புது வரவு :
Home » , , , , » என்ன அம்மணி சொன்ன? புதுக்கோட்டையில பதிவர் திருவிழாவா?

என்ன அம்மணி சொன்ன? புதுக்கோட்டையில பதிவர் திருவிழாவா?

  கத்தரி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த சின்ராசுவை நோக்கி வந்த அம்மணி,


"என்னங்க இந்த வருஷம் பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில நடக்குதாம்"

       வலது பக்க மடையை அடைத்து இடது பக்க மடையை வெட்டி நீரைச் செலுத்திவிட்டு நிமிர்ந்த சின்ராசு,

"என்ன அம்மணி சொன்ன? புதுக்கோட்டையில் பதிவர் திருவிழாவா? என்று கேட்டுக்கொண்டே தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்தான்.

"ஆமாங் மாமான்னா.. ரெண்டு வருசமா சென்னையில நடத்துனாங்க"

"அதுக்குத்தான் குடும்பத்தோட போயிருந்தமே அம்மணி"

"அப்புறம் போன வருஷம் மதுரையில நடத்துனாங்க..,அதுக்குத்தான் நாம போகலை"

"பதிவர் சந்திப்புன்னா தவறாம கலந்துக்குற புருஷன் பொஞ்சாதின்னு பேரு வாங்குன ஆளுங்க நாம, ஆமா ஏம்புள்ள மதுரையில நடந்த சந்திப்புக்கு நாம போகலை?

    என்று கேட்டவனைப் பார்த்த அம்மணி,

"ஏனுங் மாமா.. தம்பி புள்ள பெரிய மனுசியாயிட்டா தெரட்டிக்கு போகோணும் அதனால மதுரைக்கு வர முடியாதுன்னு தமிழ்வாசி பிரகாஷுக்கு போன் பண்ணி  சொன்னோமே மறந்துப்புட்டீங்களே மாமா"

"அட ஆமா அம்மணி"

" இந்த வருஷம் புதுக்கோட்டையில நடத்துறாங்களாம் மாமோவ்"

"ஒனக்கு ஆரம்மணி சொன்னது?

"என்ன மாமா இப்படி கேட்டுப்போட்டீங்க. அதுக்குத்தான் மாசம் ஒரு தடவையாவது பிளாக்க தொறந்து பாக்கோணும்ன்னு சொல்றதுங் மாமோவ்.. ஆளாளுக்கு புதுக்கோட்டையில பதிவர் சந்திப்புன்னு பதிவைப் போட்டுக்கிட்டே இருக்குறாங்க"

"அப்படியா? ஆச்சர்யமா இருக்கே அம்மணி!..புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பு வக்கிற அளவுக்கு அந்த ஊர்ல பதிவர்கள் இருக்காங்களா என்ன ?

"நானும் மொதல்ல அப்படிதான் மாமா நெனச்சேன்..அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது புதுக்கோட்டை மாவட்டத்துல மட்டும் 100 பதிவர்களுக்கும் குறையாம இருக்காங்களாம் மாமா"

"அப்படியா அம்மணி..சரி, புதுக்கோட்டையில பதிவர் சந்திப்பு நடத்தலாம்ன்னு எப்ப முடிவு பண்ணினாங்களாம்? யாரு முடிவு பண்ணினது?"

"அதுவா மாமா., மொத ரெண்டு சந்திப்பு சென்னையில நடந்துச்சில்லையா ,ரெண்டாவது மாநாட்டு முடிவுல அடுத்த சந்திப்பு மதுரையில நடக்கும்ன்னு அறிவிச்சாங்கில்ல"

"ஆமா"

"அதே மாதிரி போன வருஷம் மதுரையில நடந்த 3 வது பதிவர் சந்திப்புலயே புதுக்கோட்டையில் 4 வது பதிவர் சந்திப்புன்னு அறிவிச்சுட்டாங்களாம்"

''ஓ..சரி அம்மணி புதுக்கோட்டையில கணிசமான பதிவர்கள் இருக்காங்க சரி இதை எடுத்து ஒருங்கிணைச்சு பண்றத்துக்கு நாலஞ்சு பேராவது இருப்பாங்கல்ல..அவுங்களப் பத்தி கொஞ்சம் சொல்லு"

"நாலஞ்சு பேரா?! நாப்பது பேரு இருக்காங்க மாமோவ்..அதுல முக்கியமானவங்கன்னு பாத்தா கவிஞர் முத்து நிலவன்..அப்புறம்.."

