புது வரவு :
Home » , , , , , » ரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை

ரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை

    வணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அமைந்த நாள் அவ்வளவுதான்.இந்தத்தேதியும் எல்லாத் தேதிகளைப் போல அடுத்த நூற்றாண்டுதான் வரும்.நாள் மாதம் வருடம் மூன்றும் ஒரே எண்ணை கொண்டிருப்பதுதான் சிறப்பே தவிர உலக அளவில் இந்த நாளுக்கு தனிச் சிறப்பென்று ஒன்றுமில்லை.சரி அதை விடுங்கள்.தமிழகத்தில் இந்தத் தேதிக்கு எப்போதுமே தனிச்சிறப்பு. இந்தத்தேதியில்தான் தமிழகம் மாநிலம் உருவாக்கப்பட்டதா? அல்லது ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து தமிழகம் விடுபட்ட நாளா? என்று கேட்கிறீர்களா? என்னங்க ஒண்ணுமே தெரியாத பச்ச மண்ணாட்டம் இருக்கீங்க? போங்க.. போய் ஏதாவது ஒரு டிவியை போட்டுப் பாருங்க இன்னைக்கு என்ன நாளுன்னு உங்களுக்கு தெரிஞ்சிடும். ஆமாங்க இன்னைக்கு தமிழ் சினிமா நடிகர் ரஜினிகாந்தோட பிறந்தநாள் தான். அதனாலதான் எல்லாம் டிவிகளும் போட்டி போட்டுட்டு அவரோட சிறப்புக்கள எடுத்தியம்பிக்கிட்டிருக்குது.

             மற்ற எந்த சினிமா நடிகர் பிறந்த நாளையும் இப்படி தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக்கொண்டு கொண்டாடியதா? சரித்திரமே இல்லை.அந்தளவுக்கு ரஜினிகாந்த் என்ன பண்ணினார்ன்னு கேட்குறீங்களா? எல்லா நடிகரைப் போலவும் சினிமாப் படம் தான் நடிச்சார்.. வேறொண்ணுமில்ல.அப்ப அது போதுங்கிறீங்களா? மற்ற நடிகர்களைக் காட்டிலும் ரஜினிகாந்த மக்கள காந்தம் மாதிரி ஈர்த்திருக்காரு அதனால்தான் எல்லாம் கொண்டாடுறாங்க.. இதுல தப்பு ஒண்ணும் இல்லையேன்னு நீங்க கேட்கலாம். அதையேதான் நானும் சொல்றேன்.. ரஜினிகாந்த பிறந்தநாளைக் கொண்டாடுவது தப்பில்லைதான்.தப்பென்று எங்கும் சொல்லவில்லை..

             ஆனால் நேற்று 11.12.12 தமிழ் பெருமையை உலகளவில் பறைசாற்றிக்கொண்டிருக்கும் தமிழின் மகாகவி பாரதியார் பிறந்தநாள். மிக விமரிசையாகக் கொண்டாடாவிட்டாலும் அந்த நாளையாவது அனைத்து பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் ஞாபகப் படுத்திருக்கலாம். மணிக்கணக்காக ரஜினியின் புகழைப் பாடும் தொலைக்காட்சிகள் நேற்று பாரதியாருக்கென ஒரு மணி நேரம் ஒதுக்கியிருக்கலாம்.அதைச் செய்யவில்லை.தொலைக்காட்சிகளையும் தப்பு சொல்லமுடியாது.பாரதியின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் எந்த நிறுவனமும் விளம்பரம் கொடுக்க முன் வராது.மக்கள் அதைப் பார்க்க முன் வரமாட்டார்கள்.தொலைக்காட்சியின் டி.ஆர்.பி குறைந்து போகும்.அதையும் தாண்டி பாரதிக்கென ஒரு மணிநேரம் ஒதுக்கினால் சொந்த காசைத்தான் தொலைக்காட்சிகளும் செலவு செய்ய வேண்டி வரும். என்ன செய்வது? நம் மக்களின் நாடி அறிந்தே தொலைக்காட்சிகள் நிகழச்சிகளை ஒளிபரப்புகின்றன. சரி விடுங்கள்.. என் மனதில் இருந்த ஆதங்கம் இது. இங்கே பகிர்ந்து கொண்டேன்.யாரையும் புண்படுத்தவோ விமர்சிக்கவோ இல்லை.நானும் ரஜினி ரசிகன் தான். எனக்கும் ரஜினியைப் பிடிக்கும் அதற்கு மேலாக பாரதியைப் பிடிக்கும். பாரதியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டு தனது பிறந்தநாளை தமிழகம் விமரிசையாகக் கொண்டாடுகிறது என்று நினைத்து ரஜினிகாந்த் அவர்களே வருத்தப்பட்டாலும் படுவார்.

