திரைத்துறையில் இசுலாமியத் தோழர்களின் பெயர் மாற்றம் ஏன்? - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , , » திரைத்துறையில் இசுலாமியத் தோழர்களின் பெயர் மாற்றம் ஏன்?

திரைத்துறையில் இசுலாமியத் தோழர்களின் பெயர் மாற்றம் ஏன்?

            சிறுவயதிலிருந்தே நடிகராலோ அல்லது நடிகையாலோ ஈர்க்கப்பட்டு திரைப்படம் பார்க்கப் போனால் கூட அந்தப் படத்தில் யார் யார் வேலைபார்த்தார்கள் என்பதை அறிவதில் என்றுமே ஆர்வம் அதிகம்.ஆகவே டைட்டிலை முழுமையாகப் பார்க்கவே விரும்புவேன்.டைட்டிலை விட்டுவிட்டால் படம் பார்க்கும் ஆவல் சற்று குறைந்துதான் போகும்.இதனால் பல தொழில்நுட்ப கலைஞர்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது.அந்த நாட்களில் எனக்குள் ஒரு கேள்வி எழுந்ததுண்டு.ஏன் இசுலாமியத் தோழமைகள் மட்டும்  திரைப்படத்துறையில் அவ்வளவாகத் தென்படவில்லை? என்பதே அக்கேள்வி.

          அதே சமயம் இசுலாமியராக கதாநாயகனோ அல்லது ஏனைய கதாபாத்திரங்களோ இல்லாமல் தமிழ் சினிமா இல்லை.ஆனால் திரைக்குப் பின்னால் இருக்கும் படைப்பாளிகளில் இசுலாமியரைப் பெரும்பாலும் காணமுடியவில்லை. ஓ அவர்களுக்கு திரைத்துறை பிடிக்காது போலிருக்கிறது.ஆதலால் தங்களை இத்துறையில் ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்றே நினைத்தேன். பிறகு நான் திரைத்துறைக்குள் நுழைந்து திரைத்துறை நண்பர்களோடு பயணிக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது.இசுலாமியர்கள் திரைத்துறையில் குறிப்பிடும் வண்ணம் இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் மாற்றுப் பெயரிலே இருக்கிறார்கள்.எனவே அடையாளம் காணமுடிவதில்லை என்று மூத்த உதவி இயக்குனர் சொல்ல ஆச்சர்யமாய் போனது.

          திரைத்துறையில் இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர்,கலை இயக்குனர்,சண்டைப்பயிற்சியாளர்,பாடலாசிரியர்,பாடகர்,நடிகர் என்று முக்கிய துறைகள் இருக்கிறது.ஆனால் அதில் எத்தனை இசுலாமிய உறவுகள் இன்று பிரபலமாக இருக்கிறார்கள் என்று சொல்லமுடிவதில்லை காரணம் அவர்கள் பெயர் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் குறிப்பிடப்படும்படி இருக்கிறார்கள்.

         நடிகர்களில் இசுலாமிய நடிகர்கள் என அடையாளம் தெரியும்படி நடிகர் நாசர் அவர்களும் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அவர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் மட்டுமே தாம் சார்ந்த மதப் பெயரோடு இருக்கும் பிரபல நடிகர்கள்.ஆனால் இன்னும் இருக்கிறார்கள் நம்மால் அடையாளம் காணமுடிவதில்லை காரணம் பெயர் மாற்றமே.இன்றைய இளைய தலைமுறை நடிகர்களில் பிரபலமான நடிகர்கள் சிலர் இசுலாமியர்கள்தான்.

