புது வரவு :
Home » , , , , » சேடப்பட்டி சென்னையானால்

சேடப்பட்டி சென்னையானால்

             இன்று மகளிர் தினம்..சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.. பல துறைகளிலும் நகரத்து பெண்கள் வளர்ந்து வருகிறார்கள்.. மகிழ்ச்சி.. ஆனால் தமிழகத்தின் பல கிராமங்களிலும் இன்னும் பெண்மை அடுப்பூதிக் கொண்டேதான் இருக்கிறது..அதை நினைக்கும் போது ஏனோ மனம் வலிக்கத்தான் செய்கிறது.நான் நேரில் கண்ட விசயத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கவிதையாக எழுதியிருந்தேன்..இன்று மகளிர் தினம் என்பதால் அதை மீண்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்..இந்நிலை என்று மாறப்போகிறதோ?


 
    
                              .

                               

                                     தனது பதிமூன்றாவது

                                     அகவையில் அவள்

                                   ''அம்மா''வென அலறினாள்

                                    அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு..

                                    அடுத்த நாள்
                                    குடிசைக்குள் குடிபுகுந்தாள்..


                                  அடுத்த வாரம்
                                  அவளைக் குமரியென்றனர்..
                                  குடிசையை பிரித்தனர்..
                                  பந்தலிட்டனர்..பந்தியிட்டனர்..
                                 முடிச்சுகள் மூன்று

                                 அவள் கழுத்தை ஆட்கொண்டது..

                                 பந்தலிட்ட பச்சைமட்டை
                                காய்ந்து போவதற்குள்
                                அப் பெண்ணின் அடிவயிறு
                                பெருக்க ஆரம்பித்தது..
                                ஆம்.. குழந்தைக்குள் குழந்தை.

                                 பத்தாவது மாதம்
                               ஒரு குழந்தை ஜனிக்கப் போகிறதா
                               ஒரு குழந்தை மரிக்கப்போகிறதா
                               எனத்தெரியவில்லை..
                               பிரசவ வலி அவளுக்குள்
                               ஒரு பிரளயத்தையே
                                உண்டு பண்ணியது..
                              ''அய்யோ அம்மா'' என்று
                               அப்பெண்ணின் அலறல்
                               இப்போதே செத்தால் போதும் என்ற
                               பொருள்படத்தான் ஓலமிட்டது..

                               மீசை முளைக்காத அவன்
                               கணவன் என்ற அந்தஸ்தில்
                               முகத்தில் பயத்தை
                               அப்பிக்கொண்டு நிற்கிறான்..
                               முப்பது வயதைத் தாண்டாத
                               அவளது பெற்றோர்
                               தாத்தா பாட்டி என்ற
                               பட்டத்தைப் பெற காத்திருக்கிறார்கள்..

                               கிராமத்து மருத்துவச்சியின்
                               தலைமையில் பிரசவமாம்..
                               பிரசவமானதுமுண்டு-பிறர்
                               சவமானதுமுண்டு..

                               ஆண் குழந்தைக்கு தாய்ப்பால்
                               பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்
                               ஏற்கனவே எடுத்த முடிவுதான்..

                               அவள் சவமாகவில்லை
                               பிரசவமானாள்..
                              முன்னதாக அவள்
                               சாவை சந்தித்துவிட்டுதான்
                               வந்திருந்தாள்...

                               குழந்தை பிறந்து
                              தொப்புள் கொடிக்கூட
                              அறுபடாத நிலையில்
                              அனைவரின் கண்களும்
                              குழந்தையின் இடுப்புக்குக் கீழே
                              குறிவைத்து குறி தேடின..
                              அப்பாடா..ஆண்குழந்தைதான்..
                               தப்பியது குழந்தை..

                               தாய்ப்பால் குடித்த உதடுகள்
                               காய்ந்து போகாத நிலையில்
                               தன் குழந்தைக்கு பாலூட்டினாள்..
                               மார்பகங்களே சுரக்காத நிலையில்
                               தாய்ப்பால் எப்படி சுரந்தது
                               எனத்தெரியவில்லை..

                               வயதுக்கு வந்தவுடன்
                               தாவணி கட்டி
                               அழகு பார்க்கும் பருவத்தில்
                                தாலி கட்டிதான் அழகுபார்த்தனர்.
                               அவள் அழுது பார்த்தாள் ..
                               அழுகை தோற்றுத்தான் போனது..


                                  குழந்தை குமரியாய்.
                                  குமரி கிழவியாய்..
                                  இப்படித்தான் கிராமம் தோறும்
                                  எத்தனை இருபதுவயது கிழவிகள்..


                                   இந்த நூற்றாண்டிலும்
                                   மாற்றமென்பது மருந்துக்குக் கூட இல்லை..
                                   சேடப்பட்டி சென்னையானால்
                                   ஒருவேளை மாற்றமடையலாம்..                                 

                                ----------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

21 comments:

  1. முன்னதாக அவள் சாவை சந்தித்து விட்டு வந்திருந்தாள். தாய்ப்பால் குடித்தது மறக்காத நிலையில் குழந்தைக்கு பாலூட்டினாள். குழந்தை குமரியாய், குமரி கிழவியாய்... எத்தனை வலிமையான வார்த்தைகள் கொண்டு படைத்திருக்கிறீர்கள் இக்கவிதையை. இந்நிலை இன்று மாறி விட்டதென்று மார்தட்டிச் சொல்ல முடியாத நிலையில் நிஜம் மனதில் நெருடுகிறது கவிஞரே...