                 இந்த நேரத்தில் என் நண்பரும் திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் புண்ணியா எழுதிய கவிதை வரிகள் ஞாபகம் வருகின்றன்.

ஏ.. பாரதி
அமைதியாக கல்லறையில் 
உறங்கிக்கொண்டிருக்கிறாய்..
எழுந்து வந்து
நாட்டை மாற்றிவிட்டு போ..
இல்லையெனில்-உன்
பாட்டை மாற்றிவிட்டு போ..

பாரதியார் மற்றும் ரஜினிகாந்த் - வாழ்க்கைக்குறிப்பு

         இந்த மாதத்தில் பிறந்த முக்கிய இருவரின் வாழ்க்கைக் குறிப்பைப் பற்றி பார்ப்போம்..

பாரதியார்

       சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
 
      தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

      தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.

பாரதியின் முக்கிய நூல்கள்:

குயில் பாட்டு
கண்ணன் பாட்டு  
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திச்சூடி   
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
சந்திரிகையின் கதை

இளைய தலைமுறையை உற்சாகப்படுத்த பாரதி சொன்னவை

"தேடிச் சோறுநிதந் தின்று
  பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
  மனம் வாடித் துன்பமிக உழன்று
  பிறர் வாடப் பல செயல்கள் செய்து
  நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
  கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
  பல வேடிக்கை மனிதரைப் போலே
  நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’

ரஜினிகாந்த்

      ரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த முக்கிய படங்கள்:

தளபதி               
அண்ணாமலை         
எஜமான்              
பாட்சா          
முத்து,
அருணாசலம்    
படையப்பா    
சந்திரமுகி    
சிவாஜி   
எந்திரன்

இளைஞர்களை உற்சாகப்படுத்த ரஜினிகாந்த் சொன்னவை

'ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி'

'கூட்டி கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும்'

'என் வழி தனி வழி சீண்டாதே'


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

32 comments:

 1. // ஏ.. பாரதி
  அமைதியாக கல்லறையில்
  உறங்கிக்கொண்டிருக்கிறாய்..
  எழுந்து வந்து
  நாட்டை மாற்றிவிட்டு போ..//

  பாரதியின் மீது அந்தக் கவிஞருக்கு என்ன கோபம்? அவரை உயிர்ப்பித்து, இன்றைய சமூக அரசியல் இடிபாடுகளில் சிக்கிச் சின்னாபின்னமாவதற்கா? மற்றவர்கள் ரஜினியைக் கொண்டாடுகிறார்கள் என்று குறைபடுவதைக் காட்டிலும் நீங்களே எந்த ஒப்பீடும் இன்றி பாரதியைப் பற்றி ஒரு அழகான கட்டுரையோ, கவிதையோ எழுதியிருக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.. நான் ஒருவன் பாரதியை புகழ்வதைக் காட்டிலும் தொலைக்காட்சி பத்திரிக்கை போன்றவை அவரைப் புகழ்வது எத்தனை சிறப்பானது.. இருப்பினும் உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.

   Delete
 2. அண்ணமலை படம் வரை ரஜினியை பிடித்தது. அதுக்கபுறம் பிடிக்கறதில்லை. அரசியலும், எல்லா படத்துலயும் கண்ணுக்க்கு தெரியாம பெண்ணடிமைத்தனத்தையும் புகுத்துறதா நான் நினைக்குறேன்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி..

   Delete
 3. உண்மையான ஆதங்கம்தான்! ரஜினியை பற்றி இவ்வளவு நிகழ்ச்சி செய்யும் டிவீகள் பாரதிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாம்தான்! நன்றி

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி.