"கவிஞர் முத்துநிலவனா" யோசித்த சின்ராசு கேட்டான்.."ஏன் அம்மணி நான் ஏற்கனவே கேள்விப்பட்ட பேரா இருக்கே..ம்.. ஏ புள்ள லியோனி பட்டி மன்றத்துல பேசுவாரே அவருதானே"

"ஆமா மாமா கரெக்டா சொன்னீங்க..இவர்தான் புதுக்கோட்டையில் மாநாடு நடக்க புள்ளையார் சுழி போட்டவர் வளரும் கவிதைகள் ன்னு அவரோட பிளாக் மாமா"

"அட அவரை நல்லாத் தெரியும் அம்மணி.. சமீபத்துல ''முதல் மதிப்பெண்கள் வாங்க வேண்டாம் மகளே'' ன்னு புத்தகம் எழுதி நெறய்ய பரிசு வாங்கினாரே..ம் தெரியும் தெரியும்"

"அவருக்கு உறுதுணையா கஸ்தூரி ரங்கன், மு.கீதா, வைகறை, ஸ்வாதின்னு பலபேர் இருக்காங்க மாமா"

"ஓ..அப்ப விழாவுக்கான தேதி எல்லாம் முடிவாயிடுச்சா அம்மணி"

"ஆமா மாமா 11.10.15 ந் தேதி நாயித்துக்கெழம புதுக்கோட்ட ஆலங்குடிச் சாலையில இருக்குற பீவெல் ஆஸ்பித்திரிக்கு எதுத்தாப்புல இருக்குற ஆரோக்கியமாதா மக்கள் மன்றத்துல நடக்குதான் மாமோவ் "

"அப்படியா என்னென்ன பண்ணப் போறாங்களாம் அதப்பத்தி ஏதாவது போஸ்ட் போட்டிருக்காங்களா?"

"ம்..போட்டிருக்காங்க..அதுக்கு முன்னாடி நடந்த நிகழ்வுகளை ஆராய்ஞ்சு எப்படி பண்ணலாமுன்னு பல கூட்டங்களைப் போட்டு பேசியிருக்காங்க..அது போதாதுன்னு விழா ஏற்பாட்டாளர்களில் முக்கியமானவரான கவிஞர் முத்து நிலவன் சென்னை, கோயமுத்தூர்ன்னு பதிவர்களை சந்திச்சும் பல பதிவர்கள்கிட்ட போன்ல பேசியும் எப்படி பண்லாமுன்னு ஆலோசனை கேட்டு முடிவு பண்றாராம் மாமா..

8.8.2015 சனிக்கிழமை சென்னைப் பதிவர்களிடம் ஆலோசனை கேட்பதற்காக கவிஞர் முத்துநிலவன் சென்னை வந்திருந்தாராம்"

"எங்க சந்திச்சாங்களாம் டிஸ்கவரி புக் பேசஸ்லயா"

"அங்கதான்.. பதிவர் ஆலோசனைக் கூட்டம்னாலே அங்கதானே நடக்கும்"

"சரி யார் யார் கலந்துக்கிட்டாங்களாம்"

"அதுல புலவர் இராமநுசம், மதுமதி, கே.ஆர்.பி செந்தில், அரசன் , பாலகணேஷ், கேபிள் சங்கர், வேடியப்பன், கீதா, ஸ்வாதி ன்னு பலபேர் கலந்துகிட்டாங்க.. வர்றேன்னு சொல்லியிருந்த ஆரூர் மூனா, செல்வின், சிவக்குமார், முரளிதரன்,சசிகலா போன்றவங்கெல்லாம் கடைசி நேரத்துல வர முடியாம் போயிடுச்சாம். அப்புறம் சனிக்கிழமை சந்திப்பு நடந்த காரணத்தினால பல பதிவர்களால கலந்துக்க முடியலையாம் "

"ஆமா புள்ள நாயித்து கெழம வச்சிருந்தாங்கன்னா கிட்டத்தட்ட 30 பேர் கலந்திருப்பாங்க., சரி என்ன முடிவு பண்ணினாங்களாம்"