             ஹிந்திப் படத்தின் தலைமையகம் மராட்டி பேசும் மாநிலத்தில் இருந்தாலும் அங்கே மராட்டிய நடிகர்களைக் காட்டிலும் இசுலாமிய நடிகர்களின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது.ஹிந்தி திரைத்துறையின் வசூல் சக்கரவர்த்தியாக இசுலாமியர்கள் இருக்கிறார்கள்.அதே சமயம் நாயகிகளும் தன் மதம் சார்ந்த பெயரையே வெளிக்கொணர்ந்து பிரபலமாகிறார்கள்.
             ஆனால் மும்பையிலிருந்து தமிழுக்கு வந்த, வருகின்ற நாயகிகள் தன் மதம் சார்ந்த பெயரை உடனே மாற்றி வேறு பெயரைக்கொண்டு இங்கே புகழ் பெறுகிறார்கள் யாரையும் குறிப்பிட்டுக் காட்டவேண்டாம்.உங்களுக்கே தெரியும்.
                ஏன் இசுலாமியப் பெயரிலேயே நாயகன் நடித்தால் திரையுலகம் புறக்கணித்துவிடுகிறதா என்ன? அப்படிப்பார்த்தால் நாசர் தமிழின் மிகப்பெரிய நடிகராக எப்படி மாறியிருக்க முடியும்? மன்சூர் அலிகான் எப்படி தன் திறைமையை நிரூபித்திருக்க முடியும்?
                 இசைத்துறையிலும் அப்படித்தான்..பிரபலமான பாடகர்களாக இசுலாமியர்கள் இருந்தும் நாம் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை.அவர்களும் பெயர் மாற்றத்தில்தான் இருக்கிறார்கள்.ஏன் இந்தப் பெயர் மாற்றம் எனத் தெரியவில்லை.
                 கர்நாடக இசை கற்றுக் கொள்வதில் இசுலாமியத்தோழர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை என்று ஒரு சாரார் சொல்வார்கள்.ஏனென்றால் இந்து தெய்வங்களின் மீது பாடல்களைப் பாட வேண்டி வரும்.ஆனால் அதையும் தாண்டி சிலர் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதையும் மாற்று பெயரில்தான் செய்யமுடிகிறது.அப்படி இசை கற்று பிரபலம் ஆனால் கூட தன் உண்மையான பெயரை அவர்கள் வெளிப்படுத்தக் கூட விரும்புவதில்லை.
       எத்தனை பாடகர்கள் எத்தனை இசையமைப்பாளர்கள் இசுலாமை சேர்ந்தவர்களா இருக்கிறார்கள். தேடவேண்டிய நிலைதான் இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மானை இதில் சேர்க்க இயலாது. திலீப் ஆக இருந்து ரஹ்மானாய் மாறி ஆஸ்காரைப் பெற்ற இசையமைப்பாளர் இருக்கும் இதே துறையில் ரஹ்மானாய் இருந்து திலீப் ஆக மாறும் இசுலாமியர்கள் இருக்கிறார்கள். அது ஏன் எனத் தெரியவில்லை.

                  சினிமாவின் எல்லாத்துறையிலும் இது இருக்கிறது.இயக்குனர்களில் இன்று அமீர் அவர்கள் மட்டும்தான் இசுலாமிய இயக்குனராகத் தெரிகிறார்.வேறு யாரும் இல்லையா?இருக்கிறார்கள்.ஆனால் பெயர் மாற்றத்தில்தான் இருக்கிறார்கள்.

                   எனக்குத் தெரிந்த உதவி இயக்குனர்கள் கூட தனது மதம் சார்ந்த பெயரை விடுத்து வேறு பெயர் வைத்துக்கொண்டு இருக்கிறார்.

                  சினிமாத்துறைக்கு வந்தவுடன் தான் தனியாகத் தெரிய வேண்டும் எனக்கருதி ஒவ்வொருவரும் ஒரு அழகான புனைப்பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வார்கள்.அப்படி வைத்துக்கொண்டால் பரவாயில்லை.ஆனால் இவர்கள் சாதாரணப் பெயரைத்தான் வைத்துக் கொள்கிறார்கள்.

                இந்தப் பெயர் மாற்றத்துக்கு கீழ்க்கண்ட காரணங்கள் இருக்கலாம் என்பது எனது கணிப்பு

1.தனது மதம் என்னவென்று  மற்ற இசுலாமியத் தோழமைக்களுக்குத் தெரியக் கூடாது.

2.மதம் சார்ந்த பிரச்சனை என்றால் நாம் மதம் சார்ந்த பிரபலம் என்பதால் அதில் தலையிட வேண்டும்

3.இசுலாமியர் என அடையாளம் தெரிந்தால் மெஜாரிட்டியான இந்து மதத்தினர் ஒதுக்கி வைத்துவிடுவர்.

4.இசுலாமிய எனத் தெரிந்தால் திரைத்துறையில் வாய்ப்புகள் மறுக்கப்படும்..


           மேற்கண்ட காரணங்கள் இருக்கலாம்.ஆனால் அதையும் தாண்டி இன்றைக்கு தமிழ் சினிமாவில் நாசர், மன்சூர் அலிகான், இப்ராஹிம் ராவுத்தர், லியாகத் அலிகான்,ஏ.ஆர் ரஹ்மான், அமீர் போன்றோர்கள் தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயம் மற்ற மதத்தினராலும் இசுலாமிய மதத்தினராலும் பாராட்டப்படவேண்டியவர்கள்தான்.
    

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

19 comments:

 1. ஒரு வேலை மதக்கட்டுபாடுகளுக்கு பயந்து இப்படி முடிவெடுக்கிறார்களோ என்னவே...

  புனைப்பெயரில் கிடைக்கும் புகழ்ச்சியை விட மாற்றுப்பெயரில் கிடைக்கும் புகழ்ச்சிக்கு மதிப்பு அதிகம்...

  நல்லது...

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி தோழரே..

   Delete

 2. அப்படியா !!!? எனக்கு வியப்பாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் வியப்பாய்த்தானய்யா இருக்கிறது..