   Delete
 4. உண்மை... இளைஞர்களை இருவரும் எப்படி உற்சாகப் படுத்தி இருக்கிறார்கள்!

  நல்லதுக்கு என்றுமே காலம் இல்லையோ?

  ReplyDelete
  Replies
  1. அதுதான் கண்மணி தெரியவில்லை..

   Delete
 5. நல்லாத்தான் சார் சொல்லிருக்கிங்க ... வெட்கப்படவேண்டி இருக்கு .. பாரதியை மறந்த சமூகத்தை நினைத்து ...

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி.

   Delete
 6. இந்த நாளுக்குரிய அலசல் சிறப்புங்க.

  ReplyDelete
 7. பாரதி வயதென்ன சொல்லுங்க? ரஜினி வயதென்ன? ஒருவர் மறைந்து சுமார் நூறாண்டுகள் ஆகிவிட்டது. இன்னொருவர் உயிரோட திரிகிறார்..சமீபத்தில் செத்து பொழைச்சு இருக்கார்.

  ரஜினி, பாரதியின் வயதை அடையும்போது, யார் பொறந்தநாளை பெருசா கொண்டாடுவாங்கனு எனக்குத் தெரியலை.

  சரி அதை விடுங்க..பொறந்த நாள் அன்னைக்கு பாரதியை வாழ்த்தினாங்களோ இல்லையோ எவனும் திட்டினதாத் தெரியலை. ஆனால் ரஜினியை வாழ்த்துபவர்கள் (தன் தேவைகளுக்காக) ஒரு பக்கம் இருக்கட்டும். ரஜினியை பொறந்தநாள் அன்று மனதாற கரிச்சுக் கொட்டும் மக்கள் இன்னொரு பக்கம்..உதாரணம்: வினவுவின் பாட்ஷா பாபாவான கதை பதிவு. ஏன் உங்க பதிவைக் கூட வாழ்த்துனு சொல்வதைவிட வேற மாரித்தான் சொல்லணும்.

  Let us see, ஒங்க பொறந்த நாளுக்கு யாரும் உங்களை யாரும் கரிச்சுக் கொட்டி இருக்காங்களா? அப்படி எதுவும் இருக்காதுனுதான் நான் நம்புறேன். :) ரஜினி பொறந்தநாளுக்கு அவரை கரிச்சுக் கொட்டுறவங்க குறைந்தது லட்சகணக்கானோர்!

  கூட்டிக் கழிச்சுப் பாருங்க, கவிஞரே, கணக்கு சரியாத்தான் வரும். ;-)

  ReplyDelete
  Replies
  1. கணக்கு சரியாத்தான் வர்ற மாதிரி இருக்கு தோழரே..

   Delete
 8. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

  முண்டாசுக் கவிஞனுக்கு தனியாக நான் நேற்றே பதிவெழுதிவிட்டேன் கவிஞரே :-)))

  ReplyDelete
  Replies
  1. அப்படியா.. மகிழ்ச்சி தோழரே.. நீங்களாவது போட்டீங்களே..(நான் போடலையே)ஹிஹிஹி

   Delete
 9. \\
  அமைதியாக கல்லறையில்
  உறங்கிக்கொண்டிருக்கிறாய்..
  எழுந்து வந்து
  நாட்டை மாற்றிவிட்டு போ..
  இல்லையெனில்-உன்
  பாட்டை மாற்றிவிட்டு போ.\\

  கவிதைக்கு பொய்யழகு என்பார்கள், அந்த விதத்தில் இதை விட்டுவிடலாம். ஆனால் பகுத்தறிவாளர்கள் மறைந்த தலைவர்களின் நினைவு நாள் என்று சொல்லிக்கொண்டு அவர்களின் உடலை புதைத்த இடத்துக்கு போய் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி இந்த கவிதையில் சொன்னதை நாங்கள் பொய்யழகாக நினைக்கவில்லை சீரியசாகத்தான் எடுத்துக் கொள்கிறோம் என நிரூபிக்கிறார்கள். உங்கள் மாலை மரியாதையை அந்தக் கல்லறையில் உள்ள மிச்சம் மீதி எழும்புக் கூடு ஏற்றுக் கொண்டு அகமகிழ்கிறதா?