"வழக்கம் போல இல்லாமல் வலைப்பதிவர் அறிமுகம்,கவிதை-ஓவியக்கண்காட்சி,  தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியிடல், இடையிடையே இன்னிசைப்பாடல்கள், நூல்வெளியீடுகள், குறும்பட வெளியீடுகள், உரைவீச்சு, விருதுகள் வழங்குதல்ன்னு பெருசா பண்ண திட்டபோட்டிருக்காங்களாம் மாமா..விழாவுக்கு வர்ற எல்லாருக்கும் இலவசமாக  “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”  ங்கிற தலைப்புல புத்தகம் தர்றாங்களாம்"

"என்னது பொஸ்தவமா? என்ன அம்மணி?..எதுக்கது? என்ன விவரங்க அதுல இருக்கும்? "

"மாமா.., யாராரு எந்தெந்த பிளாக்குல எழுதுறாங்க அவுங்களோட பிளாக் அட்ரஸூ அவுங்களோட வீட்டு அட்ரஸூ போன் நெம்பர் அந்த பதிவர் இயக்கிய குறும்படங்கள், பெரும்படங்கள்ன்னு அனைத்து வெவரங்களையும் சேர்த்து அந்த புத்தகத்துல அச்சடிச்சு வர்றவங்களுக்கு கொடுக்கப்போறாங்களாம்"

"ஓ..ஒருத்தர பத்தி இன்னொருத்தர் தெரிஞ்சிக்கிறத்துக்கான ஏற்பாடா இருக்கும்.நல்ல விசயம் தான் அம்மணி..ஆனா ஒண்ணு கதை, கவிதை, கட்டுரைன்னு எழுதுற பதிவர்கள் மட்டும்தான் முழுவிபரங்களை கொடுப்பாங்க.. முகமூடிப்பதிவர்களும் சில பெண் பதிவர்களும் அதைச் செய்யமாட்டாங்க"

"ஆமாங் மாமா நீங்க சொல்றதும் சரிதான்..இந்த புக்குல இடம் பெறணும்னா உங்க விவரங்களைக் கொடுங்கன்னு கேட்டிருக்காங்க'"

"பாப்போம் அம்மணி எத்தனை பேரு உண்மையான வெவரங்களைக் குடுப்பாங்கன்னு"

"ஏனுங்க மாமா நம்ம ரெண்டு பேரைப்பத்தி வெவரம் சொல்லலாமா வேண்டாமா"

"என்ன புள்ள இப்படி கேட்டுப்போட்ட ரெண்டு வருஷமா பிளாக்குல எழுதுனத எல்லாம் கஷ்டப்பட்டு தொகுத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி 3 புக்கு போட்டிருக்கேன்..இதுவரைக்கும் 4 குறும்படம் இயக்கியிருக்கேன்..இப்பவும் தமிழ்மணத்துல 20 ஓட்டு வாங்கிட்டிருக்கேன்.என் பதிவைப் படிக்காமலையே 'அருமை எப்பவும் போல' ன்னு பின்னூட்டம் போட்டு த.ம 1 ங்கிறவனுக்கு பதிலுக்கு நானும் போயி ஏதாவது நாலு வரியை காப்பி பண்ணி கருத்து டப்பாவுல போட்டுட்டு த.ம 2 ன்னு இன்னமும் போட்டுட்டு இருக்கேன்.. இதை ஒண்ணு விடாம பதிவு பண்ணலாமுன்னு இருக்கேன்..அப்பத்தானே நான் எவ்வளவு பெரிய பதிவர்ன்னு ஊரு உலகத்துக்கு தெரியும்" ன்னு மூச்சு விடாமல் சொல்லி முடிக்க,
"மாமா த.ம 1 போடறவங்களதானே கலாய்க்கிறீங்க" என்று அம்மணி கேட்க, "அதெல்லாம் ஒண்ணும் அம்மணி" என்றவாறு பேச்சை மாற்றினான்.

"அப்புறம் வேறென்ன அம்மணி சிறப்பான விசயம்"

"ம்..இருக்கு மாமா.. பதிவர்களுக்கு விருது வழங்கும் விழா நடக்க இருக்குதாம்"

"அடடே அப்படியா..எந்த அடிப்படையில் குடுக்குறாங்களாம்"

"நான் சொன்னா உங்களுக்கு புரியாது"

         என்று சொன்னவள், தன்னுடைய ஆண்ட்ராய்டு போனை எடுத்து, இதோ இந்த லிங்கை சொடுக்குறேன் நீங்களே படிச்சிக்கோங்க என்று சொல்லிவிட்டு லிங்கைத் தட்ட பக்கம் விரிந்தது..