   Delete
 3. எந்தப் பெயர் வைத்துக் கொண்டாலும் திறமை இருந்தால் பெருமை அடையலாம்... tm5

  ReplyDelete
  Replies
  1. அது உண்மை தோழரே..

   Delete
 4. இஸ்லாமியர்கள் சிலர் பெயர் மாற்றியுள்ளார்களா?
  மத புத்தகத்தை பார்த்து பயந்து கொண்டிருக்காமல், தங்கள் விருப்பபடி தங்கள் பெயர்களை மாற்றிய அந்த சகோதரர்களுக்கு தலை வணங்குகிறேன்.
  பிறமத,மதம்சாரத மக்கள் போல் தாங்கள் விரும்பிய பெயர் மாற்றும் சுதந்திரம் இஸ்லாமியர்களுக்கு கிடையாது என்பதை நீங்க கவனத்தில் எடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. இன்று முன்னணியில் இருக்கும் திரைக்கலைஞர்களில் இசுலாமியர்களும் இருக்கிறார்கள் தோழரே..

   Delete
  2. வழமை போல இஸ்லாத்தைப் பற்றிய பிழையான புரிதல். இஸ்லாத்தை பொறுத்த வரை எந்த மொழியில் வேண்டுமானால் பெயரை வைத்துக்கொள்ளலாம். என்ன.. அப்பெயர் அதன் பொருள் அருவருக்கதக்க இருக்க கூடாது.

   Delete
 5. பிரபல பாடகர் நாகூர் ஹனிபாவை திரையிசை பாட அப்போதைய பிரபல இசையமைப்பாளர் அழைத்ததாகவும் " நாகூர் ஹனிபா" என்ற அவரது பிராண்ட் பெயரை மாற்ற ஆலோசனை சொன்னதாகவும் அதனை பாடகர் மறுத்துவிட்டு வெளியேறியதாகவும் எப்போதோ வாசித்த ஞாபகம்.

  பெயர் மாற்றம் சில நேரங்களில் நிர்பந்தமாக இப்படியும் நிகழ இருந்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நானும் கேள்விப்பட்டதுண்டு...இருக்கலாம் தோழரே..

   Delete
 6. //ஹிந்திப் படத்தின் தலைமையகம் மராட்டி பேசும் மாநிலத்தில் இருந்தாலும் அங்கே மராட்டிய நடிகர்களைக் காட்டிலும் இசுலாமிய நடிகர்களின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது.ஹிந்தி திரைத்துறையின் வசூல் சக்கரவர்த்தியாக இசுலாமியர்கள் இருக்கிறார்கள்.அதே சமயம் நாயகிகளும் தன் மதம் சார்ந்த பெயரையே வெளிக்கொணர்ந்து பிரபலமாகிறார்கள்.//

  --------->>>இதெல்லாம் இப்போதான்..! ஆனால் முன்பு..?

  தமிழில் எப்படி எம்ஜியாரோ, அப்படித்தான்.... ஹிந்திக்கு 'திலீப் குமார்'..!
  அவர் பெயர்....... முஹம்மத் யூசுஃப் கான்...!

  எல்லாம் இவர் ஆரம்பித்து வைத்ததுதான்..! காரணம் இவரின் பூர்வீகம்... பெஷாவார், பாகிஸ்தான்..! மொழி - பஷ்டு. பம்பாய் வந்து செட்டில் ஆனவர்கள்..!

  (கான் அப்துல் கஃப்பார்கானுக்கு நாம் பாரத்ரத்னா கொடுத்தது போல.... பாகிஸ்தானின் மிக உயரிய விருது ஒன்றை திலீப் குமாருக்கு தந்து இருந்தார்கள். மறு ஆண்டு கார்கில் போர் சமயம், அதை திருப்பி பாகிஸ்தானிடமே வீசி எரிய சொன்னார்... மும்பை சினிமாவுலகில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை தாதா பால் தாக்கரே..! ஆனால், திலீப் குமார்... கடுமையாக எதிர்ப்பு கூறி அப்படி செய்ய மறுத்து விட்டார். பால் தாக்கரே ஒரு கட்டளை இட்டு... அதை பிரஸ்மீட்டில் எதிர்த்து மறுத்த ஒரு நபர் மும்பை சினிமாவில் இன்றும் உயிரோடு உண்டு என்றால் அது திலீப் குமார்தான். அந்த அளவுக்கு பெரிய ஆளாகி இருந்தார்.)

  இவரைப்போலவே...
  அக்கால பிரபல ஹிந்தி நடிகைகள்... மதுபாலா, மீனா குமாரி... நடிகர் ஜானி வாக்கர்....முதல் இப்போதைய நடிகை தபு உட்பட... ஒரு நீண்ட 'நிக்நேம் லிஸ்ட்' உண்டு..!

