தமிழ்மண நட்சத்திர இடுகை - 4
வி.ஏ.ஓ தேர்வு நியாயமாக நடக்குமா?
வி.ஏ.ஓ தேர்வு நியாயமாக நடக்குமா?
வணக்கம் தோழமைகளே.. தேர்வை எழுதி வெற்றி பெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்து பணியாற்றும் முனைப்பில் தேர்விற்கு படித்துக் கொண்டிருப்பீர்கள். கடந்த மாதங்களில் நடந்து முடிந்த குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு தயாரானதைப் போலவும் அதற்கு தீவிரமாகப் படித்ததைப் போலவும் வரும் 30 ஆம் நடக்கவிருக்கும் வி.ஏ.ஓ தேர்வுக்கு பெரும்பாலோனோர் ஆர்வம் காட்டவில்லை.படித்ததை வைத்தே எழுதுவோம் என்ற மனநிலையிலேயே பலரும் இருப்பதை தெளிவாக அறிய முடிகிறது.அதற்கு காரணம் நடந்த முடிந்த இரண்டு தேர்வுகளும் தான்.
ஆம் இந்தத் தேர்வுகளை எழுதுவதற்காகவே இளம்பெண்கள் சிலர் திருமணத்தை தள்ளி வைத்துக் கொண்டும் ஆண்கள் பலர் கிடைக்கும் தனியார் வேலையை உதறித்தள்ளிவிட்டு வீட்டில் இருந்தபடியும் சில ஆயிரங்கள் செலவு செய்து வெளியூரில் தங்கி பயிற்சி பள்ளியில் படித்தபடியும் வருகிறார்கள்.நியாயமான முறையில் தேர்வு எழுதி தாங்கள் தோல்வியைத் தழுவினால் யாரும் மனம் வருந்தப் போவதில்லை.மாறாக அடுத்த முறை கட்டாயம் தேர்வில் வெற்றியைப் பெற வேண்டும் என்ற உத்வேகத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
ஆனால் இப்போது மாணவர்களுக்கு தன் மேல் இருக்கும் நம்பிக்கையும் அரசுத் தேர்வின் மேல் இருக்கும் நம்பிக்கையும் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து வருகிறதென்றால் கடந்த இரண்டு தேர்வுகளினால் ஏற்பட்ட குழப்பங்கள்தான்.
கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் பலர் பணத்தைக் கட்டியே தேர்வில் வென்று வேலையைப் பெற்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணமே இருந்தது.அப்போதெல்லாம் ஒருவர் எத்தனை மதிப்பெண்கள் வாங்குவார்,எப்போது முடிந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது வரும் என்பதை தேர்வாணையம் தேர்வை எழுதியவர்களுக்கு சொல்லாமல் இருந்து வந்தனர்.சென்ற ஆண்டு நடந்த வி.ஏ.ஓ தேர்வில்தான் அதிகப்படியான ஊழல் நடந்ததாக வெளியான செய்தி வெளியே கசிய தமிழக அரசு அதிரடியாய் தலையிட்டு அதில் சம்பந்த பட்டவர்களை பதவி நீக்கம் செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியது.அதன்படி பணத்தை வாங்கிக்கொண்டு பதவியை வழங்கியது பகிரங்கமாக கண்டுபிடிக்கப்பட்டது.
அதுவரை தேர்வாணையத்தை நம்பியிருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் மன உளைச்சலும் அடைந்ததோடு தேர்வாணையத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்.அடுத்ததாக தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் காவல்துறை ஆணையர் திரு ஆர்.நட்ராஜ் அவர்களை அரசு அதிரடியாக நியமிக்க தேர்வாணையத்தின் மீது இழந்த நம்பிக்கையை மாணவர்கள் மீட்டெடுத்தனர்.
அவர் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தேர்வாணையத்தின் சில சட்ட திட்டங்கள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கொஞ்சம் உத்வேகத்தையும் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்க வைத்தது.முக்கியமாக தேர்வு எப்போது நடக்கும் அதன் முடிவுகள் எப்போது வரும் என்பதைப் பற்றிய விபரங்களை திட்டமிட்டு முன்கூட்டியே வெளியிட்டது,தேர்வு நடந்த அந்நாள் இரவே சரியான விடைத்தாளை இணையத்தின் மூலமாக வெளியிட்டது,தங்களின் மதிப்பெண்களை தாங்களாகவே அறிந்து கொள்ளும் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என ஆர்.நட்ராஜ் அவர்களின் திட்டமிடுதல் மிகச் சிறப்பாகவே இருந்தது.அதன் படி கடந்த மாதம் நடந்த குரூப் 4 தேர்வு முன் கூட்டியே அறிவித்த படி நடந்தது.அந்தத் தேர்வு நடந்து முடிந்த அந்நாள் இரவிலேயே சரியான விடைத்தாளை மாணவர்கள் பார்க்கும் வண்ணம் வெளியிட்டது போன்றவை தேர்வாணையத்தின் மீது இன்னும் நம்பிக்கையை அதிகரித்தது.