  உதாரணத்துக்கு திருவள்ளுவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து, அவர் தமிழன் என்று நெஞ்சை நிமிர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, அவர் சொன்னதை வாழ்வில் கடை பிடிக்கவும் வேண்டும். ஆனால் அப்படி பெரும்பாலானோர் இருப்பதாகத் தெரியவில்லை. வெறுமனே மறைந்து போனவர்களைப் புகழ்வதில் என்ன இருக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. திருவள்ளுவர் சொன்னபடி மட்டும் தான் நடக்கவேண்டும்.. இல்லையென்றால் அவரைப் போற்றக்கூடாது என்ற உங்கள் கருத்து நகைச்சுவையாக உள்ளது.நம்மைப் பிடித்தவர்கள் சொல்வதை முற்றிலும் கேட்க முடியாது தோழரே..அதில் பிடித்ததை மட்டுமே பின்பற்ற முடியும் அதற்காக அவரைப் போற்றாமல் இருக்க முடியுமா? உங்களுக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருக்கும் அதில் உள்ள கட்டுக்கட்டான மூடநம்பிக்கைகளின் மீது வெறுப்பு இருக்கலாம்.அதற்காக இந்து மதத்தை கொண்டாடாமல் விட்டீர்களா? என்ன..இந்து தர்மப்படி செயல்படுவன் மட்டும்தான் இந்து இறைவனை பூசிக்க வேண்டும் என்றால் அந்தத் தகுதி உலகில் உள்ள எந்த இந்துக்கும் இல்லை தோழரே..யாராவது ஒரு ஆளை சுட்டிக்காட்டுங்களே..ப்ளீஸ்.. ப்ளீஸ்..

   Delete
  2. /வெறுமனே மறைந்து போனவர்களைப் புகழ்வதில் என்ன இருக்கிறது?/

   சரிதான்.. பாரதியோ வள்ளுவனோ வெறுமனே மறையவில்லை..உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் பாடத்தைக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள்..

   கற்பனை உருவங்களைப் போற்றி புகழ்வதைக் காட்டிலும் தமிழுக்காக வாழ்ந்து மறைந்தவர்களை போற்றுவது தவறேயில்லை..

   Delete
 10. \\நானும் ரஜினி ரசிகன் தான். \\ இதே உடான்ஸ்தான் அவரைத் திட்டும் ஒரு லட்சம் பேரும் . உடுறாங்க!!

  \\எனக்கும் ரஜினியைப் பிடிக்கும் அதற்கு மேலாக பாரதியைப் பிடிக்கும். பாரதியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டு தனது பிறந்தநாளை தமிழகம் விமரிசையாகக் கொண்டாடுகிறது என்று நினைத்து ரஜினிகாந்த் அவர்களே வருத்தப்பட்டாலும் படுவார்.\\ சம்பந்தமேயில்லாமல் ரஜினியை இழுத்திருக்கீங்க. பாரதியை கொண்டாட வேண்டாமென்றோ, என்னைக் கொண்டாடுங்க என்றோ எப்போதாவது அவர் சொன்னாரா? அவருடைய பெயர் புகழ் தானா சேர்ந்தது, யாரையும் மோசம் செய்து வந்ததல்ல. அவரோட ரசிகர்களுக்கு அவரைப் பிடிச்சிருக்கு அவங்க கொண்டாடுறாங்க, அதை விமர்சனம் செய்வது தனி மனித விருப்பு வெறுப்பில் தலையிடுவதாகும், அது சரியென்று எனக்குத் தோன்றவில்லை.