  ஆனால்,
  'ஷோலே'யின் வில்லன் 'கப்பார் சிங்' அம்ஜத் அலி கான்... பிரபலமாகிவிட.... பிற்காலத்தில் ஹிந்தியில் இன்றைய பற்பல'கான்'கள் பிரபலமாக காரணமாகினார்..!

  எந்த அளவுக்கு.... எனில் அஜய்தேவ்'கான்' என்று நம்ம தமிழர்கள் எழுதும் அளவுக்கு..! :-)

  ReplyDelete
  Replies
  1. விரிவானதொரு விளக்கத்திற்கு நன்றி தோழரே..

   Delete
 7. கொண்ட கொள்கையும்
  ஆழ்ந்த தெளிவும்
  அயராத உழைப்புமே
  நம்மை எற்றுவிக்கும்..
  பெயர் மாற்றம்
  இதில் ஒரு உப்புக் கல்லும் பெறாது...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாய் தோழரே..

   Delete
 8. சகோ.மதுமதி,

  ///இந்தப் பெயர் மாற்றத்துக்கு கீழ்க்கண்ட காரணங்கள் இருக்கலாம் என்பது எனது கணிப்பு

  1.தனது மதம் என்னவென்று மற்ற இசுலாமியத் தோழமைக்களுக்குத் தெரியக் கூடாது.//---பிரபலம் அடைந்தால் நிச்சயம் தெரிந்துதான் ஆகும். முகம் காட்டிக்கொடுத்து விடும்.

  2.மதம் சார்ந்த பிரச்சனை என்றால் நாம் மதம் சார்ந்த பிரபலம் என்பதால் அதில் தலையிட வேண்டும்//---'நோ கமெண்ட்ஸ்' என்று சொல்பவர்களே 99.99% உள்ளனர்..! :-)

  3.இசுலாமியர் என அடையாளம் தெரிந்தால் மெஜாரிட்டியான இந்து மதத்தினர் ஒதுக்கி வைத்துவிடுவர்.//---இல்லை. அதீத தனித்திறமை இருந்தால் எதையும் சாதிக்கலாம். (உ-ம்‌) ஹிந்தி கான்கள், மலையாள நஸ்ருதீன் ஷா, மம்முட்டி, அப்புறம் நிறைய்ய நடிகைகள்...

  4.இசுலாமிய எனத் தெரிந்தால் திரைத்துறையில் வாய்ப்புகள் மறுக்கப்படும்.//---ஏ.ஆர்.ரஹ்மானை தூக்கி விட்டவர்களே... மணிரத்ணமும் பாலச்சந்தருமே..!
  ////

  என்னைப்போருத்த மட்டில்....
  உங்களின் மேற்படி அதே கணிப்பு காரணங்களால்... 'எங்கே நாம் வெற்றி அடையாமல் போய் விடுவோமோ' என்ற இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உள்ளவர்கள் செய்யும் வேலைதான் 'பெயர் மாற்றம்' என்பதே எனது கணிப்பு..!


  சினிமாவில் மட்டுமல்ல.... கடைகளுக்கு பெயர் வைப்பதில் கூட... வியாபாரத்துக்காக.... ஏதாவது பொதுவான பெயரைத்தான் பல முஸ்லீம்கள் தேர்ந்து எடுப்பார்கள். இதுபோன்ற காம்ப்ளக்ஸ் இல்லாதவர்கள் எங்கும் எவரிடத்திலும் சொந்த பெயரிலேயே தம் திறமையில் நம்பிக்கை இருந்தால்... நேர்மையாக ஜெயிக்கலாம்..!

  (உ-ம்)பால் தாக்கரேவின் ஃபேமிலி டாக்டர் ஒரு முஸ்லிமாம்..!
  அப்புறம் என்ன..? :-)

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் குறிப்பிட்ட காரணத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் தோழரே..
   கருத்தைப் பகிர்ந்து சென்றமைக்கு நன்றி..

   Delete
 9. அலுவலகத்தில் நிறைய இஸ்லாமிய தோழர்களுடன் பேசும் போது அவர்களுக்கு திரைப்பட துறையில் விருப்பமில்லை என்றே தெரிந்தது. ரம்ஜான் மாதத்தில் டி.வி.யை கூட பார்க்க மாட்டார்களாம்.ஒரு வேளை மத கட்டுபாடுகளால் அவர்களுக்கு திரைத்துறையில் ஈடுபாடு வராமல் போய்விட்டிருக்கலாம். எனினும்,கலைத்துறைக்கான ரசனை மதத்தால் தோன்றுவதில்லை. மனிதனுக்கு தோன்றுவது. ரசனையுள்ளவர்கள் வருகிறார்கள்.. பெயரை மாற்றிக் கொள்வது அவர்கள் சூழ் நிலையை பொறுத்துதான்..!

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com