழைய நினைவுகளோடு
உங்களின் "என்னுரை"யே அற்புதமான கவிதையாக உள்ளது.
ReplyDelete//அவளின் கழுத்தை நேசித்து கவிழ்ந்து விழுந்தேன்-என்
எழுத்தை நேசித்து எழுந்து நின்றேன்..//
கவிதை வரிகள் கலக்குகின்றன. நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி.. நன்றி..
Deleteஅப்பவே இலக்கிய சேவை ஆரம்பிச்சிட்டீங்க. அந்த வயதில் முதல் புத்தகம் என்றால் ஆச்சரியமா இருக்கு
ReplyDeleteஅப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல தலைவா அது பெரிய வார்த்தை.. அதுக்கு முன்னாடியே கவிதை,சிறுகதை பத்திரிக்கையில வெளிவர ஆரம்பிடுச்சு..
Deleteஅருமை.
ReplyDeleteஅப்படியா..
Deleteஉங்களின் முதல் கவிதைத் தொகுப்புக்கு நீங்கள் தந்திருந்த முன்னுரையே ஒரு கவிதையாய், உங்களின் சுயசரிதையாய், அருமையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஐயா..
Deleteசில வரிகள் அவரவர் நினைவுகளை மீட்டும்...
ReplyDeleteமிகவும் பிடித்த வரிகள் :
/// கல்வியைக் கற்க வேண்டிய வேகத்தில்
செல்வியைக் கற்கும் ஆவலுமில்லை
ஆவலிருந்தால் வாய்ப்புகளில்லை...
என் முகத்தில் கடிவாளம் நானாக மாட்டிக்கொண்டேன்... ///
அந்தந்த வயதில்... மனதிலும் சில கடிவாளங்கள் எப்போதும் தேவை...
/// பிழையெழுத்தை நானாகவே
திருத்திக்கொள்ள முற்படுகிறேன்... ///
(நானாகவே) அருமை...
வாழ்த்துக்கள் சார்...
நிச்சயமாய்.. குறிப்பிட்ட சொன்ன இடம் எனக்கும் மிகவும் பிடித்ததே..
Deleteபழைய நினைவுகளோடு உங்கள் கவிதையும்
ReplyDeleteமிக மிக அருமை.......................
நன்றிம்மா..
Delete// பெண்ணை நேசித்து புண்ணாகிப்போனேன்-என்
ReplyDeletePEN னை நேசித்து WIN ஆகிப்போனேன்.. // ரசனையான வரிகள் சார்
மிக மிக ரசிக்க வாய்த்த கவிதை சார்... கிராமத்தில் தொலைத்த உங்கள் வாழ்கையை, பள்ளியில் கொன்ற உங்கள் வாழ்கையை, கல்லூரியில் உயிர்தேலச் செய்த உங்கள் வாழ்கையை வெகுவாக ரசித்தேன் நீங்கள் உயிர் கொடுத்த உங்கள் எழுத்துக்கள் மூலம்
ரசித்தீர்களா சீனு..மிக்க மகிழ்ச்சி
Deleteநாங்க பழச அசைபோட்டா...பத்தி பதியா எழுதுவோம்... நீங்க கவிதைதன்ற பேர்ல சுருக்கா எழுதுரீங்க....
ReplyDelete// பெண்ணை நேசித்து புண்ணாகிப்போனேன் //
தாடி வச்ச காரணம் பிரிந்தது :)
தாடிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதை தோழருக்கு சொல்லிக்கொள்கிறேன்.
Delete// எள்ளி நகையாடும் கிராமத்தில்
ReplyDeleteதுள்ளி விளையாடலாமே தவிர
ஆழமாய் எதையும் சொல்லிவிட முடியாது.. //
முதல் கவிதை! நன்கு முற்றிய விதை! விதைத்தன் விளைவு! இன்று உங்களிடமிருந்து இனிமையான கவிதைக் கனிகள்! வாழ்த்துக்கள்!
மிகவும் நன்றி ஐயா..
Deleteபெண்ணை நேசித்து புண்ணாகிப்போனேன்
ReplyDelete>>>
கடைசில உங்க தாடியோட பின்னணி வெளில வந்துடுச்சே!
தாடி என்றால் தாவணிதானா?
Deleteசுய அறிமுகம் சூப்பர் சகோ
ReplyDeleteநன்றி..
Deleteதமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்.