    ReplyDelete
  2. இந்தக்கவிதை
    எல்லா தர மனிதர்களிடமும் போய்ச் சேரவேண்டும்
    இன்னும் எத்தனையோ கிராமங்களில் இந்த நிலை தொடர்கிறது என்பதே மிகவும் வேதனைக்குரிய விஷயம்

    நல்ல உறைக்கும்படி நல்ல சொன்னீர்கள்
    இந்த நிலை மாறவேண்டும்

    கவிஞருக்கு மகளீர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. unmaiyaana visayam!

    arumaiyaana pathivu!

    ReplyDelete
  4. எங்கள் எண்ணங்களை வலிகளை எத்தனை அருமையாக
    கவிதை வடித்துள்ளீர்கள். சரியான அறிவான வழிக்காட்டுதல்களும்
    தகவல்களும் வீண் கலாச்சார பழமை வாத கோட்பாடுகளைக் களைதலும்
    பொருளாதார முன்னேற்றமும் தான் இதற்கான தீர்வு.
    மகளிர் தின வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. அறியாப் பருவம் முடிவதற்குள் அனைத்தும்
    முடிந்த பருவம் வந்துவிடும்!
    கவிதையின் கருத்து இன்றும் நடப்பது
    உண்மையே!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  6. பெண்களின் சோகத்தை எவ்வளவு அழகாக காட்டியுள்ளீர்கள் அண்ணா. பெண்ணியம் போற்றிய வள்ளலுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  7. //மார்பகங்களே சுரக்காத நிலையில்
    தாய்ப்பால் எப்படி சுரந்தது
    எனத்தெரியவில்லை..//

    //எத்தனை இருபதுவயது கிழவிகள்..//

    வலி தந்த வரிகள்..
    அவள் கனவு மட்டுமே காண முடியும்,
    தன் கண்ணீர்க்கு உயிர்க்கொடுத்து,
    சுனாமியாக்கி,
    ”அவர்களை” விழுங்கிவிட..!

    ReplyDelete
  8. நான் படித்த மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று பாஸ்
    இரண்டு மூன்று தரம் திருப்பி திருப்பி வாசித்தேன் மிகச்சிறந்த கவிதை

    ReplyDelete
  9. மகளிர் தின வாழ்த்துகள் ..
    நல்ல அருமையான கவிதை

    ReplyDelete
  10. பெண்கள் தினத்தன்று நான் படித்த கவிதை வரிகளில் என் உள்மனது வரை சென்று தாக்கத்தை ஏற்படுத்தியது உங்கள் வரிகள்...சமூக ரீதியாக பார்த்தல் சென்னை வளர்ந்திருக்கலாம் ஆனால் மனநிம்மதி, ஒழுக்கம் இன்னும் சேடபட்டியில் தான் இருக்கிறது... என்ன செய்வது ஒரு பக்கம் நாகரீக மாற்றம். இன்னொரு பக்கம் பகுத்தறிவின் குறைபாடு.....

    ReplyDelete
  11. எத்தனை சட்டம் வந்தாலும்,அடிப்படை மனமாற்றம் இல்லையெனில் அவலம் தொடரும் என்பதை அழகாகச் சொல்லி நிற்கிறது கவிதை

    ReplyDelete
  12. பெண்களை அடிமைப் படுத்த நினைக்கும் ஆண்களின் மத்தியில் பெண்களுக்காக கவிதை படைத்த சகோ விற்கு வாழ்த்துக்கள்!!!!!!

    ReplyDelete
  13. சேடப்பட்டிகள் சென்னைகளாக மாறத்தான் வேண்டும். அப்போதுதான் விமோசனம் கிடைக்கும். இருபது வயது கிழவிகளின் எண்ணிக்கை அடியோடு குறைய வேண்டும். அருமையான மனம் கவர்ந்த கவிதை. நன்றி சார்.

    ReplyDelete
  14. // சேடப்பட்டி சென்னையானால்
    ஒருவேளை மாற்றமடையலாம்.. //

    நிச்சயம் சேடப்பட்டியும் மற்ற பட்டி தொட்டிகளும் சென்னையாகும் ஒரு நாள். நாம் நினைக்கும் மாற்றம் ஏற்படும் அப்போது. நல்ல பொருள் செறிந்த, மனதில் வலியை ஏற்படுத்துகின்ற கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. இன்றும் கிராமங்களில் நடப்பதை எவ்வளவு கோர்வையாக தொகுத்துள்ளீர்கள் சார். இந்த நிலை மாற வேண்டும்....


    //கிராமத்து மருத்துவச்சியின்
    தலைமையில் பிரசவமாம்..

    பிரசவமானதுமுண்டு-பிறர்
    சவமானதுமுண்டு..//

    உண்மை தான்.

    ReplyDelete
  16. எதிர்காலத்திலாவது இந்த விலங்குகள் ஓடிய நாமும் எழுத்தால் உணர்த்தும் முயற்சி .... தொடர்வோமா ?

    ReplyDelete
  17. //பந்தலிட்ட பச்சைமட்டை
    காய்ந்து போவதற்குள்
    அப் பெண்ணின் அடிவயிறு
    பெருக்க ஆரம்பித்தது..
    ஆம்.. குழந்தைக்குள் குழந்தை.//

    கொடுமை இது.
    மாறத்தான் வேண்டும்.
    சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வுப் பகிர்வு.

    ReplyDelete
  18. //குழந்தை குமரியாய்.
    குமரி கிழவியாய்..
    இப்படித்தான் கிராமம் தோறும்
    எத்தனை இருபதுவயது கிழவிகள்..//
    ;(((((

    ReplyDelete
  19. மதிய வணக்கம் ஜயா

    ReplyDelete
  20. சராசரி இந்தியப்பெண்ணின் வாழ்வின் யதார்த்தங்களை உண்மைக்கு மிக அண்மையில் நின்று எழுதியிருக்கிறீர்கள் நண்பா பாராட்டுக்கள்.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com