புது வரவு :
Home » , , , , » தமிழ்த்தாத்தாவை தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே..

தமிழ்த்தாத்தாவை தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே..

தமிழை வாசிக்கும் நேசிக்கும் சுவாசிக்கும் தமிழன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவன் கட்டாயம் உ.வே.சா வைப் பற்றி தெரிந்து வைத்திருக்கவேண்டும்.அடுத்த தலைமுறையினரையும் உ.வே.சாவை அறியச் செய்யவேண்டும்.உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா. 'தமிழ் தாத்தா' என அன்போடு அழைக்கப்படுபவர். சிறந்ததொரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருக்கிறார்.தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.!

1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ம் நாள் தமிழ் நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள "உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.
தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி "மகா மகோ பாத்யாயர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, "இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் "தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே சேலம் இராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்து நட்பு கொண்டார். ஒருநாள் வழக்கம் போல் இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் சீவக சிந்தாமணியைப் பற்றித் தெரியுமா என முதலியார் வினவினார். தனது ஆசிரியரிடம் சிற்றிலக்கியங்கள் பெரும்பாலானவற்றை மட்டுமே கற்றிருந்த உ.வே.சா சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று அறிந்தார். இராமசாமி முதலியார் உ.வே.சா வுக்கு அளித்த சமண சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதி அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது. சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.



சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டை மணிமாலை நூல்கள், இதர சிற்றிலக்கியங்கள் போன்றவை அவர் அச்சுப் பதித்தவற்றுள் முக்கியமானவை ஆகும்.

உ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.


    உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ. வே. சா நூல்நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரிதம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950 ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.

உ.வே.சா பிறந்த இன்றைய நாளில் அவரைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.



Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

6 comments:

  1. தமிழ்த் தாத்தாவைப் பற்றிய சிறப்பு பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. தமிழ் தாத்தா பற்றிய தகவல்கள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. உ.வே.சுவாமிநாத ஐயான்னா தமிழ்தாத்தான்னு மட்டும்தான் தெரியும். மேலும் அதிக தகவல்களை தெரிந்து கொண்டேன். பிள்ளைகளுக்கும் குறிப்புகள் எடுத்து கொடுத்துட்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  4. தமிழ்த் தாத்தா எனும் அளவில் மட்டும் தெரிந்தவர் பற்றி நிறைய செய்திகள் அறிந்து கொண்டேன் நன்றி...

    ReplyDelete
  5. அருமையான பதிவு.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com