“வலைப்பதிவர் திருவிழா-2015“ விழா, விருதுகள் விவரம்


"அடடே படிக்கவே ஆர்வமா இருக்கு அம்மணி..சந்திப்பு மிகப் பிரம்மாண்டமா நடக்கும் போலிருக்கே"

"ஆமாம் மாமா அங்க இருக்குற பதிவர்கள் பெரும்பாலும் ஆசிரியப் பெருமக்கள் அதனால் சிறப்பா நடத்துவாங்கன்னு எதிர்பாக்குறேன்"

"கட்டாயம் அம்மணி.,மத்த ஊர்ல இருக்குற மாதிரி பதிவுலக அரசியல் அங்க இருக்காதுன்னு நெனக்கிறேன்..பாப்போம்"

"என்னங் மாமா அப்ப ரெண்டுபேருக்கும் டிக்கெட் போட்டுடவா"

"இன்னும் என்ன அம்மணி உடனே போடு.. நாம போறோம் ஆளுக்கொரு விருது வாங்கறோம்"

"மாமா அதுக்கு முன்னால வர்றத உறுதி  படுத்த படிவத்தை நெரப்பி அனுப்பணுமாம்"

"அப்புறம் என்ன உடனே அனுப்பிபோட்டு மிச்ச வேலையப் பாரு"

என்று சொன்னவன் தன் வேலையைப் பாக்க தன்னுடைய செல்போனிலேயே திண்டுக்கல் தனபாலன் வலைதளத்திற்குச் சென்றாள்.. வலை திறக்கவேயில்லை..சுற்றிக்கொண்டே இருந்தது..

"ச்சே இந்த திண்டுக்கல் தனபாலனோட வலைப்பூ அவ்வளவு சீக்கிரம் ஓபன் ஆகாது.. போன தடவியே சொன்னேன்.. தேவையில்லாத கேட்ஜெட் எல்லாத்தையும் தூக்குங்க..அப்புறம் அங்கங்க டாலடிக்கிற அனிமேசன் பிக்சரையெல்லாம் வக்காதீங்க.. அப்புறம் இதை சொடுக்கவும் அதை சொடுக்கவும்ன்னு ஒரு பதிவ படிக்க நாலஞ்சு லிங்க்க சொடுக்க வைக்காதீங்க..மொதல்ல இங்கே அங்கே ங்கிற டேக் டைவர்சன் போர்டையும் தூக்குங்கன்னு சொன்னா கேக்குறாரா..பதிவர் சந்திப்புக்கு வரட்டும் வச்சுக்கிறேன்"

என்று புலம்ப சின்ராசு சத்தமாக சிரித்தான்..

"ஏ புள்ள திண்டுக்கல் தனபாலனை திட்டாதடி அவருக்கு வலைச்சித்தர்ன்னு  பட்டப்பேரு வச்சிருக்காங்க"

"அப்படியா வலைச்சித்தர் வலைச்சித்தர்ன்னு அடிக்கடி கண்ணுல பட்டுச்சு அது இவர்தானா!..அதுசரி அவருக்கு ஏன் இந்தப் பேரை வச்சாங்களாம்?"

"அதப்பத்தி தெரியல அம்மணி.. அவரு போன் நெம்பர்தான் உங்கிட்ட இருக்குதுல்ல அவருக்கு போன போட்டு  நீயே கேளு"

  என்று சின்ராசு சொல்ல உடனே திண்டுக்கல்லாருக்கு போனை போட்டாள் அம்மணி..ரிங் போயிக்கொண்டேயிருந்தது..
------------------------------------------------------------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

37 comments:

 1. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பதிவின் வழியே உங்களை தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஐயா.. எப்படியிருக்கிறீர்கள்? பின்னூட்டத்தில் உரையாடி வெகுநாட்கள் ஆகிவிட்டது. அல்லவா..

   Delete
 2. முகநூலில் தங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கிறேன்...
  வலைப்பூவில் இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.
  வலைப்பதிவர் மாநாடு குறித்து மிக அழகாக... ரசிக்கும் விதமான பகிர்வில் கொடுத்து அசத்தீட்டீங்க அண்ணா...
  அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஓ..மகிழ்ச்சி.. இனி வலையில் தொடர்ந்து எழுதலாமென இருக்கிறேன்.. நேரமிருந்தால் வாருங்கள்.. பிடித்திருந்தால் வாசியுங்கள்..