  \\இளைஞர்களை உற்சாகப்படுத்த ரஜினிகாந்த் சொன்னவை\\

  சாகும் நாள் தெரிஞ்சு போயிட்டா வாழும் நாள் நரகமாப் போயிடும்.
  அதிகமா கோபப் படும் பெண்ணும், அளவுக்கு அதிகமா ஆசைப் படும் ஆணும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.
  ஆண்டவனை நம்பனும், ஆனா நம் முயற்சியையும் விடக்கூடாது. [பாட்சாவில்...]
  ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான், கெட்டவங்களுக்கு எல்லாத்தையும் குடுப்பான் ஆனா கைவிட்டுடுவான்.
  ஒரு பெண்ணு தன்னிச்சையா வாழ முடியாது, அவ எப்பவும் யாரையாவது சார்ந்துதான் வாழ வேண்டும். பிறக்கும் பொது பெற்றோர் பருவத்தில் கணவன், வயதான காலத்தில் தனது மகன்கள் என ஆண் துணை அவளுக்கு எப்போதும் தேவை.

  இப்படி எத்தனையோ நல்லதையும் அவர் சொல்லி வந்திருக்கிறார். அதையெல்லாம் பார்க்க உங்களுக்கு விருப்பமில்லை என்ன செய்ய?

  ReplyDelete
  Replies
  1. \\நானும் ரஜினி ரசிகன் தான். \\ நம்பலையா? சரி விடுங்க..

   இன்னும் சில வசனங்களைப் போடலாம் நாலஞ்சு பதிவு போட வேண்டியிருக்கும்.. அதான் விட்டுட்டேன்..

   நல்ல விசயங்களை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ள வேண்டியதுதானே..

   அதை திருமால் சொன்னாலென்னா,இயேசு சொன்னாலென்ன, நபிகள் சொன்னாலென்ன,ராமசாமி சொன்னாலேன்ன ரஜினி சொன்னாலென்ன ரோட்டுல போற ஆதரவு அற்ற ஜீவன் சொன்னாலென்ன.. விசயம்தான் முக்கியம் இல்லையா தோழரே..

   ஆனா மனிதன் அப்படியில்லையே..

   Delete
 11. \\ /வெறுமனே மறைந்து போனவர்களைப் புகழ்வதில் என்ன இருக்கிறது?/

  சரிதான்.. பாரதியோ வள்ளுவனோ வெறுமனே மறையவில்லை..உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் பாடத்தைக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள்.\\ இதில் சிறு பிழை இருக்கிறது, நான் சொல்ல வந்தது

  "மறைந்து போனவர்களை வெறுமனே புகழ்வதில் என்ன இருக்கிறது?"

  என்பதே. அவர்களுடைய பங்களிப்பை நான் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.

  \\கற்பனை உருவங்களைப் போற்றி புகழ்வதைக் காட்டிலும் தமிழுக்காக வாழ்ந்து மறைந்தவர்களை போற்றுவது தவறேயில்லை.\\வாழ்ந்து மறைந்தவர்களை உண்மையில் போற்றுவது என்பது வாயால் புகழ் பாடுவதில் மட்டும் இல்லை, அவர்கள் விட்டுச் சென்ற வழிகாட்டுதலை நம் வாழ்வில் கடை பிடிப்பதுதான் உண்மையில் அவர்களைப் போற்றுவதாகும். அந்த வகையில் பாரதி என்ன விட்டுச் சென்றார், அதை நீங்கள் வாழ்வில் கடை பிடித்து மற்றவர்களையும் கடை பிடிக்கச் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது, வெறுமனே போற்றுவதில் என்ன இருக்கிறது? நீங்கள் பாரதிக்காக எத்தனை பதிவுகள் போட்டீர்கள்? அவரது கொள்கைகள் என்னவென்று சொல்ல முடியுமா? அவர் சொன்னதில் இன்றைக்கு எங்கள் வாழ்வில் நாங்கள் என்ன பின்பற்ற முடியும் என்று சொல்லுங்களேன்?