ReplyDelete//பள்ளியில் இறந்த நான்
ReplyDeleteகல்லூரியில் உயிர்த்தெழுந்தேன்..
கடிவாளம் கழட்டப்பட்டது..
பெண்ணை நேசித்து புண்ணாகிப்போனேன்-என்
PEN னை நேசித்து WIN ஆகிப்போனேன்..//
அட.. அட..
என்னா ஒரு ரைமிங்கு..
நினைவுக் கவிதை அற்புதம்! தன்னைத் தானே இப்படி கவிதையில் அறிமுகப்படுத்திக் கொள்வது எல்லோருக்கும் கிட்டாது! நல்ல படைப்பு!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள். கவிதை அருமையாக இருந்தது சார்.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteசுய அறிமுகமாய் ஒரு கவிதை.... அருமை தோழரே.
ReplyDeleteபதிவர் சந்திப்பில் தங்களை முதன் முதல் சந்தித்த போது கிடைத்த மகிழ்ச்சி, தங்களது முதல் கவிதையை படித்தபோதும் கிடைத்தது. அருமை.
ReplyDeleteS பழனிச்சாமி
அன்பின் மதுமதி - 2000த் தில் வெளியான கவிதைத் தொகுப்பில் என்னுரை என எழுதிய முன்னுரை அருமை. எத்தனை எத்தனை நிகழ்வுகள் - மலரும் நினைவுகளாய் அலசி ஆய்ந்து அசை போட்டு மகிழ்ந்து விரலின் நுனியில் இல்லாமல் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த உணர்ச்சி கரமான கவிதை. மிக மிக இரசித்துப் படித்தேன் மகிழ்ந்தேன்.
ReplyDeleteகட்டிய அணைக்குள் இருந்த கற்பனை ஊற்றுக்ள் அணையினை உடைத்து வெளியே வர - எழுது கோலின் பசி போக்கியது நன்று.
கிராமத்தில் பிறந்தது - மாற்றிடம் தேடியது -
கலகம் காணூம் வாய்ப்பினைத் தவிர்த்து உலகம் காண பள்ளீயில் நுழைந்தது - ஆகா ஆகா - என்ன கற்பனை !
பள்ளிப் பருவத்தில் உணர்வுகள் உசுப்பப்பட - விபரம் தெரியாத வயதென உடனே அவைகள் சவரம் செய்யப்பட -
பாடம் படிக்க வேண்டிய நேரத்தில் படங்கள் பார்க்க வாய்ப்பில்லை
கல்வி கற்க வேண்டிய நேரத்தில் செல்வியைக் கற்க வாய்ப்பில்லை.
பள்ளீயில் போட்ட கடிவாளம் கல்லூரியில் கட்டுக்கடங்காமல் கழட்டப் பட - பெண்ணை நேசித்து புண்ணாகிப் போக - பேனாவினை நேசித்து, வீணாவதிலிருந்து தப்பித்தது நன்று.
கழுத்தை நேசித்து விழுந்து - எழுத்தை நேசித்து எழுந்தது நன்று.
எழுதுகோலைப் கர்ப்பிணியாக்க - எழுத்துகள் பிரசவித்தன
விரல்களீன் கூட்டணீயில் எழுதுகோலும் சேர - தலையெழுத்தில் உள்ள பிழை எழுத்தினைத் திருத்த முயன்றமை நன்று.
மதுமதி - 12 ஆண்டுகட்கு முன்னரே - கற்பனை வளமும் - கவிதை எழுதும் திறமும் - நேரமும் ஒருங்கே அமையப் பெற்று -
கவிதை நூல் வெளியிட்டமை நன்று.
ஒவ்வொரு சொல்லினையிம் ஆழ்ந்து படித்து இரசித்து மகிழ்ந்ந்தேன் மதுமதி
சில மணித் துளிகள் இங்கு செலவிட்டு மகிழ்ந்தேன்
நல்வாழ்த்துகள் மதுமதி - நட்புடன் சீனா
சிரமத்துடன் உற்பத்தியானவன் நான்....
ReplyDeleteகிராமத்தின் கிளைகளெல்லாம்
பரந்து விரிந்து ஏறி இறங்கி உருண்டு புரண்டு
பஞ்சாயத்து சாலைகளில் நீந்தி
சந்தனப் புழுதிகளை பூசி பரிணமித்திருக்கிறேன்..
சிறப்பான அறிமுகம்.