சென்ற மாதம் ஆகஸ்டு மாதம் 12 ஆம் நாள் குரூப் 2 தேர்வு அதன் படியே சிறப்பாக எப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்போடு நடந்து முடிந்தது.ஆனால் அன்று தேர்வு எழுதிய மாணவர்கள் வீடு திரும்புவதற்குள் வினாத்தாள் வெளியானதாக வந்த தகவல் மாணவர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோட்டில் வினாத்தாளை கொண்டு வந்திருந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினால் தொடர் சங்கிலியாக சென்று கொண்டிருக்கிறதே தவிர அது இன்னும் முடிந்தபாடில்லை.ஏற்கனவே தேர்வாணையத்தின் மீது நம்பிக்கையை இழந்திருந்த மாணவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இது இழக்க வைத்தது.விசாரணையின் முடிவு என்னவென்று இதுவரை தெரியவில்லை.
இந்த நிலையில் நடந்த முடிந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை.அதைப்பற்றி எந்த செய்திகளும் வரவில்லை. அந்த முடிவுகள் வெளிவருமா வராதா என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்த முடிவுகளை வெளியிடக்கூடாது என்று ஒரு தரப்பு தடை உத்தரவை வாங்கி விட்டதாக செய்திகள் வருவதால், அந்த தேர்வை சிறப்பாக எழுதிய மாணவர்களுக்கு இது மிக மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த காலங்களில் தேர்வாணைய ஊழியர்கள் ஊழல் செய்தார்கள் ஆனால் இந்த முறை தேர்வாணையம் கட்டுக்கோப்பாக செயல்பட்டும் எங்கோ ஒரு பக்கம் ஊழல் நடந்திருக்கிறது.இதற்கிடையில் வரும் 30 ஆம் தேதி வி.ஏ.ஓ தேர்வு நடக்கவுள்ளது.இந்த தேர்வு முறையாய் இருக்குமா? வினாத்தாள் வெளியாகாதா? அதை உறுதியாகச் சொல்லமுடியுமா? என்ற ஏராளமான கேள்விகளை சுமந்தபடியே தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் புத்தகத்தை புரட்டாமலேயே அதன் அட்டைப் படத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..
கவலைப்பட தேவையில்லை தோழர்களே.. உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள் இந்த முறை அரசு தம் பணியை சிறப்பாகச் செய்யும்.
பொருத்துருந்து பார்போம்!
ReplyDeleteஅந்த நம்பிக்கையில்தான் இன்னும் பலபேர் இருக்கின்றனர். எப்பாடுப்பட்டேனும் அரசு வேலை வாங்க வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக, இராப்பகல் பாராமல் கண்விழித்துப் படித்து என்ன பயன்...?
ReplyDeleteபணம் இருப்பவர்களுக்கு இவ்வுலகம் சொந்தம்.. பணத்தை கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற சிந்தனையே இத்தகைய ஊழல் நிகழ்வுகள் ஏற்படுத்துகிறது..
இதனால் பாதிக்கப்படுவது படிப்பறிவை மட்டுமே நம்பி இருக்கும் ஏழைகள்தான். இந்த தேர்வில் இல்லாவிட்டாலும் அடுத்த தேர்வில் நிச்சயம் நன்றாக தேர்வெழுதி வெற்றிப்பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இவர்கள் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள்..
என்று தீரும் இந்த ஊழலும், இலஞ்சமும்.... இத்தகைய கயவர்கள் இருக்கும்வரை என்றுமே ஏழைகளுக்கு நல்ல வழி பிறக்காது என்றே தோன்றுகிறது.
நீங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு கருத்தும் உண்மை. நன்றாக தேர்வுக்கு தயாரானவர்கள் கூட தற்போது தேர்வுக்கு படிப்பதில் மெத்தனம் காட்டுகிறார்கள். காரணம் இதுபோன்ற இழி செயல்களின் எதிரொலிதான்...
எத்தனை படித்தென்ன...? எல்லாம் பணமுள்ளவர்களுக்கே போய்சேருகிறது? நாம் ஏன் படிக்க வேண்டும். எதற்கு படிக்க வேண்டும்? அப்படியே படித்து தேர்வெழுதினாலும் நமக்கு வேலை கிடைக்கப்போவதில்லை.. என்ற எண்ணவோட்டத்தை வரவழைத்து விட்டது.
இத்தகைய தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். லட்சக்கணக்கானவர்களின் நம்பிக்கை பொய்யாக்கியவர்களுக்கு நிச்சயம் தண்டனைகள் மிக கடுமையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அரசு மீதும், அரசு அதிகாரிகளின் மீதும் மீண்டும் நம்பிக்கை வரும். கண்துடைப்பாக ஏதேனும் செய்துவிட்டு, நாட்கள் பல சென்றால் மறந்துவிடுவார்கள் என்று அரசும் அரசு அதிகாரிகளும் இருந்துவிட்டால், இந்த நிலையே மீண்டும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். என்ன நடக்கிறதென்று..!
பகிர்வுக்கு மிக்க நன்றி மதுமதி அவர்களே..!
இந்த முறை சிறப்பாக, எந்த வித தடைகளும் இல்லாமல் நடைபெற வேண்டும்.
ReplyDeleteநட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் சகோ
தேர்வு நியாயமான முறையில் நடைபெறும் என நம்புவோம்!
ReplyDeleteம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம் மதுமதி - சிறப்பாக - எவ்வித ஊழலுமின்றி நடைபெற பிரார்த்தனைகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதமிழ் மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்.
ReplyDeleteபொறுத்திருந்து பார்போம் என்ன நடக்கிறது என்று....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)