  மேலும், பாரதி பிறந்த நாள் என்பது அவர் என்றைக்கு எட்டையபுரத்தில் அவர் தாய் வயிற்றில் இருந்து பிறந்தாரோ அந்த ஒரு நாளை மட்டும் தான் குறிக்கும், ஒரு வருடம் முடிந்து போனது என்பதால் அது பிறந்த நாளாகி விடாது. கடிகாரமும் காலமும் பின்னால் சுற்றினால் மட்டுமே அவர் பிறந்த நாள் மீண்டும் வரும். அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் அவர் பிறந்த நேரத்தையும் ஒவ்வொரு வாரம் அவர் பிறந்த கிழமையையும், மாதத்தில் பிறந்த தேதியையும் கூட கொண்டாடிக் கொண்டே போகலாம், அதென்னது ஒரு வருடம் கணக்கு என்பது தான் புரியவில்லை. இதை சாதாரண மனிதன் செய்தால் அவன் பகுத்தறியத் தெரியாதவன் என விட்டுவிடலாம், ஆனால் ஒரு பகுத்தறிவு வாதி பிறந்த நாள் என்றெல்லாம் தன் வாயால் சொல்லலாமா? இழுக்கல்லவா? இப்படி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி இது எப்படிடா ரஜினி பிறந்த நாளாகும் என்று சொன்னால் நீங்கள் பகுத்தறிவுவாதி. ஆனால் அதை விடுத்து, அதற்க்கு போட்டியாக பாரதியின் பிறந்த நாளை தூகிக் கொண்டு வருகிறீர்களே இது என்ன நியாயம்? ஒரு வேலை பாரதி ஒரு வாரமோ, சில மாதங்களோ தள்ளி பிறந்திருந்தால் ரஜினி பிறந்தநாள் கொண்டாடுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இருந்திருக்காதா?

  அப்புறம் விடுதலைக்கு போராடியவர்கள் என்று பார்த்தால் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பங்களிப்பு பாரதிக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல, அவர்கள் இவரைப் போல பிரபலமாகியிருக்க வில்லை அவ்வளவுதான், அவர்கள் பிறந்த நாள் எல்லாம் எங்கே போவது? அப்படியே பார்த்தாலும், அதென்னது தமிழகம் மட்டும் தான் விடுதலைக்குப் போராடியதா? ஆர்த்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திர போஸ் போன்ற மற்ற இந்திய விடுதலை வீர்களின் பிறந்த நாட்கள் என்னாவது? அது என்னது தமிழன் என்ற குறுகிய வட்டம் போட்டு ஒரு ஃ பீலிங்? இதை பகுத்தறியத் தெரியாத ஒருத்தன் சொன்னால் போனால் போகிறது எனலாம் பகுத்தறிவுவாதி சொல்லலாமா?

  அப்படியே உங்களுக்கு தேசபக்தி இருந்தாலும், இன்றைக்கு நீங்கள் உபயோகிக்கும் கணினி என்ன தமிழன் கண்டுபிடித்ததா? எவனோ வெள்ளைக்காரன் செய்ததுதானே? தொடமாட்டேன் என்பீர்களா? மாட்டர்கள், காரணம் நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டும்தானே? அந்த வகையில் தங்களுக்கு பிடித்த ஒன்றை இன்னொரு இந்தியர் ரஜினியிடம் அவரது ரசிகர்கள் பார்த்தார்கள் எடுத்துக் கொண்டார்கள் கொண்டாடுகிறார்கள், இதை நீங்கள் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? இளிச்சவாயன் கிடைச்சாண்டா என்று ஒரு ஏமாந்த நடிகர் மேல் பழி சுமத்தலாமா? தயவு கூட்டி கழித்துப் பாருங்க. [இது அண்ணாமலை படத்தில் இராதாரவியோட பன்ச் டயலாக், ரஜினியோடது அல்ல] கணக்கு சரியா வரவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஜெயதேவ் பதிவை நல்லா படிச்சீங்களா.. நான் சொன்ன பதில் பின்னூட்டத்தை படிச்சீங்களா?ப்ளீஸ் மறூபடியும் ஒரு தடவை படிச்சிட்டு வாங்க..போங்க..ப்ளீஸ்..

   Delete
  2. அதை நீங்கள் வாழ்வில் கடை பிடித்து மற்றவர்களையும் கடை பிடிக்கச் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது, வெறுமனே போற்றுவதில் என்ன இருக்கிறது?..

   அதைத்தான் நான் கேட்கிறேன்.. இந்து மதம் சொல்வதை முற்றிலும் கடைபிடித்துவிட்டுதான் திருமாலை போற்றுகிறீர்களா?