   Delete
 3. ஆகா மதுமதி அய்யா சும்மா பூந்து விளாசிட்டீங்க போங்க..
  அருமையான உத்தி மாமோவ்!... அடப் போங்கய்யா உங்க பாணி அப்படியே ஒட்டிக்கிச்சில்ல... என்ன நாஞ்சொல்றது? த ம 3

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி ஐயா..

   Delete
 4. என் வலைப்பக்கத்து இணைப்புல குடுத்துட்டேன்..நன்றி

  ReplyDelete
 5. நானும் வரலாமுன்னு இருக்கனுங்க, அம்மணி. புதுக்கோட்டைல பாப்பமுங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க! வாங்க! சந்திப்பமுங்கோவ்..

   Delete
 6. பேசி ரொம்ப நாள் ஆச்சி... பேசிடுவோம்...

  ReplyDelete
  Replies
  1. ஆமா நண்பா.. வர்றேன் நல்லா கவனிச்சு அனுப்புங்க..:)

   Delete
 7. சில காரணங்களுக்காக mobile view தடை செய்து வைத்துள்ளேன்...

  ReplyDelete
  Replies
  1. மொபைலை விடுங்க விடுங்க கம்பியூட்டர்ல பாக்கவே சிரமாமா இருக்கு நண்பா..

   Delete
 8. த ம என்று போடுற காலமெல்லாம் போயிண்டே :)

  ReplyDelete
  Replies
  1. என்னங்க சொல்றீங்க..அடடே ஆச்சர்யக்குறி!

   Delete
 9. வணக்கம் கவிஞரே! பார்த்து பேசி நாட்கள் ஆகிவிட்டன. புதுக்கோட்டையில் சந்திக்க முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கய்யா..எப்படியிருக்கீங்க? புதுக்கோட்டையில சந்திப்போம்..

   Delete
 10. சனிக்கிழமையா பார்த்து சந்திப்பு வச்சிட்டு இங்க பதிவு வேற...ம்ம்
  புதுக்கோட்டையில் இருக்கு உங்களுக்கு வாங்க! வாங்க!

  ReplyDelete
  Replies
  1. ஹலோ..இதுக்கு நான் பொறுப்பில்லை..முத்துநிலவன் ஐயாவிடம்தான் கேட்கவேண்டும்..

   Delete
  2. அடடா... இதுமாதிரிப் புலம்பல்கள் நிறைய வந்ததால நிகழ்ச்சிய அடுத்த நாளைக்கு மாற்றி அக்டோபர் 10க்கு பதிலா 11ஞாயிறுன்னு வச்சிட்டம்லா..?

   Delete
 11. வணக்கம் கவிஞரே நலமா ? அருமையாக புருசன் – பொஞ்சாதி ஸ்டைலில் அசத்திட்டீங்க வாழ்த்துகள்.
  த.ம. 1 அப்படினு எழுதினால் நக்கலடிப்பீங்க அதனால எழுத மாட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி..அப்படியில்லை தோழர் பிடித்திருந்தால் வாக்களிக்கிறோம் அவ்வளவுதான்.. அதைவிடுத்து நான் போட்டிருக்கிறேன் பார்..நீயும் போடு என்பதைப் போல் எதற்கு?

   Delete
 12. ரொம்ப நாள் கழிச்சி பதிவு எழுதினாலும் அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு - பதிவர் சந்திப்பிற்கான அறிவிப்புடன்!

  இந்த பாணி கூட நல்லா இருக்குங்க!

  ReplyDelete
  Replies
  1. இந்த பாணியில ஏற்கனவே நிறைய எழுதியிருக்கேன் ஐயா..

   Delete
 14. நானும் பதிவு செய்துவிட்டேன்
  அற்புதமாக அம்மணிக்கும் எங்களுக்கும்
  அனைத்து விவரங்களையும்
  தெரிவித்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி ஐயா..

   Delete
 15. ஆஹா அருமைங்க.....புதுகை வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் விழாவிற்கு அம்மணியையும் உங்களையும் வரவேற்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சகோதரி..

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 16. வாழ்த்துக்கள்சகோ வரவேற்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி..

   Delete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com