   Delete
  3. //நீங்கள் பாரதிக்காக எத்தனை பதிவுகள் போட்டீர்கள்? அவரது கொள்கைகள் என்னவென்று சொல்ல முடியுமா?//

   ஆமாம் நான் போடலை..போட்டேன்னு எங்கேயும் சொல்லலையே.. அப்படி நான் போட்டாலும் உங்கள மாதிரி நாலு பேரு படிப்பாங்க.. என்ன பிரயோசனம்.. அதுவுமில்லாம் நான் பாரதியை சொல்லித்தான் தமிழ்நாடு தெரிஞ்சிக்குணுமா? நான் சொன்னது என்னன்னா உலக தமிழர்கள் எல்லாம் பாக்குற தொலைக்காட்சியில ரஜினியை புகழ்ந்து தள்ளுறாங்களே.. பாரதிக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கினா என்னான்னுதான் கேட்டேன்.அதை நீங்க புரிஞ்சிக்காம பாவம் சிவனேன்னு இருக்கிற சுதந்திர போராட்ட தியாகிகளை துணைக்கு கூட்டிட்டு வந்துட்டீங்களே ஜெயதேவ்.. பதிவை ஒரு தடவை முழுசா படிங்க.. எங்கேயும் ரஜினி பிறந்தநாள் கொண்டாடுறது தவறுன்னு சொல்லலையே..முழுசாப் படிச்சீங்களா?

   Delete
  4. விடுதலைக்கு போராடுனத பத்தி இங்க பேசல ஜெயதேவ்.. பாரதி தமிழின் மகாகவி.அதுக்காக புகழுவோம்..சுதந்திர தினத்தன்னைக்கு அதைப் பத்தி பதிவு ஒண்ணு போடுறேன்..அப்ப கருத்து சொல்ல கட்டாயம் வாங்க..

   //விடுதலைக்கு போராடியவர்கள் என்று பார்த்தால் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பங்களிப்பு பாரதிக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல, அவர்கள் இவரைப் போல பிரபலமாகியிருக்க வில்லை அவ்வளவுதான், அவர்கள் பிறந்த நாள் எல்லாம் எங்கே போவது?//

   அதைத்தான் நானும் கேக்குறேன் ஜெயதேவ்.. அப்பேற்பட்ட தியாகிகளை விட்டுவிட்டு சினிமா நடிகர்களுக்கு ஏன் தொலைக்காட்சிகள் முக்கியத்துவம் கொடுக்குது.. தெளிவாத்தானே இருக்கீங்க.. இந்த கேள்விதான் இந்தப் பதிவோட நோக்கமே..

   Delete
 12. சார், எங்களுக்கு வரிகளையும் படிக்கத் தெரியும், we also know how to read in between the lines also. இங்க எங்க ரஜினியைச் சாடினேன்னு நீங்க ஈசியா தப்பிக்கலாம், ஆனா ஒரு விஷயத்தைச் சொல்லும்போது Implied meaning அப்படின்னு ஒன்னு இருக்கு. நீங்க இங்க சொல்லியிருப்பது தமிழனா இருந்துகிட்டு இங்கே பிறந்த தியாகியை விட்டுவிட்டு வெளியூரில் இருந்து பிழைக்க வந்தவரை அதுவும் ஒரு கூத்தாடியை ஏண்டா தூக்கி வச்சுகிட்டு ஆடுறீங்க என்பது தான். இது கூட புரியாமல் இருக்க நாங்க ஒன்னும் விரல் சப்பும் பாப்பா இல்லை சார். இன்னும் ஆயிரம் தடவை படிச்சாலும் இதுதான் நீங்க எழுதியிருப்பதன் உள்நோக்கம் அர்த்தம் எல்லாமும்.

  ReplyDelete
  Replies
  1. தோழரே.. பிரிவினை வாதத்தை உண்டு பண்ணும் கருத்துக்கள் பதிவதாய் இருந்தால் கருத்தை பதிய வேண்டாம்.அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..பதிவைச் சார்ந்த கருத்துக்களை மட்டும் இடவும்..

   Delete
  2. வந்தவரை போற்றி பழக்கப்பட்ட நாடு தமிழ்நாடு.. நீங்கள் குறிப்பிட்டதைப் போல எங்கும் சொல்லப்படவில்லை.எதன் அடிப்படையில் அவ்வாறு குறிப்பிட்டீர்கள்.பதிவில் இல்லாத கருத்தை நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது தவறான செயல்..இது ஆரோக்கியமான விவாதம் அல்ல.வேறு திசையை நோக்கி விவாதத்தை கொண்டு செல்லும் நோக்கமாக இதைக் கருதுகிறேன்.வனமையாக மீண்டும் கண்டிக்கிறேன்..

   Delete
 13. \\ஆமாம் நான் போடலை..போட்டேன்னு எங்கேயும் சொல்லலையே.. அப்படி நான் போட்டாலும் உங்கள மாதிரி நாலு பேரு படிப்பாங்க.. என்ன பிரயோசனம்.. அதுவுமில்லாம் நான் பாரதியை சொல்லித்தான் தமிழ்நாடு தெரிஞ்சிக்குணுமா?\\ சினிமான்னு தலைப்பு போட்டு அதில் சிறிய திரை, பெரிய திரை, சின்ன திரை என்று பிரித்து போடுமளவுக்கு பதிவுகளை எழுதிய நீங்க பாரதியைப் பத்தி பதிவே போடலைங்கிறீங்க, ஆனா தொலைக்காட்சிக்காரன் மட்டும் பாரதிக்கு நேரம் ஒதுக்காதது குறித்து ஆதங்கப் படுறீங்க. எப்படி உங்க பிளாக்கை நாலு பேரு படிக்க என்ன செய்யணும்னு நீங்க நினைச்சு சினிமாவை எழுதுனீங்களோ, அதே மாதிரிதானே தொலைக்காட்சிக்காரனும் நினைப்பான்? உங்கள் பிளாக்கை படிக்காவிட்டால் பண நஷ்டம் வந்து விடாது, நீங்களே பாரதிக்காக நேரத்தை ஒதுக்காதபோது கோடிக்கணக்கில் வியாபாரம் செய்பவன் நினைப்பான் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்?

  \\நான் சொன்னது என்னன்னா உலக தமிழர்கள் எல்லாம் பாக்குற தொலைக்காட்சியில ரஜினியை புகழ்ந்து தள்ளுறாங்களே.. பாரதிக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கினா என்னான்னுதான் கேட்டேன்.\\ இங்கதான் உங்க உண்மையான நோக்கம் வெளியாகுது. உங்களுக்கு பாரதியைப் பத்தி சொல்ல நேரம் ஒதுக்கனும்னா அதை நீங்க நேரடியாகக் கேட்கலாம், தேவையில்லாமல் எதற்க்காக இங்கே ரஜினியை நீங்க இழுக்கணும்?
  இந்த உள்குத்தைத்தான் பதிவில் மறைச்சு வச்சு தாக்குறீங்க, கேட்டா நான் அப்படி சொல்லவில்லை இப்படிச் சொல்லவில்லைங்கிறீங்க? கணக்கு சரியாக வரவில்லை சார்..............

  ReplyDelete
 14. ஐயய்யோ தோழரே...

  தொலைக்காட்சிகளையும் தப்பு சொல்லமுடியாது.பாரதியின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் எந்த நிறுவனமும் விளம்பரம் கொடுக்க முன் வராது.மக்கள் அதைப் பார்க்க முன் வரமாட்டார்கள்.தொலைக்காட்சியின் டி.ஆர்.பி குறைந்து போகும்.அதையும் தாண்டி பாரதிக்கென ஒரு மணிநேரம் ஒதுக்கினால் சொந்த காசைத்தான் தொலைக்காட்சிகளும் செலவு செய்ய வேண்டி வரும். என்ன செய்வது?

  இதை நானே எழுதியிருக்கேன் ஜெயதேவ்..படிச்சீங்களா இல்லையா..மறுபடியும் முதல்ல இருந்தா..தலை சுத்துது போங்க..நாளைக்கு நீங்க கருத்து சொல்ல வர்றமாதிரியே பதிவை போடுறேன்.மீதியை அங்க தொடரலாமே.. இரவு வணக்கம்..(எஸ்கேப்)
  ")) இரவு வணக்கம்..

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com